துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன காரணம்?
எவனோ குதிரைக்காரனாம்! அவனிடம் இருந்த குதிரைகளை விலை பேசினார்களாம் இவரின் சகோதரர்கள். ஆனால் அவனோ ‘குதிரைகளுக்கு விலையாகப் பொன்-பொருள் எதுவும் வேண்டாம். எனது கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதும். அதே நேரம்… சரியான பதிலைச் சொல்லாவிட்டால், நான் போடும் வட்டங்களுக்குள் நீங்கள் அடைபட வேண்டும்’ என்று நிபந்தனை விதித்தானாம்! இதற்கு ஒப்புக் கொண்ட தருமரின் சகோதரர்கள் நால்வரும் சரியான பதில் சொல்லத் தெரியாமல், அவனிடம் சிக்கிக் கொண்டனராம்!
_ சேவகன் ஒருவன் மூலம் தகவல் அறிந்த தருமர் பதைபதைத்துப் போனார்; சகோதரர்களை மீட்பதற்கு விரைந்தார்!
அரண்மனை வாயிலில், நிபந்தனை வட்டங்களுக்குள் பரிதாபமாக நிற்கும் சகோதரர்களைக் கண்டு மனம் கலங்கினார் தருமர். தன் சகோதரர்களை விடுவிக்குமாறு குதிரைக்காரனிடம் வேண்டினார்.
அவனோ, ”எனது நான்கு கேள்விகளுக்கு பதில் கூறினால், தங்களது சகோதரர்களை விடுவிக்கிறேன்!” என்றான். தருமரும் ஒப்புக் கொண்டார்.
குதிரைக்காரன் முதல் கேள்வியைக் கேட்டான்: ”இந்தக் குதிரையை ஓட்டி வரும் வழியில், பெரிய கிணறு ஒன்றைக் கண்டேன். அதன் விளிம்பில் காசு ஒன்று தொங்கியது. அந்தக் காசைப் பற்றியபடி மிகப் பெரிய குன்று (மலை) ஒன்று தொங்கியது. என்ன அதிசயம்… இத்தனை பளுவிலும் காசு கிணற்றுக்குள் விழவில்லை. எப்படி?”
உடனே தருமர், ”கலிகாலம் வந்து விட்டதன் அடையாளம் இது. மக்கள் அறநெறிகளில் இருந்து விலகுவார்கள். சிறிய காசு அளவுக்கே தர்மம் செய்வர். பெரிய மலையளவு பாவச் செயல்கள் புரிவர். காலப்போக்கில் அவர்கள் சிறிதளவே செய்த தர்மத்தின் பலனும் நசிந்து போகும். அப்போது, மலையளவு பாவச் சுமையை சுமந்தபடி நரகில் விழுந்து உழல்வர்!” என்றார்.
”மிகச் சரியான பதில்!” என்ற குதிரைக்காரனின் முகத்தில் பிரகாசம். பீமனை விடுவித்தவன், 2-வது கேள்வியைக் கேட்டான்: ”வழியில் ஐந்து கிணறுகளைப் பார்த்தேன். நடுவில் ஒன்றும் அதைச் சுற்றி நான்குமாக அமைந்திருந்த அந்தக் கிணறுகளில் நீர் பொங்கி வழிந்தது. மற்ற நான்கு கிணறுகளில் நீர் குறைந்தால், நடுவில் இருக்கும் கிணறு தன்னிடம் உள்ள நீரால் அந்தக் கிணறுகளை நிரப்பும். ஆனால் நடுவில் இருக்கும் கிணற்றில் நீர் குறைந்தால், மற்றக் கிணறுகள் நீர் கொடுக்காது. இதன் பொருள் என்ன?”
சற்று யோசித்த தருமர், ”இதுவும் கலியின் கோலமே! நடுவில் உள்ள கிணறு தந்தை. சுற்றி இருக்கும் கிணறுகள் மகன்களைக் குறிக்கும். மகன்களைப் பாடுபட்டுக் காப்பாற்றுவார் தந்தை. ஆனால், தந்தை தளர்வுற்ற பிறகு, மகன்கள் அவரை புறக்கணிப்பர். இதையே, அந்த ஐந்து கிணறுகளும் உணர்த்துகின்றன!” என்றார்.
