Friday, June 24, 2011

2 ஜி ஊழல் : கலைஞர் டிவி கொடுத்த 200 கோடியில் விஜய் மல்லையா, இந்தியா சிமெண்ட்ஸுக்கு தொடர்பு : சி.பி.ஐ


 
டெல்லி : 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ஸ்வான் டெலிகாமிடமிருந்து 200 கோடி ரூபாய் கலைஞர் டி.விக்கு கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரித்து வருவதும் அதன் தொடர்ச்சியாக முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் ராஜா, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார், கலைஞர் டிவியின் பங்குதாரரும் கலைஞரின் மகளுமான கனிமொழி ஆகியோர் தில்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளது தெரிந்ததே.

ஸ்வான் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் கொடுத்ததற்கு லஞ்சமாகவே கலைஞர் டிவிக்கு 200 கோடி ரூபாய் ஸ்வானின் துணை நிறுவனங்களான குஸேகான் பழங்கள் & காய்கறிகள், மற்றும் சினியுக் பிலிம்ஸ் மூலமாக தரப்பட்டது என்பது தான் சி.பி.ஐ குற்றப்பத்திரிகையின் முக்கிய சாராம்சம். ஆனால் கலைஞர் டிவி தரப்பிலோ 200 கோடி ரூபாய் வணிக நோக்கில் கடனாக வாங்கியது என்றும் வட்டியுடன் சேர்த்து 214 கோடி திரும்ப செலுத்தப்பட்டது என்றும் வாதாடுகின்றனர்.
இச்சூழலில் மிக குறைந்த காலத்தில் எவ்வாறு 214 கோடி திரும்ப கொடுக்கப்பட்டது என்பது பற்றி சி.பி.ஐ விசாரித்து வருகிறது. 214 கோடி திரும்ப கொடுக்கப்பட்டதில் 4 நிறுவனங்களுக்கு பங்கு உள்ளதாகவும் அதில் இரண்டு நிறுவனங்கள் பிரபல சாராய அதிபர் விஜய் மல்லையாவின் யு.பி. குழுமமும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொருளாளரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸும் ஆகும் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக அந்நிறுவனங்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களோ தாங்கள் விளம்பரத்துக்காக கொடுத்த பணம் தான் என்றும் சிபிஐயின் கேள்விகளுக்கு பதிலளிக்க தயார் என்றும் கூறுகிறார்கள். கலைஞர் டிவிக்கு கொடுத்த 200 கோடி விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் திருப்பி கொடுக்கப்பட்ட பணத்திலும் நடந்துள்ள விவகாரங்கள் திமுகவுக்கு நிச்சயம் பின்னடைவையே ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...