ஏறத்தாழ 50 ஆண்டுகாலம் தமிழர்களின் கூடவே கொண்டாட்டம், கோபம், கொதிப்பு, தவிப்பு, சோகம் எல்லாவற்றிலுமே பயணப்பட்டு வந்து கொண்டிருப்பவர் இளையராஜா. திரைப்படத்துறையில் 3 தலைமுறை சக இசையமைப்பாளர்களோடு இசைஞானி இசையமைத்து வருகிறார். கிட்டத்தட்ட 1000 படங்கள்.. 7000 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளவருடைய இசை படைப்பூக்கத்தை வெளிப்படுத்த இவை போதுமானதாக இல்லை. அதனால்தான் இளையராஜா, சிம்பொனி, ஹவ் டு நேம் இட், நத்திங் பட் விண்ட், திருவாசகம், ரமணர் பாடல்கள் என மனம் விரும்பும்படி எல்லாம் ஒரு குழந்தையைப் போல இசையை உருவாக்கிக்கொண்டே செல்கிறார்... "என்னோடு நண்பர்களாகப் பழகியவர்கள் எல்லாம் நண்பர்கள் இல்லை. எனக்கு ஆர்மோனியப் பெட்டி தான் நண்பன். இந்த ஆர்மோனியப் பெட்டியை கோவை மாநகரத்தை சேர்ந்த உக்கடத்தில் ரூ.60-க்கு எனது அண்ணன் வரதராஜன் வாங்கினார். இதில் பயிற்சி பெற்றுத்தான் இசை அமைப்பாளராக ஆனேன். என்னிடம் இருக்கும் விலைமதிப்பற்ற பொருள் இந்த ஆர்மோனியப் பெட்டிதான்" என்கிறார் இளையராஜா. "இசையமைத்ததில் கரகாட்டக்காரன் படத்திலுள்ள 'மாங்குயிலே பூங்குயிலே' பாடலுக்கு மிகக் குறைந்த நேரத்தில் இசையமைத்துள்ளேன். அதிக நேரம் இசையமைக்க எடுத்துக் கொண்ட பாடல், உதயகீதம் படத்தின் 'பாடு நிலாவே' பாடல்" என்று சொல்லி இருக்கிறார் இளையராஜா. 'அன்னக்கிளி உன்னத் தேடுதே' என்று குரலெடுத்து தமிழ்த்திரையில் 1976-இல் இளையராஜா நுழைந்தபிறகு, அவரது இசையை நாடத் தொடங்கியது தமிழ்த்திரை ரசிகர்களது மனம். 'மச்சானைப் பாத்தீங்களா' என்று எஸ்.ஜானகி வசீகரக் குரலில் இழைத்த கிராமிய மெட்டு, அவரை அதிகமாகக் கவனிக்க வைத்தது. வாத்தியார் படம், தலைவர் படம் என்ற நிலைமாறி இயக்குனர் பெயரால் படங்கள் பேசப்படத் தொடங்கிய அதே கால கட்டத்தில், இசையை வைத்துப் படத்தை வெற்றி பெற வைப்பதில் பெரும் சாதனை படைத்தவர் இளையராஜா. இசைக்காகவே திரைப்படங்களைப் பார்ப்பதற்கு திரையரங்குகளை நோக்கி ரசிகர்களை வர வைத்தவர் இசைஞானி. அதனால்தான் அந்தக் கால கட்டத்தில் தயாரிப்பாளர்கள் போஸ்டர்களில் 'இசைஞானி இசையில்' என்று இருந்தால், கண்களை மூடிக்கொண்டு படங்களை வாங்கி திரையிடத் தயாராக இருந்தார்கள். இளையராஜா இசையினால் புகழோடு ஓடிய படங்கள் வரிசையில் கரகாட்டக்காரன் தொடங்கி சிந்து பைரவி, முதல் மரியாதை, புன்னகை மன்னன், தேவர் மகன், நாயகன், தளபதி என்று ஒரு பெரிய பட்டியல் உண்டு. வழக்கமான பாட்டையில் போகாமல், வித்தியாசமான தளத்தில் பரிசோதனைகளை நிகழ்த்திக் கொண்டே இருந்தது அவரது இசைத்தேடல். சிட்டுக்குருவி படத்தில், 'என் கண்மணி உன் காதலி' பாடலையே எடுத்துக் கொள்ளுங்கள். எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா இருவரது குரல்களில் அவர் செய்திருக்கும் ஜாலம், இடையே