Thursday, November 24, 2016

'கிராமங்களில் தான் இந்தியா வாழ்கிறது...'



ஏம்ப்பா டிரைவர்... வண்டி ரெடியா... இன்னைக்கு பல்லடம் ஏரியா போகணும்,'' என்றார், வங்கி மேலாளர் பாஸ்கரன்.
''போலாம் சார்,'' என்று டிரைவர் கூறியதும், ''லோன் ஆபீசரையும், அசிஸ்டென்ட் கிருஷ்ணனையும் வரச் சொல்,'' என்றார்.
அவர்கள் இருவரும் வர, நால்வரும் காரில் ஏறி கிளம்பினர். திருப்பூர் - பல்லடம் சாலையில் விரைந்தது, கார்.
அசிஸ்டென்ட் கிருஷ்ணனிடம், ''அந்த பைலை பாத்து வரிசையா, அட்ரஸ் சொல்லுங்க; ஒவ்வொருத்தரா போய் பார்த்து, 'இன்பார்ம்' செய்துடலாம். நமக்கு, ஒரு மாசம் தான் டைம் இருக்கு. 'இயர் எண்டிங்' முடியறதுக்குள்ளே, ஹெட் ஆபீசுக்கு, 'லோன் ரிக்கவரி ஸ்டேட்மென்ட்' தயார் செய்திடணும்,'' என்றார் மேனேஜர்.
தன் கையிலிருந்த பைலை பார்த்து, ''சார்... இந்த ஏரியாவிலே, 40 'கிளையன்ட்ஸ்' இருக்காங்க; ஒரே நாள்ல, எல்லாரையும் சந்திக்க முடியும்ன்னு தோணல,'' என்றார் கிருஷ்ணன்.
''முடிஞ்ச வரைக்கும் பாக்கலாம்; 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல, 'டியூ' இருக்கிற, 'கிளையன்ட்ஸ்' யார் யார்ன்னு சொல்லுங்க,'' என்றார் மேனேஜர்.
பைலை புரட்டிய கிருஷ்ணன், ''சார்... நாம நேரா வதம்பச்சேரி போலாம்; அந்த, வழியில இருக்கற கிராமங்கள்ல, 12 லட்சம் ரூபாய் வரைக்கும் கடன் வர வேண்டியிருக்கு,'' என்றார்.
டிரைவர் பக்கம் திரும்பி, ''ஏம்ப்பா... உனக்கு அந்த வழி தெரியுமா?'' என்று கேட்டார், மேனேஜர்.
''தெரியும் சார்... பல்லடம் - திருச்சி நாலு வழிச் சாலையில, 'சிக்னல்' வரும்; அதுல, வலது பக்கம் திரும்பி, 10 கி.மீ., தூரம் போகணும்,'' என்றார் டிரைவர்.
அரை மணி நேர பயணத்திற்கு பின், கார், பல்லடம் - வதம்பச்சேரி சாலையில் சென்றது.
''சார்... இங்க பெரும்பாலும், தோட்டத்துக்குள் இருக்கிற வீடுக்களில் தான் மக்கள் குடியிருக்காங்க; நாம, முதல்ல யார் தோட்டத்துக்கு போகணும்?'' என்று கேட்டார் டிரைவர்.
பைலை பார்த்து, ''சார்... இந்த, 'லிஸ்ட்'ல முதல் பேர், செங்கோடர், த/பெ., சென்னியப்பர், எறங்காட்டுத் தோட்டம்ன்னு போட்டிருக்கு; அது எங்கயிருக்குன்னு விசாரிக்கிறேன்,'' என்று சொல்லி, காரை விட்டு, கீழே இறங்கி நின்றார், கிருஷ்ணன்.
காலை, 11:00 மணி வெயில் முகத்தில், 'சுள்' என்று உறைத்தது. சாலையின் இருபுறமும் இருந்த தோட்டங்களில் வேலைகளில் மூழ்கியிருந்தனர், ஆட்கள்.