இந்த பதிலும் குதிரைக்காரனுக்குத் திருப்தியளித்தது. எனவே, இப்போது அர்ஜுனனை விடுவித்தான்.
அடுத்து 3-வது கேள்வியைக் கேட்டான். ”ஓரிடத்தில் குதிரையை அவிழ்த்து வைத்து விட்டு இளைப்பாறி னேன். அப்போது… பசுமாடு, கன்றிடம் பால் குடிக்கும் அதிசயத்தைக் கண்டேன். இதன் கருத்து?”
இதைக் கேட்டதும் தருமரின் கண்களில் நீர் வழிந்தது. வருத்தத்துடன் அவர் கூறினார்: ”கலி யுகத்தில் பெற்றோர் செய் யும் இழிச் செயல் இது! ஒரு குழந்தை பிறந்தால்… அதைக் காரணம் கூறி, உற்றார்- உறவினர்களிடம் பணம் பறிப்பர். இன்னும் சிலர், காசுக்காக குழந்தையைத் தகாதவர்களிடம் விற்பார்கள். நீ கண்ட காட்சி, இந்த அவலத்தையே உணர்த்துகிறது!”
”அருமையான விளக்கம்!” என்றபடி நகுலனை விடுவித்த குதிரைக்காரன், ”வழியில் மற்றோர் இடத்தில் சற்று கண்ணயர்ந்தேன். திடீரென ஏதோ சத்தம். விழித்துப் பார்த்தால், எதிரே விசித்திர
மான ஒரு மிருகம்! கேட்க சகிக்காத இழிச் சொற் களைக் கூறிக் கொண்டிருந்த அந்த மிருகம், மலத் துவாரம் வழியே உணவு உட்கொண்டது! இந்த விபரீதம் உணர்த்துவது என்ன?” என்று தனது கடைசிக் கேள்வியையும் கேட்டான்.
இதைக் கேட்டதும் குதிரைக்காரனாக வந்திருப் பது கலி புருஷனே என்பதை உணர்ந்து கொண் டார் தருமர்.
”குதிரைக்காரனாக வந்திருக்கும் கலிபுருஷனே! மகா பாவியான உன் கண்ணில் இதுபோன்ற விபரீத காட்சிகள் தென்பட்டதில் வியப்பு இல்லை. இனி இந்த உலகில் உனது ஆட்சிதான்! தர்மத்தின் வேர் அறுபடும். இலக்கியவாதிகள் அறநெறியைப் புறக்கணிப்பர்; புரட்சி, முற்போக்குச் சிந்தனை என்று பேசி மக்களது நல்வாழ்வை நாசமாக்குவர். பொய், களவு, வஞ்ச கம், கொலை… என்று பாதகங்கள் பெருகும்.
பேராசையும், பொறாமையும், போர் வெறியும் தலை விரித்தாடும்! வேதியர்களும் ஒழுக்க நெறி யில் இருந்து விலகி நிற்பர். ஆசிரம தர்மங்கள் சீர் குலையும். மழை பொய்க்கும். பஞ்சமும் வறுமையும் பெருகும். கொடிய நோய்கள் பரவும். அரசர்கள், வேத வல்லுநர்களை இகழ்ந்து பேசுவர்” என்று வேதனையுடன் தழுதழுத்த தருமர், ”ஐயோ போதும் இந்த வாழ்க்கை” என்று கண்ணீர் விட்டார்.
அவரை வணங்கிய கலிபுருஷன், ”தர்மாத்மாவே! உங்கள் ஆட்சி நடைபெறும் வரை நான் இங்கு வர மாட்டேன். ஆனால், தங்களது ஆட்சி முடிவுற்றதும் நான் வந்தே தீர
வேண்டும். வேறு வழியில்லை” என்றவன் சகாதேவனையும் விடுவித்தான். பிறகு, மீண்டும் தருமரை வணங்கி விட்டு, அங்கிருந்து மறைந்தான்!
No comments:
Post a Comment