ஒலிக்கும் கண்டக்டர் குரல், விசில் ஒலி எல்லாமே ஒரு பேருந்து பயணத்தை கண்ணுக்குள் கொண்டு வந்து நிறுத்தும். அவரின் இசை ஏற்படுத்தும் உணர்வு அலைகளில் எவராலும் சிக்காமல் இருக்க முடியாது. மண்ணின் மணம் கமழும் இசையை அவர்தான்- அவரேதான் கொடுத்தார். மண்வாசனை படத்தில் 'அரிசி குத்தும் அக்கா மகளே' பாட்டுடைய இசையில் அவர் கொடுத்திருக்கும் ஒலிகள் அவ்வளவு நெருக்கமாக இருக்கும். இந்தப் படம் வந்த காலகட்டத்தில் கிராமங்களில் மட்டுமல்ல நகரங்களிலும் அரிசி குத்துவது, முறத்தில் புடைப்பது போன்றவை வீட்டில் அன்றாடம் நடக்கும் வேலைகளாக இருந்தன. அப்போது எழும் ஓசை, அப்படியே இந்தப் பாட்டில் இருக்கும். இளையராஜாவின் இசையில் வெளிப்படும் இந்த இயல்புநிலைதான் அவரின் தனித்தன்மை. 'ராஜபார்வை' படத்தில் 'அந்தி மழை பொழிகிறது' பாடலை வசந்தா என்னும் ராகத்தில் அமைத்திருப்பார். மழையில் குடை பிடித்தபடி நாயகனும் நாயகியும் திரையில் தோன்றுவார்கள். அந்தப் பாடலின் இசையைக் கேட்கும் போது நாமே மழையில் நனைவது போன்ற உணர்வு ஏற்படும். 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் வரும் 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே..' பாடலின் முகப்பு இசை முடிந்து, பாடல் தொடங்கும் போதே, பரவசம் நம்மைத் தொற்றிக் கொள்ளும் சுகானுபவம் உண்டாகும். தளபதி படத்தின் 'ராக்கம்மா கையத்தட்டு' பாடலினூடே ' குனித்த புருவமும்' என்று தேவார வரிகளைக் கொண்டு வந்து இணைக்கும் மாயம், ப்ரியா படத்தின் பாடல்கள் தமிழ்த்திரை இசையில் முதன்முறை ஸ்டீரியோ முறையில் பதிவு செய்யப்பட்டது, பின்னணி இசையில் கதையோட்டத்திற்கு ஏற்ப புதுமைகள் கொணர்ந்தது என இளையராஜாவின் சிறப்புக்கள் சொல்ல ஏராளமானவை. தேநீர் விடுதிகளில் அந்தக் கால கட்டங்களில் சப்தமாக இசைத்தட்டுகள் இரவு நேரங்களில் பாடவிடப்படும். எல்லாம் இளையராஜாவின் அருளாசி தான். அன்னக்கிளி, 16 வயதினிலே, முள்ளும் மலரும், புவனா ஒரு கேள்விக்குறி, செம்பருத்தி, தர்மயுத்தம், மெல்லத் திறந்தது கதவு, சொல்லத் துடிக்குது மனசு, நீங்கள் கேட்டவை, மறுபடியும், இளமைக்காலங்கள், பயணங்கள் முடிவதில்லை போன்ற படங்களின் பாடல்களைக் கேட்பதற்கு என்றே நண்பர்கள் குழுவுடன் பலமுறை தேநீர் அருந்தச் சென்று, நின்று, தலையாட்டி மணிக்கணக்கில் பாடலையும் ரசிப்போம், ருசிப்போம்! 