Saturday, November 12, 2022

இது சீன தேசத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி.

 பேரரசன் ஒருவன் தன் வயோதிக காலத்தில் தன் மகனுக்கு முடி சூட்ட விரும்பினான்.அவனுடைய மகனும் ஓர் அரசனுக்குத் தேவையான அனைத்து வித்தைகளையும் கற்றுத் தேர்ந்திருந்திருந்தான்.

ஒருநாள் அந்த அரசன் தன் மகனை அழைத்தான்.மகனே ஒரு அரசனுக்கத் தேவையான அனைத்து வித்தைகளையும் நீ கற்றுத் தேர்ந்திருக்கிறாய்.ஆனாலும் நீ கற்க வேண்டிய வித்தை ஒன்றே ஒன்று பாக்கி இருக்கிறது.அதைக் கற்காதவரை நீ என் மகனாயிருந்தாலும் கூட உனக்கு முடி சூட்டும் அதிகாரம் எனக்கு இல்லை.எனவே நான் சொல்லும் குரு நாதரிடம் சென்று அந்தக் கடைசி வித்தைகளையும் கற்றுவிட்டுத் திரும்பு என்று சொல்லி ஓலை எழுதிக் கொடுத்து அனுப்பினான்.
இளவரசனும் அடர்ந்த காட்டுக்குள் நீண்ட பயணம் செய்து அந்த குருநாதரின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்தான்.
காட்டின் நடுவே சிறிய தோட்டம்.எளிய குடிசை.கிழத்தோற்றத்துடன் குருநாதர்.
ஓலையை நீட்டிய இளவரசன் பணிவுடன் அவர் முன்னால் நின்றிருந்தான்.
இதுவரை பெரிய பெரிய மேதைகளிடம்
அரிய பல வித்தைகளைக் கற்றிருக்கிறோம் . அவர்களிடமெல்லாம் இல்லாத என்ன புதிய வித்தையை இவர் நமக்கு கற்றுத் தந்துவிடப் போகிறார்? இளவரசன் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
குருநாதரோ ஓலையைப் படித்து முடித்தவுடன் சரி சரி அந்தத் துடைப்பத்தை எடுத்து ஆசிரமத்தை பெருக்கு என்று கூறிவிட்டு ஆசிரமத்தை விட்டுச் சென்றுவிட்டார்.
துடைப்பத்தை எடுத்துப் பெருக்கத் தொடங்கிய இளவரசனுக்கு ஏதேதோ சிந்தனைகள்.எத்தனை நாள்களுக்கு இந்தக் கிழவனிடம் இப்படிக் குப்பை கொட்ட வேண்டி வருமோ? அப்படி என்ன மாயவித்தையை இவர் கற்றுத் தந்துவிடப் போகிறார் என்று தெரியவில்லை.என்று பெருக்கிக் கொண்டிருந்தவன் முதுகில் பளார் என ஒரு அறை விழுந்தது.அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தால் குருநாதர்!
இப்படித்தான் அவ்வப்போது உன்னை அடிப்பேன்.நீ தான் அடி வாங்காமல் தப்பிக்க வேண்டும்.எந்த நேரம் அடிப்பேன் என்று சொல்ல முடியாது.எச்சரிக்கை என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார்.
பாவம் இளவரசன் வேலை செய்யும் தொல்லை போதாது என்று அடி வாங்கும் தொல்லை வேறு சேர்ந்து கொண்டது.எவ்வளவோ எச்சரிக்கையாக இருந்தும் ஓரிரு சமயம் அடி வாங்க நேரிட்டது.
ஒருவாரம் சென்றது.இப்போதெல்லாம் குருநாதரால் அவனை அடிக்க முடியவில்லை.மிகவும் எளிதாகத் தப்பித்துக் கொண்டான்.
ஆனால் சோதனை இன்னும் கடுமையாகியது.ஒரு நாள் குருநாதர் அவனை அழைத்தார் . இனிமேல் உன்னைக் கையால் அடிக்க மாட்டேன் இந்த நீண்ட கம்பால் அடிப்பேன்.எப்போது என்று சொல்ல முடியாது நீ தூங்கும் போது கூட அடித்து விடுவேன்.தப்பிக்க வேண்டியது உன் பொறுப்பு என்று கூறி விட்டுச் சென்றார்.
முன்பாவது பக்கத்திலும் வந்துதான் அடிக்க முடியும் ஆனால் இப்போது தூரத்தில் இருந்தே அடித்து விடலாம்.எனவே இன்னும் எச்சரிக்கையாக இருக்கத் தொடங்கினான்.இருந்தும் ஓரிரு சமயம் அடி வாங்க நேரிட்டது.
மேலும் ஒரு வாரம் சென்றது.இப்போதெல்லாம் குருநாதரால் கம்பாலும் அடிக்க முடியவில்லை.அந்த அளவு மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொண்டான்.
இப்போது தான் உச்ச கட்ட சோதனை தொடங்கியது.
ஒரு நாள் குருநாதர் சொன்னார் இனிமேல் உன்னைக் கையால் அடிக்க மாட்டேன் இந்தக் கம்பாலும் அடிக்க மாட்டேன்.இதோபார் அரிவாள் இதனால் ஒரே வெட்டு இரண்டு துண்டாக்கி விடுவேன்.சொல்லமுடியாது தூங்கும் போது கூடத்தீட்டி விடுவேன் எச்சரிக்கையாக இரு என்று சொல்லிவிட்டு ச் சென்று விட்டார். இளவரசன் பொறுமையின் எல்லையைக் கடந்து விட்டான்.
நிம்மதியான தூக்கம் இல்லை ஒரு நொடி தூக்கம் மறுநொடி விழிப்பு.எந்த நொடியிலும் உயிர் போய்விடலாம் என்ற நிலை.எப்படியோ ஒரு வாரம் சமாளித்தான்.
எட்டாம் நாள் காலை குருநாதர் கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.பக்கத்திலேயே பள பளவென்று வீச்சரிவாள்.பளிச் என்று இளவரசன் மனதில் ஒரு எண்ணம் இந்த கிழவன் என்ன வெட்டுவது?இதோ அருமையான வாய்ப்பு.ஒரே நொடியில் இந்த அரிவாளை எடுத்துக் கிழவன் தலையைச் சீவி விட்டால் என்ன?
இப்படி எண்ணி முடிப்பதற்குள் கண்களைத் திறந்து இளவரசனைத் திரும்பிப் பார்த்தார் குருநாதர் ஏண்டா நாயே!குருநாதரையா வெட்ட வேண்டும் என்று நினைக்கிறாய்? என்று கேட்டார்.
அதிர்ந்து விட்டான் இளவரசன்.கண்ணீர் மல்க குருநாதர் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டான்.அவனைத் தட்டிக் கொடுத்த குருநாதர் எப்பொழுது தூக்கத்தில் கூட விழிப்புணர்வுடன் இருக்கும் ஆற்றல் உனக்கு வருகிறதோ அப்போது அடுத்தவர் மனதில் ஓடும் எண்ணங்களைப் படிக்கும் அபூர்வ சக்தியை நீ பெறுவாய்.ஓர் அரசனுக்கு அத்தகைய விழிப்புணர்வு முக்கியமாய் தேவை என்பதாலேயே உன் தந்தை என்னிடம் பயிற்சிக்கு அனுப்பி வைத்தார் என்று கூறி விழிப்புணர்வு பயிற்சி கொடுத்தாராம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...