கிருஷ்ணனை பார்த்ததும், வேலை செய்வதை நிறுத்தி, அவர் அருகில் வந்து, ''ஏனுங்க... இங்க ஏன் நிக்கிறீங்கோ, யாரெப் பாக்கோணுமுங்க...'' என்று வினவினாள், ஒரு பெண்.
''எறங்காட்டுத் தோட்டம், செங்கோடர பாக்க வந்திருக்கோம்,'' என்றார் கிருஷ்ணனர்.
''எதுக்கோசரம் அவரப் பாக்கோணும்ங்கோ...''
''நாங்க திருப்பூர் பேங்க்ல இருந்து வர்றோம். செங்கோடர் வீட்டுக்கு எப்படி போகணும்...'' என்று டிரைவர் கேட்டதும், அவர்களை மேலும், கீழும் பார்த்து, பின் சிறு தயக்கத்துடன், ''நேரா தெக்கால போயி, அந்த முக்கு திரும்பினா, ஓட்டு வீடு இருக்குமுங்கோ. அங்கயிருந்து மேக்கால போற தடத்தில போனா, நேரா அவிங்க வீடு தான். பிளசர்லயே போலாமுங்கோ,'' என்றாள், அப்பெண்.
''சரிம்மா... நாங்க வர்றோம்,'' என்றபடி, காரில் ஏறினார் கிருஷ்ணன்.
தோட்டத்தில் வேலை செய்யும் பெண்கள், கார் போவதை பார்த்தபடி தங்களுக்குள், 'குசுகுசு' என்று பேசினர்.
செங்கோடரின் தோட்டத்திற்குள் கார் நுழைந்ததும், நான்கைந்து நாய்கள் ஓடிவந்து, அவர்களை காரை விட்டு இறங்க விடாமல், குரைத்தன. சத்தம் கேட்டு, வீட்டுக்குள்ளிருந்து எட்டிப் பார்த்த செங்கோடன், ஆறடி உயரத்தில், 80 வயதிலும், திடகாத்திரமான தோற்றத்துடன் காணப்பட்டார்.
வலது கையை, கண்களின் மேல் குறுக்காக வைத்து உற்றுப் பார்த்தவர், திரும்பி, ''ஏ சுப்பாத்தா... ஆரு வந்திருக்காங்கன்னு தெரியல; சித்த வந்து பாரு,'' என்றார்.
மனைவி சுப்பாத்தா வேகமாக வந்து, நாய்களை விரட்ட முயன்றாள்; நாய்கள் விடாமல் குரைக்கவே, ''அட கெரகம்... சும்மா எதுக்கு, இப்பிடி ஓரியாட்டம் போட்றீங்கோ... பேசாம அக்கட்டால போங்கோ...'' என்றவாறு குனிந்து, கற்களை எடுத்து வீசி, நாய்களை விரட்டினாள். திரும்பி கணவரை பார்த்து, ''ஏனுங்கோ... சித்த இப்பிடி வந்து இதுகளை வளைச்சு, முடுக்கி உடுங்கோ. ஒரே முட்டா ரவுசு செய்யுது,'' என்றவுடன், கார் அருகில் வந்தார், செங்கோடர்.
காரின் கண்ணாடியை இறக்கிய டிரைவர், ''அய்யா... நாங்க திருப்பூர் பேங்க்லருந்து வர்றோம்,'' என்றதும், உடனே செங்கோடரும், அவர் மனைவியும் வணங்கி, ''ஓ அப்பிடீங்களா... கீழே இறங்கி வாங்கோ; ஊட்டுக்கு உள்ளார போயி பேசலாமுங்கோ,'' என்றபடி, முன்னால் நடந்தார் செங்கோடர்.
காரில் டிரைவர் அமர்ந்து கொள்ள, மற்ற மூவரும், ஓரக் கண்களால் நாய்களை நோட்டமிட்டபடியே, செங்கோடரை பின் தொடர்ந்தனர்.
