Monday, June 3, 2019

கலக்கம்! லஞ்ச ஒழிப்பு சோதனை; சார் - பதிவாளர்கள் கலக்கம்.

தேர்தல் பணிகள் முடிந்த நிலையில், பத்திர ப் பதிவு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு துறையினர், மீண்டும் சோதனைகளை துவக்கி உள்ளதால், சார் - பதிவாளர்கள் பீதியடைந்து உள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு, சோதனை, சார் பதிவாளர்கள், கலக்கம்

தமிழகத்தில், சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்ய, 575 சார் -பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. பத்திரப்பதிவு பணிகள், ஆன்லைன் முறைக்கு மாறினாலும், பல்வேறு சேவைகளை பெற, சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு மக்கள் செல்கின்றனர். அவர்களிடம், சில சார் - பதிவாளர்கள், லஞ்சம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. 

இது குறித்து, புகார்கள் வந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு துறையினர், சார் - பதிவாளர் அலுவலகங்களில், திடீர் சோதனைகள் நடத்தி வந்தனர். அந்த சோதனைகளில், 12 சார் - பதிவாளர் அலுவலகங்களில், கணக்கில் வராத ரொக்கப்பணம் இருந்ததும், பணியாளர் அல்லாதோர், பணியில் ஈடுபடுத்தப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால், சார் - பதிவாளர்கள் சிலர், இடமாற்றமும் செய்யப்பட்டனர். 

இந்நிலையில், லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிகள், அமலுக்கு வந்தன. அதனால், சார் - பதிவாளர் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்துவது நிறுத்தப்பட்டது. கடந்த மாத இறுதியில், லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிந்து, மே, 26ல், தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தன. 

இதையடுத்து, லஞ்ச புகார் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களை குறிவைத்து, லஞ்ச ஒழிப்பு துறையினர், மீண்டும், திடீர் சோதனைகளை முடுக்கி விட்டுள்ளனர். எனவே, சார் - பதிவாளர்கள் மத்தியில், பதற்றம் ஏற்பட்டுள்ளது. சோதனையில் சிக்காமல் இருக்க, சில சார் - பதிவாளர்கள், தொடர் விடுப்பில் சென்று உள்ளனர். 

பதிவுத்துறையின் அமைச்சராக, வீரமணி உள்ளார். இந்த துறையில், மக்கள் அலைக்கழிக்கப்படுவதை தடுத்தல் மற்றும் லஞ்ச வசூல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பும், அவருக்கு உள்ளது; நடவடிக்கை எடுப்பார் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...