கருணாநிதி ஆட்சி ஏன் மறைய வேண்டும் என்பதற்க்கான காரணங்கள், அவரவர்க்கும் வேறு வேறாக இருந்தாலும், மாற்றம் தவிர்க்கக் கூடாதது என்ற ஒரு புள்ளியில் இணைந்திருந்தனர். கருணாநிதியின் இன்னுமொரு குடும்பச் சொத்தான, தி.மு.க., தோற்றது. தோற்றது என்ற சொல்லில், தோல்வியின் அசலான கனபரிமாணங்கள் அடங்கவில்லை. தமிழர்கள், தி.மு.க., வையும், அதன் உரிமையாளர்களையும், வங்கக் கடலுக்கு அப்புறம் தூக்கி எறிந்திருக்கின்றனர் என்று சொல்வது, உண்மையை நெருங்கிய சொல்லாக இருக்கும்.
ஆளும் கட்சிக்கு எதிராக ஓட்டளிக்கும் மனநிலையை நாம் அறிவோம். இந்த, தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டளிப்பு, அம்மாதிரியான மனநிலையையும் தாண்டி, அடக்கி வைத்திருந்த அத்தனை ஆக்ரோஷத்தையும் திரட்டி, விரலுக்குக் கொண்டு வந்து, வெஞ்சினத்தோடு தங்கள் தீர்ப்பைத் திட்டவட்டமாக, அழியாத கல்வெட்டு போலப் பதிவு செய்திருக்கின்றனர். தமிழர்கள் பற்றி நாம் பெருமைப்பட, மேலும் ஒரு வரலாற்றுப் புரட்சியை, அவர்கள் பேசாமலேயே நிகழ்த்தியிருக்கின்றனர். வாழ்நாளில் இதுபோன்ற, ஒரு தீர்க்கமான தோல்வியைச் சந்தித்திராத கருணாநிதி, தோல்வியை ஏற்று என்ன சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்தேன்.
ஒரு அசலான வீரன், தான் தோற்கடிக்கப்பட்ட போது, என்ன சொல்வான்? எப்படி நடந்து கொள்வான்? தன் எதிரியின் வீரத்தை வியப்பான். தன் தோல்வியை அடக்கமாக ஒப்புக் கொள்வான். இடத்தைக் கவுரவமாக எதிரிக்கு விட்டுக் கொடுப்பான். கருணாநிதி வீரர் இல்லை; எனக்குத் தெரியும். வீரர் அல்லாதவர் என்ன கூறுவர் என்று அறிய விரும்பினேன். கருணாநிதி சொன்னார்... "மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்திருக்கின்றனர்; அவர்கள் வாழ்க!' தமிழர்களுக்குச் சாபம் இட்டார் கருணாநிதி. வயிறு எரிந்து அவர்களை ஒழிந்து போகச் சொன்னார். "அவர்கள் வாழ்க' என்ற வார்த்தைகளில், அறியாமை மட்டுமல்ல, அகம்பாவம், ஆணவம், அதீத கோபம் எல்லாம் இருந்தன.
தலைமைப் பொறுப்புக்குத் தகுதி இல்லாத தலைவர் என்பதை, கருணாநிதியே, வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதே சூழ்நிலையில், 1967ம் ஆண்டு காமராஜர் இருந்தார். மாபெரும் தோல்வியை அவர், அப்போது சந்தித்தார். அப்போது, காமராஜரைச் சந்திக்கச் சென்ற தியாகி சத்தியமூர்த்தி மகனும், இலக்கியப் பதிப்பாளரும், பின்னர் ஸ்தாபன காங்கிரஸ் தலைவராக இருந்த லட்சுமி கிருஷ்ணமூர்த்தியிடம், காமராஜர் சொன்னார்... "எதுக்காக வருத்தப்படறேம்மா... முதல்வர் நாற்காலி என்ன நமக்கே சொந்தமா? மக்கள் நம்மை வேண்டாம்கிறாங்க; அதை ஏத்துக்குவோம். அதுதானே ஜனநாயகம். அதுக்குத்தானே வெள்ளைக்காரன்கிட்டே நாம போராடினோம். நம்ம தப்பைத் திருத்திக்கிடுவோம். அப்புறம் மக்கள்கிட்ட போவோம்...' என்றாராம். இது, லட்சுமி கிருஷ்ணமூர்த்தியே எங்களிடம் சொன்னது. காமராஜர் தலைவர்.
