சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரில் ஒருவர் பிரம்மா. பூவுலக வாசிகளின் தலைவிதியை மாற்றும் வல்லமை கொண்டவர் பிரம்மா. பிரம்மாவுக்கு குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே கோவில்கள் உள்ளன. அவற்றில் சிறப்பானது திருச்சி மாவட்டம் சிறுகனு}ரை அடுத்த திருப்பட்டூரில் அமைந்துள்ளது பிரம்மபுரீஸ்வரர் கோவிலாகும்.
கோவில் வரலாறு :
பிரம்மன் இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றிருந்தார். தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்கு கொடுத்தார். படைப்புத் தொழிலில் அனுபவம் பெற்ற பிரம்மன், தன்னையும், சிவனையும் ஒன்றாகக் கருதி ஆணவம் கொண்டார். அவருக்கு பாடம் புகட்ட விரும்பிய சிவன், ஐந்து தலை இருப்பதால் தானே அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய் எனக்கூறி, ஒரு தலையைக் கொய்து விட்டார். படைப்புத்தொழிலும் பறி போனது.
நான்முகனான பிரம்மா, இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார். அதற்கு சிவன் பூலோகத்தில் திருப்பட்டூர் என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும் துவாதசலிங்க வடிவில் இருக்கும் என்னை வணங்கினால், சாப விமோசனம் பெறுவாய் என்றார். மேலும், பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி, மீண்டும் படைப்புத்தொழிலை அருள்வதாகக் கூறினார். பிரம்மனும் அவ்வாறு செய்து சாபம் நீங்கப் பெற்றார். என்னை மகிழ்வித்த உன்னை வழிபடுகிறவர்களின் தீய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக என வரமும் கொடுத்தார். பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது.
No comments:
Post a Comment