Thursday, April 20, 2023

சண்டிகேஸ்வரர் முன்பு கை தட்டலாமா..?

சிவன் கோவில்களில் சண்டிகேஸ்வரர் சன்னதியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சிலர், அந்த சன்னதியை அடைந்ததும் பவ்வியமாக கை தட்டுவார்கள். இன்னும் சிலர் பலமாக கை தட்டுவார்கள். மேலும் சிலர் அமைதியாக கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள்.
உண்மையிலேயே இப்படிச் செய்யலாமா? அதற்கு முன், யார் இந்த சண்டிகேஸ்வரர் என்று பார்த்து விடுவோம்…
சோழநாட்டில் சேய்ஞ்ஞலூர் என்ற திருத்தலம் உள்ளது. இங்கு எச்சதத்தன்-பவித்திரை தம்பதியினர் வசித்தனர். இவர்களது மகன் விசாரசருமன். இவன் சிறு வயதிலேயே சிவபக்தி கொண்டவனாக வளர்ந்தான்.
பசுக்களை மேய்க்கும் தொழிலை மேற்கொண்டதால் பசுக்கள் இவனை தாங்கள் உயிராக கருதின. மாடு மேய்க்க செல்லும் இடத்தில் மணலில் சிவலிங்கம் வடிப்பது இவனது வழக்கம். மேய செல்லும் பசுக்கள் அதன்மேல் பாலை சுரந்து அபிஷேகம் செய்யும். இவ்வாறு சிவ சேவை செய்த பசுக்கள் வீட்டுக்கு வந்த பிறகும் தங்கள் எஜமானர்களுக்கும் தேவையான பாலை சுரந்து கொடுத்து வந்தன.
ஒருமுறை அந்த ஊர் இளைஞன் ஒருவன் சிவலிங்கம் மீது பசுக்கள் பால் சுரந்ததை பார்த்து விட்டான். அத்துடன், விசாரசருமன் அதை கண்டு கொள்ளாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி ஆனான்.
ஊருக்குள் சென்று நடந்த விவரத்தை தெரிவித்தான். மாடுகளின் உரிமையாளர்கள் இதுகுறித்து எச்சதத்தனிடம் சொல்லி, மகனை கண்டிக்கும்படி கூறினர்.
அவர் உண்மையை அறிய ஒருநாள் மாடு மேய்க்கும் இடத்துக்கு வந்து மறைந்து நின்று கவனித்தார். மாடுகளின் உரிமையாளர்கள் கூறியபடியே மண் லிங்கத்தின் மீது பசுக்கள் பாலை சொரிந்தன. விசாரசருமன், அந்த மணல் லிங்கத்தின் முன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தான்.
அதைப் பார்த்த எச்சதத்தனுக்கு கோபம் வந்து விட்டது. மகனை உதைத்து கண்டித்தார். மேலும், மணல் லிங்கத்தை காலால் மிதித்து உடைத்தும் விட்டார். இதனால் கோபம் அடைந்த அவரது மகன் விசாரசருமன், அவரது கால் மீது தன் கையில் இருந்த குச்சியை எறிந்தான். அது சிவன் அருளால் கோடரியாக மாறி அவரது காலை காயப்படுத்தியது.
அளவு கடந்த பக்தி காரணமாக தந்தையையே தாக்க துணிந்த அந்த அதி தீவிர பக்தன் முன்பு பார்வதி தேவியுடன் தோன்றினார் சிவன்.
எச்சதத்தனின் காயத்தை மறையும்படி செய்தவர், விசாரசருமனுக்கு சிவ கணங்களை நிர்வாகம் செய்ய சண்டிகேச பதவியை வழங்கினார். அதோடு, தனக்கு சூட்டப்படும் மாலை, நைவேத்யம் ஆகியவை அவருக்கே தினமும் வழங்கப்படும் எனவும் அருள்பாலித்தார்.
இதன்படி சிவனுக்கு அணிவித்த மாலையையே சண்டிகேஸ்வரருக்கும் அணிவிக்கும் பழக்கம் இருக்கிறது. சிவன் கோவிலுக்கு வருபவர்கள் சண்டிகேஸ்வரை வணங்காமல் சென்றால் அவர்கள் ஆலயத்துக்கு வந்த பலன் கிடைக்காது என்பது நம்பிக்கை.
சண்டிகேஸ்வரர் சிவ தியான நிலையில் இருப்பவர். இவர் முன் பலர் கை தட்டி வணங்கி சுற்றி வருகின்றனர். இவ்வாறு செய்தால் இவரது தியானம் கலைந்து விடும் என்பது ஐதீகம்.
அதனால் அவர் முன்பு கை தட்டி வணங்காமல் அமைதியாக வணங்குவதே சரியானது. சண்டிகேஸ்வரரை வணங்கினால் மன உறுதியும், ஆன்மிக பலமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
No photo description available.
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...