கருணாநிதியை, இறுகிய ஒருமைப்பாட்டோடு, தமிழ் மக்கள் தோற்கடித்தமைக்கு, பலரும், பல காரணங்களைக் கூறினர். மிக முக்கியமான காரணமாக, நான் கருதுவது இது: மனிதர்கள் எத்தனை ஏழ்மை நிலையிலும் இருக்கலாம்; பிறரை அண்டிப் பிழைக்கும் நிலைமையும் சிலருக்கு நேரலாம். தத்தம் தகுதிக்கும் கீழான காரியங்களைத் தவிர்க்க முடி யாமல் செய்ய நேரலாம். ஆனாலும், மனிதர்கள் சுயமரியாதை உள்ளவர்கள்.
ஒரு தொலைக்காட்சி பெட்டிக்கும், உண்ண முடியாத அரிசிக்கும், இலவசமாக வழங்கப்படும் பொருட்களுக்கும், தம்மை விற்றுக்கொள்ள அவர்கள் மறுத்து விட்டனர். தேர்தல் எனும் மிக முக்கியமான கட்டத்தில், மக்களிடம் மனிதப் பண்புகள் வெளிப்பட்டு மீண்டெழுந் தன. மக்கட்பண்பு என்பது, மான உணர்வின் வெளிப்பாடு. நீங்கள் விலை கொடுத்து வாங்கி, ஓட்டிக் கொண்டு போக, நாங்கள் நாய்க்குட்டியோ, ஆட்டுக்குட்டியோ அல்லர் என்று, அவர்கள் முடிவு எடுத்தனர்.
கருணாநிதியின் புறமுதுகைக் கண்டனர். தவிரவும், இலவசங்கள் எங்கிருந்து வந்தன? வானம் பொத்துக் கொண்டு, அவை விழவில்லை. தி.மு.க., தலை வர், தம் சொந்தப் பணத்தில் இருந்து அந்தப் பொருட்களை வாங்கி, "இலவசமாக' மக்களுக்குத் தரவில்லை. மக்கள் பணத்திலிருந்து பொருட்களை வாங்கி, மக்களுக்குத் தருவதற்குப் பெயர் இலவசமா?
மக்கள் தரிசனத்தோடு கூடிய, தம் காலத்துக்கும், எதிர்காலத்துக்கும் பொருந்தும் வளர்ச்சித் திட்டங்களை எதிர்பார்த்தனர். அன்பில்லாத இலவசம், மக்களுக்குப் புரிந்தது. இலவசங்களைப் பெற்றவர்கள், பதிலுக்கு ஓட்டைத் தருவர் என்று, கருணாநிதி எதிர்பார்த்திருந்ததும், மக்களுக்குப் புரிந்தது.
"எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே' என்று சொன்ன மலைக்கள்ளனுக்குப் புரிந்த உண்மை, மக்களுக்குப் புரியாதா என்ன?
வரலாறு அறியாத அந்த ஊழல் மேகம் ஒன்று திரண்டு, கரிய மேகமாகவும், கூரிய வாளாகவும், அவர் வீட்டுக் கதவைத் தட்டிய போது, தரமற்றதும், தகுதி குறைந்ததுமான வார்த்தைகளை, கருணாநிதி சிதறத் தொடங்கினார்.
