Saturday, June 1, 2019

தலையில் அடிபட்டால் என்ன செய்வது?

உடலுக்கு சிகரமாக அமைந்து இருப்பது மட்டுமின்றி, உடலை இயக்கும் சிகரமாகவும் இருப்பது தலைதான். அதனால்தான் ‘எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்’ என்று பழமொழியாக சொல்லி வைத்தார்கள். தலைமைச் செயலகமான நமது மூளையும் நரம்புகளும் இணைந்திருக்கும் ஓர் அற்புதம் என்றே நம் தலைப்பகுதியைக் கூறலாம்.இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தலையில் அடிபட்டுவிட்டால் என்ன செய்வது...
‘‘தலை ஏன் இத்தனை முக்கியமானது என்பதற்கான முக்கிய காரணம் நம்முடய மூளை. சராசரியாக மூளை 1.5 கிலோ எடையுள்ள ஒரு திசுவாக அமைந்துள்ளது. இதைச்சுற்றி ஒரு கனமான மண்டை ஓடு உள்ளது. அதிக ஆற்றல் உடைய மூளைத்திசு நமது உடலின் 20 % ரத்த ஓட்டத்தை ஏற்று செயல்படுகிறது. மூளைக்குச் செல்லும் ரத்தம், அது கொண்டு செல்லும் ஆக்சிஜன் என்பவை மூளையின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியமானது. தொடர்ச்சியாக 3 நிமிடங்களுக்கு மேல் மூளைக்கு ரத்த ஓட்டம் தடைபட்டால் அது மூளையை செயலிழக்கச் செய்கிறது. எனவே, தொடர்ந்து சீரான ரத்த ஓட்டமும் அதில் இருந்து கிடைக்கும் ஆக்சிஜனும் மூளைக்குத் தேவை.
ஒரு விபத்து ஏற்படும்போது இந்த ரத்த ஓட்டம் தடைபடலாம். அதற்கு உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும். ஒருவருக்கு தலையில் அடிபடும்போது அது சிறிய பாதிப்பாக இருக்கலாம். தலைக்காயம் என்பது மேல் பகுதியில் மட்டும் இருந்தால் அதிக பாதிப்பு இருக்காது. ஆனால், சில நேரங்களில் விபத்து நடந்த பின்பு நினைவிழப்பு ஏற்பட்டால் அது மிகக்குறைவான நேரமாக இருந்தாலும் உடனே நரம்பியல் மருத்துவரை அணுக வேண்டும்.
இப்போது சாலை விபத்துகள் அதிகம் நிகழ்வதைக் காண்கிறோம். பெரும்பாலான சாலை விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவே ஹெல்மெட் அணிய வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது. அப்படி விபத்தில் தலையில் அடிபட்டால் உடனே செய்ய வேண்டியது, அடிபட்டவருக்கு ரத்தப் போக்கு இருந்தால் அதைத் தடுக்க வேண்டும். சீராக மூச்சு விடுமாறு உதவ வேண்டும். உடனடியாக ஆம்புலஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்ல வேண்டும்.
விபத்தில் அடிபட்ட முதல் ஒரு மணி நேரத்தை Golden hour என்பார்கள். எத்தனை விரைவாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறதோ அத்தனை நலம் உண்டாக வாய்ப்பு உள்ளது. உடனடியாக காலம் தாமதிக்காமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். லேசான காயங்களுக்கு உடனடி சிகிச்சை பலன் தரும். பலமான காயம்பட்டு மூளை பாதிக்கப்பட்டிருந்தால் திறமை வாய்ந்த மருத்துவக் குழு அவரை பரிசோதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
சில சமயங்களில் ICU-வில் இந்த நபர்களை வைத்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தொடர்ந்து, ஒவ்வொரு நிமிடமும் அவரது மூளையின் செயல்பாட்டினை கருவிகள் மூலம் அளவீடு செய்து தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும். மருந்துகள் மூலமாகவும், Critical care management என்கிற நுண்ணோக்கு முறைகளாலும் சிகிச்சை அளிக்கப்படும்.
மூளை விபத்தின் தாக்கத்தில் இருந்து முழுவதுமாக விடுபட, சீராக செயல்பட அனைத்து விதங்களிலும் மருத்துவக் குழு உதவி செய்கிறது. இதேநேரத்தில் கை மற்றும் கால்கள் பலம் இழக்காமல் நலமாக இருப்பதற்கு பிஸியோதெரபி என்கிற உடற்பயிற்சி சிகிச்சை போன்ற புனர் வாழ்வு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.
சிகிச்சைக்குப் பின் ஒருவர் தனது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம். உடலில் எந்த இடத்தில் அடிபட்டாலும் ஒரு சிறிய தழும்பு இருக்கும். அதேபோல மூளையில் அடிபட்ட பகுதியிலும் சில சிறிய மாற்றங்கள் இருக்கலாம். இருப்பினும் இன்றைய முன்னேறிய சிகிச்சை முறைகள் ஒருவரை முழுமையாக இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப உதவுகிறது.
சாதாரணமாக பைக்கிலிருந்து கீழே விழுவது, பின்னந்தலையில் லேசாக அடிபடுவது போன்ற நேரங்களில் அதிகம் பயம் கொள்ள வேண்டியதில்லை. சமயங்களில் பைக்குகளின் பின்புறம் அமர்ந்து செல்லும் பெண்கள் இதுபோல் விழுந்துவிடுவதுண்டு. அதுமாதிரியான சமயங்களில் அழுத்தமாக அடிபட்டதாக உணர்ந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது அவசியம். மருத்துவரின் பரிந்துரைப்படி ஸ்கேன், எக்ஸ்ரே பரிசோதனைகளும் மேற்கொள்ளலாம்.’’

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...