நடிகர் உதயநிதிக்கு, கட்சியின் இளைஞர் அணி செயலர் பதவி வழங்க, முயற்சி நடக்கும் நிலையில், 'மூன்றாம் தலைமுறை வாரிசுகளை துாக்கி சுமக்க, நாங்கள் என்ன சுமை தாங்கிகளா...' என, எதிர்ப்பு கருத்துகளை, தி.மு.க.,வினர், சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
தி.மு.க., தலைவராக இருந்து மறைந்த, கருணாநிதியின், 96வது பிறந்த நாள், இன்று கொண்டாடப்படுகிறது.இளைஞர் அணிஇதையொட்டி, ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதிக்கு, மாநில இளைஞர் அணி செயலர் பதவி வழங்கப்படலாம் என்ற, தகவல் பரவி வருகிறது. அதற்கான நடவடிக்கைகளிலும், கட்சி தலைமை ஈடுபட்டுள்ளது.இன்று நடக்கும், மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பதவி வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தி.மு.க.,வில், வாரிசு அரசியல் தொடர, கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது தொடர்பாக, சமூக வலைதளங்களில், பரவி வரும் எதிர்ப்பு கருத்துகள்:மக்கள் பிரச்னைக்காக, போராட்டங்கள் நடத்தவும், குடிநீர் பிரச்னைக்காக தீர்மானம் நிறைவேற்றவும் முன் வராத, கட்சியினர், 'உதயநிதிக்கு இளைஞர் அணி செயலர் பதவி தர வேண்டும்' என, தீர்மானம் நிறைவேற்றினால் சரியா...இதன் பின்னணியில், மாவட்டங்களில் கோலோச்சும் வாரிசுகளின் சுயநலமும், தலைவரது குடும்ப உறுப்பினர்களின் ஊக்குவிப்பும் தானே காரணம்.
வடிவேலு 'கட்சியின் வெற்றிக்காக, உதயநிதி பிரசாரம் செய்யவில்லையா; அவருக்கு பதவி கொடுப்பதில் என்ன தவறு' என, சிலர் கேட்கலாம்.கடந்த, 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்காக பிரசாரம் செய்த, நடிகர் வடிவேலுக்கு, சினிமா வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. அப்போது, அவர் மீது யாரும் கரிசனம் காட்டவில்லை. இன்னமும் பல அடிப்படை உறுப்பினர்களின், முதல் தலைமுறையே, கட்சிப் பதவிக்கு வரமுடியாத நிலை உள்ள போது, மூன்றாம் தலைமுறை வாரிசுகளை துாக்கி சுமக்க, நாங்கள் என்ன சுமை தாங்கிகளா...வாரிசு களுக்கு வாழ்க கோஷம் போட்டே பழகிப் போனவர்களுக்கு வேண்டுமானால், இதில் ஆர்வம் இருக்கலாம். ஆனால், தன் முனைப்பு ஆர்வமுள்ள இளைய சமுதாயம், ஒரு நாளும் வாரிசு அரசியலை அங்கீகரிக்காது. இவ்வாறு, எதிர்ப்பு கருத்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆரம்பத்திலேயே எதிர்ப்புகள் அதிகமாகி உள்ளதால், உதயநிதிக்கு கட்சி பதவி வழங்கப்படுமா; காலம் கனியட்டும் என, ஸ்டாலின் காத்திருக்கப் போகிறாரா என, அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
No comments:
Post a Comment