அவர்களை மர பெஞ்சில் அமரச் சொன்ன செங்கோடர், ''நல்ல வெயில்ல வந்திருக்கீங்கோ; முதல்ல, கொஞ்சம் தண்ணி குடியுங்கோ,'' என்றவர், மனைவியைப் பார்க்க, அவள் உள்ளே சென்று, பெரிய லோட்டாவில், தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
''ஏனுங்கோ சார்... கொஞ்சம் காபி தண்ணி கொண்டாரச் சொல்றேன்; சாப்பிடுங்க,'' என்று உபசரித்தார், செங்கோடர்.
''இல்லங்க பெரியவரே... வேணாம்,'' என மறுத்து, நேரே விஷயத்துக்கு வந்தார் மேனேஜர்...
''அய்யா... நீங்க எங்க பேங்க்ல டிராக்டர் லோன் வாங்கியிருக்கீங்க இல்லயா... அதுல பாக்கி இருக்கு; அதுக்கு தான் வந்திருக்கோம்,'' என்றவர், கிருஷ்ணனிடமிருந்து பைலை வாங்கிப் பார்த்து, ''எட்டு மாசமா நீங்க, 'டியூ' கட்டல; இன்னும், 80 ஆயிரம் ரூபாய் அசலும் அதுக்கு வட்டியும் இருக்கு. ஒரு வாரத்துக்குள்ள கட்டணும்,'' என்றார்.
முகத்தில் கவலை படிய, மனைவியை ஏறிட்டுப் பார்த்தார், செங்கோடர். அவள் கை கூப்பி, ''சார்... இந்த வருஷம் முச்சூடும் மழையே இல்லீங்கோ; தோட்டத்தில வெள்ளாமை ஒண்ணும் சொகமில்லீங்கோ; பண்டங் கண்ணுகளுக்கு (மாடு, கன்றுகளுக்கு) மேவுக்கே வௌயலீங்கோ; போட்ட முட்டுவளி கூட கைக்கு வரலீங்கோ; மருந்தடிச்சு, கூலி குடுத்து, வம்பாடு பட்டு, வெள்ளாமை எடுத்து வித்து, காசை கண்ணால பாக்கறதுக்குள்ளே, இடுப்பு, இரு துண்டமாயிருந்துங்கோ.
''இதுல, ஒரு கூடை தக்காளி, 20 ரூபாய்க்கு கேட்குறானுங்கோ சந்தையில... எப்பிடிங்கோ கட்டுவளியாகும்... இந்த லட்சணத்தில கிணத்தில தான் தண்ணியில்ல, போர் போட்டுப் பாக்கலாம்ன்னு, 400 அடிக்கு போர் போட்டும், தண்ணி வராம, அதுக்கு போட்ட காசும், பாழாப் போச்சுங்கோ. நாங்க என்ன தான் செய்றது சொல்லுங்கோ. நீங்க தான் பெரிய மனசு செய்யோணும். அடுத்த வருஷம், வெள்ளாமை எடுத்து, உங்க, லோன் பூரா கட்டீர்ரமுங்கோ,'' என்றாள் கண்ணீருடன்!
பெரியவரின் கண்களிலும் நீர் திரையிட்டது. அதை மறைத்து, கம்மிய குரலில், ''என்ன செய்றதுங்கோ சார்... குடியானவன் பாடு, திண்டாட்டமாவுல்ல இருக்குது. இங்க குடிக்கறதுக்கு கூட தண்ணியில்லாம, மேக்கால பக்கத்து தோட்டத்து கிணத்தில தண்ணி சேந்தி வர்ரமுங்கோ. இருந்த பண்டங் கண்ணுகளை வித்துப் போட்டணுங்கோ. டிராக்டர் கூட, சும்மா தான் நிக்குது. பக்கத்தூர்கள்ல எப்பவாச்சும் மழை வந்தா தான், டிராக்டரை, வாடகைக்கு கேப்பாங்கோ; அதுக்கு டீசல் போட்டு, டிரைவருக்கு கூலி குடுத்து ஓட்டுனா, என்ன கட்டுவளியாகும் சொல்லுங்கோ... ஒரு வருஷமாவே, சுத்தமா மழை இல்லீங்கோ. இதுல, நாங்க எங்கிருந்து லோன் கட்றது,'' என்றார் சோகத்துடன்!
