சிவபெருமானின் அம்சமான ஆஞ்சநேயர் ஒரு பிரம்மச்சாரி மட்டுமல்ல ஒரு சிரஞ்சீவியும் ஆவார்.
ஆஞ்சநேயரின் வடிவங்களில் பல உண்டு. அவையாவன:-
பால ஆஞ்சநேயர், சஞ்சீவிராய ஆஞ்சநேயர், ராமபக்த ஆஞ்சநேயர், தியான ஆஞ்சநேயர், பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் பல.
பிரம்மச்சாரியான அனுமனை வீட்டில் வைத்து வழிபாடு செய்வதில் நம்மில் அனைவருக்கும் பல வித சந்தேகங்கள் உண்டு. ராமபிரானின் பக்தனான அனுமனை வழிபடுவதில் உள்ள சந்தேகங்களை போக்கிடவே இந்த பதிவினை எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்ட வடிவங்களை நாம் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். சிலர் ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து வழிபாடு செய்யக்கூடாது என்று சொல்வதுண்டு. ஏனெனில் பிரம்மச்சாரியான ஆஞ்சநேயரை வழிபாடு செய்பவரும் திருமணம் ஆகாமல் பிரம்மச்சாரியாகவே இருந்து விடுவார் என்ற மூடநம்பிக்கை பரவி இருப்பதே இதற்கு காரணம் ஆகும்.
ஆனால் உண்மையில் அனுமன் ராமபிரானின் பக்தன் மட்டுமல்லாமல் ராமனின் உற்ற நண்பரும் ஆவார். சுந்தர காண்டத்தின் கதாநாயகன் அனுமன் இல்லாமல் ராமாயணம் ஏது? பிரிந்து கிடந்த ராமன் மற்றும் சீதையை மீண்டும் ஒன்று சேர்த்தவர் வாயு புத்திரனான ஆஞ்சநேயரே ஆவார். இந்திரஜித்தின் நாகாஸ்திரத்தினால் உயிருக்கு போராடிய லட்சுமணனை சஞ்சீவி மூலிகையை கொண்டு வந்து உயிர்ப்பித்தவரும் ஆஞ்சநேயரே. தமது நண்பன் சுக்ரீவனுக்கும் நல்வழி காட்டியவர் ஆஞ்சநேயரே.
நம் வீடுகளில் இருக்க வேண்டிய மூர்த்திகளில் ஆஞ்சநேயரும் ஒருவர். பஞ்சமுக ஆஞ்சநேயரே வீட்டில் வைத்து வழிபாடு செய்யத் தக்கவர். ஆஞ்சநேயரின் வடிவங்களில் சஞ்சீவிராய ஆஞ்சநேயரே மிகவும் வலிமை மிக்கவர். இத்தகைய ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து வணங்கும் போது கட்டாயம் ராமபிரானின் படம் இருக்க வேண்டும்.
வழிபாடு செய்யும் காலத்தில் ராம நாமத்தினை நாம் செபம் செய்ய வேண்டும். நமது அனைத்து விதமான கோரிக்கைகளையும் அவரிடம் வைத்து வணங்க வேண்டும். கோரிக்கைகள் ஏதுமில்லாமல் ஆஞ்சநேயரை வழிபாடு செய்யக்கூடாது. அவ்வாறு கோரிக்கை இல்லாமல் செய்யும் வழிபாட்டால் வழிபாடு செய்பவர் ஆஞ்சநேயர் போல் பிரம்மச்சாரியாகவே இருந்து விட வாய்ப்புண்டு. எனவே அனுமனிடம் திருமணத் தடை நீக்குமாறு வேண்டுவது உத்தமம்.
ஆஞ்சநேயரிடம் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேறும். மேலும் இந்த பூவுலகில் ராமனை துதிக்கும் மக்களின் துதியை கேட்பதற்காகவே ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக வாழ்ந்து மக்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம
No comments:
Post a Comment