'ராஜா சார் இசையில், ‘பூவே பூச்சூடவா’ படத்துக்குத்தான் முதலில் எனக்கு வாய்ஸ் டெஸ்ட் எடுத்தாங்க. ஆனா, அந்தப் படத்துக்கு முன்னாடியே ‘நீதானா அந்தக்குயில்’ படத்துல ஒரு பாடல் பாட வச்சார் ராஜா சார். அப்போ எனக்குப் பெரிசா கரெக்க்ஷன் எதுவும் சொல்லலை.
‘பூவே பூச்சூடவா’ படத்தில் பாடி முடிச்சதும், கன்ஸோலுக்குப் போனேன். ‘என்ன கரெக்ஷன்னு நான் சொல்ல மாட்டேன். நீயே கேட்டு, எங்கெங்க தப்பு பண்ணிருக்கேன்னு செல்ப் அனலைஸ் பண்ணு’னு சொல்லிட்டார். நானும் பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்டுட்டு, எங்கெல்லாம் தப்பு பண்ணிருக்கேன்னு எனக்கு பிடிபட்டதைச் சொல்லி, ‘கரெக்ஷன் பண்ணட்டுமா?னு கேட்டேன். ‘வேணாம், இந்தப் பாட்டு இப்படியே போகட்டும். இதையெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு, அடுத்தடுத்த பாடல்கள் பாடும்போது கவனமா இரு’னு சொன்னார்.
குரல்ல எக்ஸ்பிரஷன்ஸ் கொண்டு வர்றதுக்காக, ஜானகியம்மா பாடல்களை நிறைய கேட்கச் சொல்வார். ‘ராசாவே உன்னை நம்பி…’ பாட்டை ஜானகியம்மா பாடும்போது, ‘ஒண்ணுமே தெரியாத பொண்ணு பாடுற மாதிரி இருந்தா போதும்’னு சொல்லி, ட்யூன் மட்டும் சொல்லிக் கொடுத்திருக்கிறார் ராஜா சார். ‘அதை அவங்க எப்படிப் பாடியிருக்காங்கனு பார். அவங்களோட ஒவ்வொரு பாட்டும் இப்படித்தான், அதைத் தொடர்ச்சியா கேளு’னு அட்வைஸ் கொடுத்தார்.
‘சிந்து பைரவி’ படத்தில் பாடுவதற்காக என்னைக் கூப்பிட்டிருந்தாங்க. அந்த சமயத்துல நான் கேரளாவுல் இருந்தேன். எனக்கு எம்.ஏ.எக்ஸாம்ஸ் நடந்துக் கிட்டிருந்துச்சு. ‘ராஜா சார் பாட்டை மிஸ் பண்ணிடக்கூடாது’னு சொல்லி, அப்பா எனனைக் கூட்டிட்டு வந்தார். பாட்டப் பாடிட்டு, அன்னைக்கு இரவே கேரளா திரும்பணும். அந்தப் பாடல் பதிவு முடிஞ்சதும், ‘இன்னொரு பாட்டு பாடணும். நாளைக்கும் இங்கேயே இருக்க முடியுமா?னு ராஜா சார் கேட்டார். மறுநாள் எக்ஸாம் இருக்கும் விஷயத்தை, ரொம்ப தயங்கித் தயங்கி ராஜா சார்கிட்டே அப்பா சொன்னதும், ‘எம்.ஏ.லாம் அப்புறம் பண்ணிக்கலாம். அதுக்கும் மேல வரப்போறா’’னு ராஜா சார் சொன்னார். ஒரே குழப்பம் ‘படிப்பு விஷயாமாச்சே’னு அம்மா தயங்கினாங்க. ‘சரி, லேட்டா எக்ஸாம் எழுதிக்கலாம்’னு முடிவு பண்ணி, மறுநாள் தங்கியிருந்து அந்தப் பாட்டைப் பாடினேன். இன்னைக்கு வரைக்கும் அந்தப் பாடல்தான் எனக்கு பெரிய அட்ரஸா அமைஞ்சது. எங்கே போனாலும் இப்பவும் எல்லா மேடைகளிலும், ‘சிந்து பைரவி’யில் வர்ற ‘பாடறியேன் படிப்பறியேன்…’ பாட்டைப் பாடச் சொல்லிக் கேட்கறாங்க. இன்னைக்கு ஒரு பாடகியா நான் நாலுபேருக்குத் தெரியுறேன்னா, அதுக்கு ராஜா சார்தான் காரணம். அவருக்கு நான் ரொம்பவே நன்றிக்கடன் பட்டிருக்கேன்’ என கண்கள் நெகிழ்ச்சியில் மிதக்க சொல்கிறார் சித்ரா....
No comments:
Post a Comment