அதிகாரத் தரகரோடு, அவர் இல்லத்துப் பெண்கள் பேசியது, "வெறும் இரண்டு பெண்கள் பேசுகிற பேச்சு இது' என்றார். யார் வீட்டுப் பெண்கள், மத்திய அமைச்சர் பதவியில், யாரை நியமிப்பது என்று பேசுகின்றனர்? அவர் பெண் மீது விசாரணை அறிக்கை குற்றம் சுமத்தியது பற்றி, ஒரு பெண் நிருபர் கேள்வி எழுப்பினால், "உனக்கு இதயம் இல்லையா? நீயும் பெண்தானே?' என்கிறார். இதயம் இருப்பதன் அடையாளம், கேள்வி கேட்காமல் இருப்பது என்கிறார் கருணாநிதி அல்லது அவரது பெண்ணைப் பற்றி, இன்னொரு பெண் பேசக் கூடாது என்கிறாரா அவர்? ஒரு நிருபர், இதைக் கேட்காமல், வேறு எதைக் கேட்பார்?
ஈழத் துயரின் உச்சமான, முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு, முன்னும் பின்னும் கூட, முன்னாள் முதல்வர், தன் மேஜை மேல் இருக்கும் குண்டூசிகளைக் கூட நகர்த்த முயற்சிக்கவில் லை. அவமானங்களையும், புறக்கணிப்பையும் பொறுத்துக் கொண்டு, டில்லியில் அவர் இருந்த நாட்களில், பதவிகளைப் பெறப் போராடிக் கொண்டிருந்த அந்தக் கணங்களைக் காட்டிலும், தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அவர் பட்டபாடு மிகப் பரிதாபகரமானது.
மிகவும் நகைச்சுவையும், மிகப் புதுமையும் கொண்ட நாடகம் ஒன்றை, நிகழ்த்திக் காட்டினார் அவர். அதுவே, கடற்கரையில் காலை உணவுக்குப் பின் னும், மதிய உணவுக்கு முன்னும் அவர் மேற்கொண்ட, மூன்றே முக்கால் மணி நேர உண்ணாவிரதம். "ஈழம் கிடைத்து விட்டது...' என்று புறப்பட்டார். மக்கள் இதையும் மனதில் கொண் டனர்.
அவர் ஆட்சிக் காலத்தில், தமிழக மீனவர்கள் படுகொலை, இலங்கை ராணுவத்தால் தொடர்ந்து நடைபெற்றது. அதிகபட்ச எதிர்ப்பாக, பட்டுத் துணியில், சந்தனத்தில் தொட்டு எழுதி, புறாக்காலில் கட்டிக் கடிதம் அனுப்பினார் பிரதமருக்கு.
கருணாநிதியின் தி.மு.க.,வை தோற்கடிக்க, 100 காரணங்கள் மக்களுக்கு இருந்தன. விலைவாசி உயர்வு, கோவை, திருப்பூர், ஈரோடு தொழி லாளர்களின் பனியன் மற்றும்சாயத் தொழிற்சாலைப் பிரச்னை, சிறு தொழிற்சாலைகளைக் கொன்று விட்ட மின்வெட்டு, தமிழகக் கிராமங்களில் நிகழ்ந்த, நான்கு முதல், ஆறு மணி நேரம் நீண்ட மின்வெட்டுகள்.
எல்லாவற்றுக்கும் மேலே, இவர்கள் மீண்டும் வேண்டாம் என்று, மக்கள் வந்து சேர்ந்த இறுதி முடிவு. கருணாநிதிக்கு, இடதிலும், வலதிலும் நின்றிருந்த சிறுத்தைகளையும், பாட்டாளிகளையும் கூடத் தமிழக மக்களின் கசப்புணர்வு தொட்டுத் தோல்வியுறச் செய்தது. மூன்றாவது கட்சியோ, அணியோ இல்லாத தமிழகத்தில், இப்படித்தான் முடிவுகள் இருக்க முடியும். ஜெயலலிதாவுக்கு தி.மு.க., தோல்வியில் கற்பதற்கு நிறையவே இருக்கிறது.
No comments:
Post a Comment