''பெரியவரே... நீங்க ஏன் இத்தனை கஷ்டப்படுறீங்க; பசங்க யாரும் உங்கள பாக்கறதில்லயா...'' என்றார் மேனேஜர்.
''என்ற பையன், தோட்டத்திலே கூடமாட பண்ணயம் பாத்துட்டு இருந்தானுங்கோ. அவனுக்கும் கல்யாணமாயி, ரெண்டு குழந்தைங்க இருக்குதுங்கோ. ஒரு வருஷமாவே வெள்ளாமை இல்லாததால பொளப்புக்கு திருப்பூர்ல பனியன் கம்பெனிக்கு வேலைக்கு போறானுங்கோ. அவன் சம்சாரத்துக்கு, அங்கியே ஜின்னிங் தொழிற்சாலையில வேலைங்கோ. அவங்க வரும்படியில, அவிக குடும்பத்தை தாட்றதுக்கே பெரும்பாடு படோணுமுங்கோ...
''எங்க ரெண்டு பேத்தையும் திருப்பூருக்கே வந்துடுங்கன்னு கூப்பிட்டாங்கோ; ஆனா, நாங்க, 'உசுரு இருக்கற முட்டும், இந்த தோட்டத்தை உட்டுப் போட்டு வர மாட்டோம்'ன்னு, சொல்லி போட்டனுங்கோ... எத்தனை கஷ்டம் வந்தாலும், என்ற அப்பன், பாட்டன், முப்பாட்டன் பாடுபட்ட இந்த பூமியை உட்டுப் போட்டு போறதுக்கு, மனசு வருமுங்களா... நீங்களே சொல்லுங்கோ,'' என்றார், செங்கோடர்.
''பெரியவரே... நீங்க சொல்றத கேட்கும் போது, கஷ்டமாத் தான் இருக்குது; ஆனா, நாங்க என்ன செய்ய முடியும்... எங்க மேல் அதிகாரிங்க உத்தரவுப்படி, நாங்க எங்க கடமைய பாக்கணும் இல்லியா... அதனால, பத்து நாளைக்குள்ளே, 80 ஆயிரம் ரூபாயை ஏற்பாடு செய்து, பேங்க்ல கட்டிடுங்க; இல்லன்னா, நாங்க உங்க டிராக்டரை, 'ஜப்தி' செய்ய வேண்டியிருக்கும். அதோட, பேப்பர்ல, 'வாங்கிய கடனை, கட்டாதவர்'ன்னு, போட்டோவோட உங்க பேரு வரும். அப்புறம், எங்க பேர்ல வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்ல. போன மாசமே, ரெண்டு நோட்டீஸ் அனுப்பினோம்; நீங்க பதில் தரல. அதான், நேர்லயே வந்தோம். பாத்து பணத்துக்கு ஏற்பாடு செய்யுங்க; நாங்க வர்றோம்,'' என்று மேனேஜர் கூறவும், மற்றவர்களும் புறப்பட்டனர்.
இரண்டு நாட்களுக்கு பின், தன் அறையில், உதவியாளர்களுடன், 'டிஸ்கஷனில்' இருந்தார் மேனேஜர். பியூன் உள்ளே வந்து, ''சார்... உங்கள பாக்க ஒரு பெரியவரும், அவர் சம்சாரமும் வந்திருக்காங்க,'' என்றார்.
''என்ன விஷயமாய் வந்திருக்காங்கன்னு விசாரிச்சு, அசிஸ்டென்ட் மேனேஜரை பாக்கச் சொல்லு,'' என்றார் மேனேஜர்.
''நான் கேட்டேன் சார்... உங்கள தான் பாக்கணும்கிறாங்க,'' என்று கூற, ''சரி... அவங்கள, பத்து நிமிஷம் காத்திருக்கச் சொல்; மீட்டிங் முடிஞ்சதும் கூப்பிடறேன்,'' என்று சொல்லி, 'டிஸ்கஷனில்' மூழ்கினார்.