'நாயகன்' படத்தில் 'தென் பாண்டிச் சீமையிலே' பாடலின் இழைப்பில் தெறிக்கும் சொற்களுக்கு அப்பாற்பட்ட சோகத்தின் பிழிவு, கதையின் ஆவேச பகுதிக்கேற்ற பாவங்களோடு வாணி ஜெயராம் குரலில் ஒலித்த "கவிதை கேளுங்கள்" (புன்னகை மன்னன்) பாடலின் அசாத்திய இசைக் கலவை, துள்ளாட்டம் போடும் 'சின்னச் சின்ன வண்ணக்குயில்' (மௌன ராகம்), மெல்லென்ற தென்றலாக வீசும் 'என் இனிய பொன் நிலாவே' (மூடுபனி), நெகிழ வைக்கும் 'ஒன்ன நெனச்சேன் பாட்ட படிச்சேன்' (அபூர்வ சகோதரர்கள்) என்று அவரது இசையில் பாடல்களைக் கேட்டுக் கிறுகிறுத்துப் போனது இந்தத் தலைமுறை மட்டுமல்ல அடுத்தத் தலைமுறைகளும்தான். கவிஞர் வைரமுத்து எழுதிய முதல் திரைப்பாடலுக்கு (இது ஒரு பொன்மாலைப் பொழுது – நிழல்கள்) இசையமைத்த ராஜாவின் இசையில் தான், கவியரசு கண்ணதாசனின் கடைசி பாடலும் (கண்ணே கலைமானே – மூன்றாம் பிறை) பிறந்தது. 1991-ஆம் ஆண்டு இளையராஜா இசையில் தளபதி படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமனியம் மற்றும் சுவர்ணலதா பாடிய 'ராக்கம்மா கையத் தட்டு' பாடல் 2003-இல் பிபிசி நடத்திய 'வேர்ல்ட் டாப் 10 பாப்புலர் மியூசிக்' சர்வேயில் 165 நாடுகளைச் சேர்ந்த அரை பில்லியன் மக்கள் வாக்களிக்க, 4-ஆம் இடம் பெற்றது. கவிதை வரிகளின் அழகு, சொற்கள் இசைக்கருவிகளின் ஒலியில் அடித்துக் கொண்டு செல்லப்படாது, தற்காத்து ரசிகர்களுக்குக் கொண்டு சேர்க்கும் இசையை நெய்துகொண்டே இருக்கும் விரல்கள் அவருடையவை. அற்புதமான பாடகர்களின் மிக அருமையான பாடல்கள் ராஜாவின் இசையில் மிதந்து வந்தது ரசிகர்களது பொற்காலம். பாலமுரளி கிருஷ்ணாவின் 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்' (கவிக்குயில்) , கே.ஜே.ஜேசுதாஸின் 'கலைவாணியே ..' (சிந்து பைரவி), டி.எம். சவுந்திரராஜனின் 'அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்' (தீபம்), பி.சுசீலாவின் 'ராகவனே ரமணா' (இளமைக்காலங்கள்), எஸ்.ஜானகியின் 'ராசாவே உன்னை நம்பி' (முதல் மரியாதை), வாணி ஜெயராமின் 'நானே நானா..' (அழகே உன்னை ஆராதிக்கிறேன்),எஸ்.பி.பியின் 'இளைய நிலா பொழிகிறதே' (பயணங்கள் முடிவதில்லை) என்று சொன்னால், இதைப்போலவும் இதைவிடவும் இனிமையான வேறு பல பாடல்களது பட்டியலை வேறொரு ரசிகர் சொல்லக் கூடும். அதுதான் இளைய ராஜா! பத்ரகாளி படத்தின், 'கண்ணன் ஒரு கைக்குழந்தை' பாடல் மொத்தத்தையும் இந்த முதல் வரியை வைத்தே பாடி விட முடியும். அப்படியான ஒரு மெட்டு அது. தாளக் கட்டின் நயத்தை, 'வளையோசை கலகல' (சத்யா), 'பூவை எடுத்து ஒரு மாலை' (அம்மன் கோவில் கிழக்காலே), 'மணியே மணிக்குயிலே' (நாடோடி தென்றல்) போன்ற பல நூறு பாடல்களில் மயங்கிக் கேட்டுக் கொண்டே இருக்க முடியும். பனி விழும் மலர் வனமும் (நினைவெல்லாம் நித்யா), தென்றல் வந்து தீண்டும் போதும் (அவதாரம்), மழையும், சாரலும், பனியும், வெயிலும் எல்லாமே இசையில் நிகழ்த்திக் கொண்டே இருக்கும்இளையராஜா என்ற மனிதனின் நெடிய பயணத்தில், மேலோங்கி நிற்பது ராஜாவின் இசை தான்! இசைதான்! இசையே தான்!
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Friday, November 11, 2022
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment