Monday, January 29, 2018

புரை தீர்ந்த நன்மை பயக்குமென்றால் பொய்மையும் வாய்மை இடத்தில் தானே?

மகாபாரதத்தில் இந்தக் காட்சியைப் பாருங்கள். குருஷேத்திரப் போர் மிகவும் கடுமையாக நடந்து கொண்டிருந்த நேரம். துரோணாச்சாரியார் பொழிந்த அம்புகளின் மழையில், பாண்டவர்களின் படைகளுக்குப் பலத்த சேதம்! துரியோதனனுக்கும் கவுரவர்களுக்கும் கை ஓங்கும் நிலை! துரோணர் ஒருவராகவே, பாண்டவப் படைகளின் பாதி பலத்தைக் குறைத்து விடுவார் என்கிற ஆபத்தான கட்டம்!
இதைப் பார்த்த கிருஷ்ணர் யோசித்தார். உடனே பீமனிடம் சென்றார். `பீமா! நம் படைகளை அசுவத்தாமன் என்ற கவுரவர்களின் யானை அடித்து நொறுக்குகிறது பார். அதன் தலையை உன் கதையால் பிளந்து விடு' எனக் கட்டளையிட்டார்.
பராக்கிரமசாலியான பீமன் யானையின் தலையில் தன் கதையால் பறந்து, பறந்து அடிக்க அசுவத்தாமன் சுருண்டு உயிரை விட்டது!
கிருஷ்ணர் இப்போது தர்மரிடம் வந்தார். ‘நம் படைகளை வதம் செய்த அசுவத்தாமன் என்ற யானையை பீமன் கொன்று விட்டான். அசுவத்தாமன் இறந்தான் என்று துரோணருக்குச் சொல்லுங்கள் ' என்றார்!
`அசுவத்தாமன் என்ற யானை இறந்துவிட்டது என்பதற்குப் பதிலாக, அசுவத்தாமன் என்ற தனது மகன் தான் போர்க்களத்தில் இறந்து விட்டான் என்று துரோணர் நினைத்துக் கொண்டு விடலாமே? 'எனத் தர்மத்தின் மறு உருவான யுதிஷ்டிரர் கவலையுற்றார். ஆனால் பின்னர் கிருஷ்ணரின் வற்புறுத்தலின்படி ‘அசுவத்தாம யானையை பீமன் கொன்றுவிட்டான்,' என்று துரோணரை நோக்கி உரக்கக் கூறினார்!
அந்தச் சமயம் பார்த்து கிருஷ்ணர் சங்கை எடுத்து ஊதினார்! ‘தருமரே! என்ன சொல்கீறிர்கள்? சரியாகக் கேட்கவில்லை,' என துரோணர் கேட்க, சரியான நேரத்தில் இடையில் புகுந்து `அசுவத்தாமனை, பீமன் கொன்று விட்டானாம்' என்று சொல்லி விட்டார் கிருஷ்ணர்!
பதைபதைத்த துரோணர், தருமரைப் பார்த்து அது உண்மையா எனக் கேட்டார்! ஆனால் தருமர் மௌனமாக இருந்து விட்டார்! மவுனம், சம்மதத்தின் அறிகுறி என்று நினைத்த துரோணர் தனது அன்பு மகன் அசுவத்தாமன் கொல்லப்பட்டதாகப் புரிந்து கொண்டு நிலை குலைந்தார்! பின்னர் கொல்லவும் பட்டார்!
ஐயா, பஞ்ச பாண்டவர்கள் நல்லவர்கள். துரியோதனனால் வஞ்சிக்கப் பட்டு நாட்டை இழந்தவர்கள். அவர்களுக்கு உதவ எண்ணினார் பகவான் கிருஷ்ணர். அதற்கு அந்த அநியாயக்காரர்கள் பக்கம் நின்ற துரோணர் எனும் பராக்கிரமசாலியை வீழ்த்த வேண்டிய கட்டாயம் அந்த சூட்சுமதாரிக்கு! ஒரு நல்லது நடப்பதற்காக ஆனானப்பட்ட தர்மரையே தர்மத்தை விட்டுக் கொடுக்க வைத்து விட்டார் அவர்! ஐயன் வள்ளுவர் சொல்லியது போல, புரை தீர்ந்த நன்மை பயக்குமென்றால் பொய்மையும் வாய்மை இடத்தில் தானே?
ஐயா, எப்பவும் அடிப்படை நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வது தானே முக்கியம்? அவ்வப்பொழுது சூழ்நிலைக்கேற்றவாறு அணுகுமுறையில் மாற்றங்களை செய்து கொள்வது தானே கெட்டிக்காரத்தனம்?
கீனிச்சி ஒஹ்மே எனும் ஜப்பானியர் உலகில் மிகவும் மதிக்கப்படும் Strategic Business Consultant களில் ஒருவர். ‘The mind of the stragesist' எனும் அவரது நூலில், அவர் வர்த்தகப்போட்டிகள் நாடுகளுக்கிடையே நடைபெறும் போர் போன்றவையே என்கிறார்!
எதிராளியை எந்தச் சமயத்தில் தாக்குவது, எப்பொழுது பின்வாங்குவது, என்பவை இவ்விரண்டு இடங்களிலுமே முக்கியமல்லவா? நடப்பவைகளை வேகமாகப் புரிந்து கொண்டு அவற்றுக்கேற்றவாறு உடனுக்குடன் எதிர் நடவடிக்கைகளை, மாற்று நடவடிக்கைகளை எடுக்கத் தேவையான Intellectual Elasticity குறித்துப் பேசுகிறது அப்புத்தகம்!
நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சொல்லிக் கொண்டிருக்காமல் நடப்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்றார்ப் போல் தமது அணுகுமுறையை, செயல் திட்டங்களை மாற்றிக் கொள்பவர்களால் தானே வாழ்க்கையில், வர்த்தகத்தில் வெற்றி பெற முடியும்.
தம்பி, 1970களில் இந்தியாவில் எத்தனை வகையான கார்கள் இருந்தன தெரியுமா?
உள் நாட்டில் மூன்றே மூன்று வகை தானப்பா! 1980களில் இந்தியாவிற்கு ஜப்பானின் சுசூகி வந்த பின் தானே இங்கே எல்லாம் மாறியது? இன்று இந்தியாவின் மொத்த கார் உற்பத்தியில் பாதி கார்கள் மாருதி நிறுவனத்தினுடையதுதானாம்! ஆண்டுக்கு சுமார் 14 லட்சம் கார்கள்! ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 125 நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்கிறார்களாம்! அவர்கள் வந்து இறங்கிய உடனேயே, இந்தியாவிலும் தங்கள் ஜப்பான் அரசாங்கத்தின் வேகத்தையும், அந்நாட்டு உபரி பாகங்களின் தரத்தையும், அவர்களின் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டையும் எதிர் பார்த்திருந்தால், நடைமுறைப்படுத்த முயன்றிருந்தால் என்னவாகியிருக்கும்?
`நாங்கள்அப்படியாக்கும், நீங்களும் உடனே மாறுங்கள்' என்று சொல்லியிருந்தால் திரும்பித் தான் போயிருக்கணும்! கொஞ்சம் வளைந்து கொடுத்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக பலவற்றை சீரமைத்தார்கள். வெற்றி கிடைத்தது!
‘உங்களது அணுகுமுறையில் பிடிவாதமாக இருக்காதீர்கள். விட்டுப் பிடியுங்கள். காட்டில் நேரான மரங்கள் வெட்டப்படும். ஆனால் வளைந்து நெளிந்த மரங்கள் தப்பித்து விடும்!'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...