உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்திலிருந்து எடுக்கும் பிரதமர் மோடியின் முடிவு பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. பாசிடிட்டிவ் மற்றும் நெகட்டிவ். ஆனால் இது புதுமையானது என்று சொல்ல முடியாது.
இந்தியாவில் இதற்கு முன்பு மூன்று முறை உயர் மதிப்பு நோட்டுகள் புழக்கத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. சுதந்திரத்திற்கு ஒரு வருடம் முன்பு ஜனவரி 1946ஆம் ஆண்டு ஆயிரம் ரூபாய் மற்றும் பத்தாயிரம் ரூ நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டன. பின்னர் 1954ல் மீண்டும் ஒரு முறை! இடையில் ஐயாயிரம் ரூ நோட்டு அடிக்கப்பட்டு அதுவும் எடுக்கப்பட்டது.
மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது ஜனவரி 1978ல் இதே நடவடிக்கை எடுத்தார்.
அன்று சாதாரண ஜனங்களுக்கு அது பெரிய விஷயமாகத் தெரியவில்லை. என் சம்பளமே ஆயிரத்திற்கும் கீழ் தான். ஐயாயிரம் பத்தாயிரம் ரூபாய் நோட்டை எல்லாம் கண்ணால் கூடப் பார்த்தது இல்லை.
அன்று டிவி கிடையாது. அரசு வானொலி தான். பத்திரிகைகள் மட்டுமே இது பற்றி எழுதின. அப்போது படித்த விபரங்கள் - என் நினைவிலிருந்து. வருடப் பிழையைத் தவிர்ப்பதற்காக இணையத்தின் துணையையும் பெற்று இருக்கிறேன்.
1978 ஜனவரி 14 அன்று ஆர்.ஜானகிராமன் என்ற ரிசர்வ் பேங்க் உயர் அதிகாரியை பம்பாயிலிரு ந்து டெல்லிக்கு வரும்படி டெலிபோன் மூலம் கூறப்பட்டது. அவர் தலைநகர் சென்று சேர்ந்ததும். உயர் மதிப்பு நோட்டுகளை அவசரச் சட்டம் மூலம் செல்லாததாக்கும் அரசு திட்டம் பற்றி அவரிடம் கூறப்பட்டது. பின்னர் மும்பைக்கும் டில்லிக்குமான உயர்மட்டத் தகவல் தொடர்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
ஏனென்றால் 1954ல் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டபோது வாஞ்சோ என்பவர் தலைமையில் ஒரு கமிட்டி போடப்பட்டு, அதன் அறிக்கைகள் வெளியாகி ரகசியம் லீக் ஆனதால் எதிர்பார்த்த பலன் ஏற்படவில்லை. எனவே மொரார்ஜி ரகசியம் காத்தார். அவசரச் சட்ட ஷரத்துகள் தயாராகி ஜனவரி 16 ஆம் தேதி அதிகாலை அன்றைய ஜனாதிபதி சஞ்சீவரெட்டி கையெழுத்து பெறப்பப்பட்டது. காலை ஒன்பது மணிக்கு ஆல் இந்தியா ரேடியோ செய்தி வாசித்த பிறகு தான் நாட்டு மக்களுக்கு விஷயம் தெரியும்.
அன்றைய ரிசர்வ் பேங்க் கவர்னர் ஐ.ஜி.படேல் மரார்ஜியின் முடிவை எதிர்த்தார். காங்கிரஸ் (இந்திராகாந்தி) குவித்து வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை முடிக்கும் நடவடிக்கை என்று விமர்சனம் எழுந்தது. பின்னாட்களில் அவர் Glimpses of Indian Economic Policy: an Insider’s View என்ற தலைப்பில் தன சுயசரிதை எழுதினார். அதில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செலாது என்று அறிவிக்கப்படும் முடிவுகள் உலகின் எந்த நாட்டில்லும் வெற்றியைத் தரவில்லை என்றும் கூறியுள்ளார். கறுப்புப் பணத்தை ரொக்கமாக சூட்கேசில் வைத்திருப்பார்கள் என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது என்று 1978லிலேயே அவர் கருதியிருக்கிறார். என்பது பெரிய ஆச்சர்யம். கறுப்புப் பணத்தை ரொக்கமாக வைத்திருப்பவர்களும் எப்படியாவது அதை நல்ல பணமாக மாற்றி விடுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இன்று நிலைமை இன்னும் விசித்திரமானது. 1978ல் பத்தாயிரம் ரூ நோட்டைக் கண்ணால் கூடப் பார்த்திராத சுப்பனும் குப்பனும் இன்று ஐநூறு ஆயிரம் ரூபாயில் தாராளமாகப் புழங்குகிறான்.
கறுப்புப் பணத்தைக் கோடிக்கணக்கில் வைத்திருக்கும் அதிகாரியும் அரசியல்வாதியும், டாக்டரும், வக்கீலும், வைர வியாபாரியும், தங்க வியாபாரியும் நேற்று. ஏ.டி.எம் வாசலிலும், ஹோட்டலிலும், பஸ் ஸ்டாண்டிலும் செய்வதறியாது நிற்கவில்லை. வரவிருக்கிற நாட்களிலும் அவர்கள் வங்கி வாசல்களில் காத்திருக்கப் போவதில்லை.
அன்றாடம் உழைத்துப் பிழைக்கிறவர்களும், ஐடி கம்பெனிகளில் தங்கள் ரத்தத்தை வியர்வையாகச் சிந்துபவர்களும் தான் புது நோட்டுகளைப் பெறக் க்யூ கட்டி நிற்பார்கள். பிரதமர் மோடியின் முடிவை நாட்டு நலனுக்காக ஏற்றுக்கொள்ளவும், அதனால் விளைந்த துனபங்க்ளைத் தாங்கிக் கொள்ளவும் கூட அவர்கள் தயாராக இருப்பார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பது நடக்கவில்லை என்றால் பொங்கி எழுவார்கள். நடுத்தர வர்க்கத்தின் எந்தக் கோபம் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தியதோ அதே கோபம் பாரதிய ஜனதாவையும் வீழ்த்தி விடும்.
மொரார்ஜி கதையும் அப்படித்தான் முடிந்தது. அவரும் (இன்றைய) குஜராத்தைச் சேர்ந்தவர் தான். அரசியல் எதிரியான இந்திராகாந்தியை வீழ்த்துவதற்கு இந்த உத்தியை அவர் பயன்படுத்தினார்.
நடுத்தர வர்க்கத்தின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்ததால் மீண்டும் இந்திராவே அரியணையில் அமர்ந்தார்.
இதெல்லாம் வரலாறு நமக்குச் சொல்லும் பாடம்.
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்
தீதின்றி வந்த பொருள்
என்கிறான் வள்ளுவன். தீதின்றி வரும் பொருளே இன்பம் தரும் என்ற மனப்பான்மை நம் நாட்டில் பழங்ககாலத்தில் இருந்தது.
அது இன்று இல்லாததே இவ்வளவு துயரங்களுக்கும் காரணம்.
No comments:
Post a Comment