போன வாரத்தை விட சற்று கூட்டம் குறைவு தான்.
வரிசையில் நின்று கொண்டிருந்த போது அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அல்மேனியா என்று உலக வரலாறை வரிசையில் முன்னும், பின்னும் நின்று கொண்டிருந்தவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“எத்தனை வயசானவங்க, நோயாளிங்க, அவசரத் தேவைக்கு பணம் தேவைப்படுறவங்கன்னு இருப்பாங்க? எத்தனை நேரம் வரிசையிலே காத்து நிற்கிறதாம்?” என்று சபித்துக் கொண்டிருந்தார்கள்.
கிட்டத்தட்ட அரைமணி நேரமாக வரிசையில் நின்று கொண்டிருந்த எனக்கு முன்பு ஆறு பேர் இருந்தார்கள். பின்னால் எட்டு பேர் இருந்தார்கள்.
அப்போது வயதான பாட்டி ஒருவர் அங்கே வந்தார். நான் அந்தப் பாட்டியை முன்னால் சென்று பணம் வாங்கிக் கொள்ளச் சொன்னேன். அவ்வளவு தான்... முன்னால் நின்றவர்களும் சரி.. பின்னால் நின்றவர்களும் சரி.. என் மீது கொலைவெறிப் பாய்ச்சல் பாய ஆரம்பித்தார்கள்.
“தனி க்யூவெல்லாம் கிடையாது. வரிசையிலே தான் வரணும்” என்றெல்லாம் சட்டம் பேச ஆரம்பித்தார்கள்.
இவர்கள் உதாரணம் காட்டிய அமெரிக்காவிலெல்லாம் அப்படித்தான் போல?
மனிதாபிமானம் வேண்டாமா?
நான் அந்தப் பாட்டியை நான் நின்ற இடத்தில் நிற்கச் சொல்லி விட்டு வரிசையின் கடைசியில் போய் நான் நின்றுக் கொண்டேன். ”எனக்காக நீ ஏம்ப்பா சிரமப்படணும்?” என்று அந்தப் பாட்டி ரொம்பவே மறுத்து விட்டார். ஆனாலும் வற்புறுத்தி அவரை என் இடத்தில் நிற்க வைத்து விட்டு நான் வரிசையின் கடைசியில் போய் நின்று கொண்டேன். வரிசையில் நின்று கொண்டிருந்த பலரும் வேறு பக்கமாக திரும்பி எதையோ பார்த்துக் கொண்டிப்பதைப் போல பாவ்லா காட்டிக் கொண்டிருந்தார்கள்.
இதைப் பார்த்துக் கொண்டு நின்ற வரிசையில் மூன்றாவதாக நின்ற நபர் என்னிடம் வந்தார். “சார்.. நீங்க என் இடத்தில் போய் நின்னுக்குங்க" என்றார். நான் மறுத்தும் அவர் கேட்கவில்லை.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வங்கி ஊழியர் அந்தப் பாட்டியைக் கூப்பிட்டு அவருக்கு முதலில் பணத்தை மாற்றிக் கொடுத்து அனுப்பினார்.
வரிசையில் நின்றிருந்த அமெரிக்க வரலாற்றுப் பார்ட்டி எதுவுமே நடக்காதது போல பிரதமரையும், இந்திய நாட்டையும் வசைபாடுவதைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.
No comments:
Post a Comment