அரை மணி நேரத்திற்கு பின், மீட்டிங் முடிந்து, அதிகாரிகள் வெளியேற, பியூனை அழைத்த மேனேஜர், வந்திருந்தவர்களை உள்ளே அனுப்புமாறு பணித்தார்.
அறைக்குள் நுழைந்த செங்கோடரையும், அவரது மனைவியையும் ஆச்சரியமாக பார்த்து, ''வாங்க பெரியவரே, வாங்கம்மா,'' என்று வரவேற்று, எதிரே இருந்த நாற்காலியில் அமரும்படி கூறினார். இருவரும், பவ்யமாய் கை கூப்பியபடி, தயங்கி நின்றனர். சுப்பம்மாளின் கையில், மஞ்சள் பை இருந்தது.
அவர்களை ஏறிட்டுப் பார்த்த மேனேஜர், ''சொல்லுங்கய்யா என்ன விஷயம்...'' என்றார்.
கையிலிருந்த மஞ்சள் பையை பிரித்து, ரூபாய் நோட்டுக் கட்டுகளை எடுத்து மேஜை மேல் வைத்த சுப்பாத்தா, ''அய்யா... இதுல, 80 ஆயிரம் ரூவாய் இருக்குதுங்கோ,'' என்றாள்.
வியப்புடன் அவர்களை நோக்கிய மேனேஜர், ''எப்படி இவ்வளவு சீக்கிரம் பணத்த ஏற்பாடு செய்தீங்க... அடுத்த வருஷம் தான் கட்ட முடியும்ன்னு சொன்னீங்களே...'' என்று கேட்டார்.
''நீங்க தானே சொன்னீங்கோ... 'பணம் கட்டாட்டி, டிராக்டரை, 'ஜப்தி' செய்துருவோம்; பேப்பர்ல என் படத்தோட, கடங்காரன்னு பேரப் போடுவோம்'ன்னு! நீங்க வந்துட்டுப் போன பின், ஊர்க்காரங்க முச்சூடும் ஊட்டுக்கே வந்து விசாரிச்சிட்டுப் போனாங்கோ; எங்களுக்கு ரொம்ப அவமானமா போச்சு. நாளைக்கு ஊருக்குள்ளே தலை காட்ட முடியுமாங்கோ... 'செங்கோடன் பேங்க்ல வாங்குன கடனை கட்லியாமா, அதான், டிராக்டரை, 'ஜப்தி' செய்துட்டு போயிட்டாங்களாம். பேப்பர்ல வேற போட்டாப் புடிச்சு போட்டுருக்காங்க'ன்னு பேசுனா, எங்க மானம், மரியாதி போயிடுமில்லீங்கோ. அப்புறம் எங்க ஜாதி, சனம் எங்கள மதிப்பாங்களா...
''இத்தனை வருஷம், ஒரு குடியானவனா பொளச்ச பொழப்புக்கு, என்னங்கோ மரியாதி இருக்கு... கூழோ, கஞ்சியோ குடிச்சாலும், மரியாதையா பொளச்சோம். யாராச்சும் ஒரு சொல்லு, எங்கள பாத்து பேசிப் போட்டா, எங்களால தாங்க முடியாதுங்கோ; அதனால தான், என் மனைவியோட நகை நட்டுகளை அடகு வச்சு, 80 ஆயிரம் ரூபா கொண்டாந்தமுங்கோ. சரியா இருக்குதான்னு எண்ணிப் பாத்து, ரசீது போட்டுக் குடுங்கோ,'' என்று, 'படபட'வென பேசினார் செங்கோடர்.
அப்போது தான், சுப்பாத்தாளை உற்றுப் பார்த்தார், மேனேஜர். அவளது கழுத்தில் மஞ்சள் கயிறும், கைகளில் கண்ணாடி வளையல்களும் இருந்தன. சிறிது நேரம் அவருக்கு பேச, நா எழவில்லை. பல்லாயிரம் கோடி கடன் வாங்கி, அரசை ஏமாற்றி, கண்ணாமூச்சி ஆடும் சிலர், அவர் நினைவுக்கு வந்தனர். ஏழை விவசாயியாக இருந்த போதிலும் அவரது பண்பும், உயர் குணமும், அவரை மெய்சிலிர்க்க வைத்தன.
அப்போது உள்ளே வந்த பியூன், ''சார்... உங்கள பாக்க, மில் ஓனர் ஆறுமுகம் வந்திருக்கார்; உள்ளே அனுப்பவா...'' என்று கேட்க, ''அடடே ஆறுமுகமா... உடனே அனுப்பு,'' என்றார் பதறி!
பேங்கின் முக்கிய கிளையன்ட்; அவரது மில்லின், பல கோடி வரவு - செலவும், இந்த, 'பேங்க்' மூலமாகத் தான் நடக்கிறது.
சிறிது நேரத்தில், உள்ளே வந்த ஆறுமுகம், அங்கே அமர்ந்திருந்த செங்கோடரையும், அவர் மனைவியையும் பார்த்து, பவ்யமாக வணங்கினார்.
''என்ன சார்... உங்களுக்கு இவரைத் தெரியுமா?'' என்று வியப்புடன் கேட்டார், மேனேஜர்.
''என்னை வாழ வைத்தவரே இவர் தான் சார். இவரோட தோட்டத்தில் தான், எங்க அப்பா கூலி வேலை செய்தார். நான் ஸ்கூல்ல படிச்சப்போ நல்லா படிப்பேன்; ஆனா, வறுமையால, மேல படிக்க வசதியில்ல. இந்த சூழ்நிலையில, பண உதவி செய்து, என்னை காலேஜ் வரை, படிக்க வச்சதே இவர் தான். இப்ப, நான் தொழில் செஞ்சு, நல்ல நிலைக்கு வந்திருக்கேன்னா, அதுக்கு காரணம் அன்னைக்கு இவர் செஞ்ச உதவி. அதனால தான், என்னோட மில்லுக்கு, 'செங்கோடன் ஸ்பின்னிங் மில்ஸ்'ன்னு, இவர் பேரை வச்சிருக்கேன். ஆமாம்... இப்ப இவங்க எதுக்கு இங்க வந்திருக்காங்க...'' என்று கேட்டார், ஆறுமுகம்.
மேனேஜர் நடந்தவற்றைக் கூறியதும், ''சார்... அந்தப் பணத்தை, அவங்கிட்டேயே திருப்பிக் கொடுத்துடுங்க; அவங்க கட்ட வேண்டிய முழு பணத்தையும், நானே தர்றேன். இது, நான் அவங்களுக்கு செலுத்தற நன்றிக் கடன்,'' என்று கூறி, தன், 'செக்' புக்கை எடுத்தார்.
அதை மறுத்த செங்கோடர், ''ஆறுமுகம்... இப்ப, நீ, என் பேங்க் கடனை அடைச்சிடுவே; அதுக்கப்புறம் நான், உனக்கு கடன்காரனாயிடுவேன். உங்கிட்ட எந்த உதவியையும் எதிர்பார்த்து, அந்தக் காலத்துல, நான், உனக்கு உதவி செய்யல. நீ நல்லா இருக்கறத பாக்கறது தான், எனக்கு சந்தோஷம். நான் பட்ட கடனை, நானே அடைக்கறது தான் முறை. தப்பா எடுத்துக்காதப்பா,'' என்றவர், தான் செலுத்திய பணத்திற்கு ரசீது வாங்கி, மனைவியுடன் வெளியேறினார்.
'கிராமங்களில் தான் இந்தியா வாழ்கிறது...' என்ற காந்திஜியின் வாக்கு, நிதர்சனமான உண்மை என்பதை எண்ணிப் பார்த்த மேனேஜர், ஆறுமுகத்திடம், ''இந்த மாதிரி ஒரு சிலர் இருப்பதால் தான், நாட்டில, அப்பப்பவாவது மழை பெய்யுது,'' என்று கூறி, நெகிழ்ச்சியில் கலங்கிய விழிகளை, துடைத்தார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...