எனக்கு விநோதியின் குரலை மிகவும் பிடிக்கும். மேலும் அவர் நடித்த சில படங்களைக் கூட விரும்பி பார்த்திருக்கிறேன். அதைக் காட்டிலும் வசீகரமான முகம் அவருக்கு. நம் பக்கத்து வீட்டு தோரணை என்பார்களே அந்த அர்த்தத்தில் சொல்கிறேன்.
அதை எல்லாம் விட இப்போது ரீல்ஸ் மூலம் வைரல் கண்டெண்ட் ஆகி இருக்கிறார். அவர் போட்ட ஜி.எஸ்.டி வீடியோக்கு 'வரி' போடும் அளவுக்கு வருமானம் வந்திருந்தாலும் ஆச்சரியமில்லை.
நான் இறுதியாக அவர் வீட்டை அடைந்தேன். அவரது அம்மா வரவேற்றார். நான் மிக இயல்பாக அவரது அம்மாவிடம், 'வர்ற வழியிலதான் நான் போன்ல கேட்ட பேங்க் இருக்கு. அதுகூட உங்கள் மகளுக்குத் தெரியல' என சொன்னேன்.
உள்ளே இருந்த விநோதினி கேட்காததைப்.போல் வந்து நின்றார். நமக்குத்தான் வாயில சனியாச்சே. உங்க அம்மாகிட்ட உங்களைப் பத்தித்தான் சொல்லிகிட்டு இருந்தேன் என்றேன்.
நான் கேட்டுகிட்டுதான் இருந்தேன். தேவையில்லாமல் சண்டைப் போட வேண்டாமேனு தெரியாத மாதிரி வந்து நின்றேன். திரும்ப ஞாபகப்படுத்தாதீங்க. அப்புறம் எனக்கு கோபம் வந்துடும் என்றார்.
இப்போது புரிகிறதா, நான் ஏன் பக்கத்து வீட்டுப் பெண் தோரணையில் இருக்கிறார் என்று சொன்னேன் என்பது.
அதற்குள் அவரது அம்மா என் பேரை விசாரித்தார். நான் சொன்னேன். அவர், ஆச்சரியத்துடன் அவரா நீங்க. குமுதத்துல நிறை படிச்சிருக்கேன் என்றார். நான் உங்கள் ரசிகர் என்றார்.
நான் பதிலுக்கு 'உங்க பொண்ணோட ரசிகன் நான். நீங்க என்னடானா என்னோட ரசிகன்னு சொல்றீங்களே?' என்றேன்.
மேலும் விநோதினி அம்மா என்னைப் பாராட்டினார். தான் ஒரு தமிழ்ப் பேராசிரியை என்றும் சொன்னார். எனக்குத் தமிழாசிரியர் ஒருவர் நம்மை பாராட்டுகிறாரே என்று வியப்பு.
அதன் பின் விநோதினியின் நடிப்பைப் பற்றி சொன்னேன். குறிப்பாக அவரது குரல் வளம். யதார்த்தம் எனப் பேசினேன்.
அதன் பின் விநோதினியின் பேட்டி முடிந்தது. ஏதேனும் ஒரு புத்தகம் பரிசாக தர வேண்டும் உங்களுக்கு என்று விடாப்பிடியாக தந்தார். நான் அவரது அம்மாவின் நூல்கள் இருந்தால்.கொடுங்கள் என்றேன். அவரும் தந்த ஞாபகம்.
அன்று முதல் விநோதினி எனக்கு ஒரு சகோதரியைப்போல மாறினார். அவ்வளவு அன்பு. சமீபத்தில் ஒரு இளம் இயக்குநர் ஒரு கேரக்டர் சொன்னார். நான் உடனே விநோதினியை சொன்னேன். அதற்கு காரணம் அவர் நடிப்பு. இப்போது அவரது இயல்பான நடிப்புடன், அவரும் அவரது தந்தையும் நிறைய ரீல்ஸ் போடுகிறார்கள்.
படபட கோவக்காரி அவர். அவருக்குள் அத்தனைக் காமெடி உணர்வுகள் பொங்கி வழிகின்றன. பார்க்கவே சந்தோசமாக இருக்கிறது. சினிமா வாழ்வு மூலம் இதே சந்தோஷத்தை அவர் பெற வேண்டும். பெறுவார் என நம்புகிறேன்.

No comments:
Post a Comment