2G ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கலைஞர் தொலைக் காட்சிக்கு 214 கோடி ரூபாய் கைமாற்றப்பட்ட பணவிவகாரத்தில் திமுக எம்பி கனி மொழி மற்றும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை தில்லி உயர்நீதிமன்றம் இன்று புதன் கிழமை தள்ளுபடி செய்தது.
‘குற்றவாளிக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. குற்றச்செயலில் அவரின் பங்கை ஆராய்ந்து பார்த்து ஜாமீன் மனுவை நிராகரிப்பதாக’ நீதிபதி அஜித் பாரிஹோக் தெரிவித்தார்.தீர்ப்பு வாசிக்கப்படும்போது கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் நீதிமன்றத்தில் இருந்தனர்.
ஜாமீன் மனு நிராகரிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்ததும் ராஜாத்தி அம்மாள் கண்ணீர் விட்டு அழுததாக தில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தீர்ப்பை விட விசித்திரமான விஷயம் சிறைச்சாலை எங்களை என்ன செய்துவிடும் என்று வெற்று வசனம் பேசி வளர்ந்தவர்களின் வாரிசுகள், விசாரணைக் கட்டத்திலேயே ஜாமீன் மறுக்கப்படும் போதெல்லாம் அழுது புலம்பிக் கண்ணீர் விடுவதுதான்! வலி, நோவு தனக்கு வந்தால் தானே தெரியும் என்று தெரியாமலா சொன்னார்கள்!
கூடாநட்பு கேடு தரும் என்று தனக்கு நெருக்கடி வந்தபிறகு மட்டுமே புரிந்து கொண்டு, காங்கிரசைக் குத்திக்காட்டிப் பேசுவதைத் தவிர கருணா நிதியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. திமுக தலைவரின் வேதனையைப் புரிந்துகொள்கிறோம்,அதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாது என்று குலாம் நபி ஆசாத் பதில் சொன்னாலும் கூட, கூட்டணி தர்மத்தை ஒரு குறைந்த பட்ச அளவுக்காவது காங்கிரஸ் காப்பாற்றி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.இருபது சதவீதப் பங்காளிகள் சிபிஐ விசாரணை, வழக்கை எதிர்கொள்ள வேண்டி வந்தாலும், அறுபது சதவீதம் வைத்திருக்கும் தயாளு அம்மாளை விசாரணை வழக்கில் சிக்க வைக்காமல் இன்னமும் விட்டு வைத்திருக்கிறார்களே!
நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன்னால் திங்களன்று சிபிஐ இயக்குனர் ஆஜராகி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விளக்கம் அளித்த போது, தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர்களின் பெயர், பங்கை விவரிக்க முற்பட்டதில், திமுக உறுப்பினர் டி ஆர் பாலு பெயரை சொல்ல வேண்டாம் என்று ஆட்சேபித்ததாகத் தகவல்கள் சொல்கின்றன. நீதிமன்றத்தில் ஆஜரான ஆ.ராசா, கனிமொழி, சரத்குமார் இவர்கள் அருகில் அமர்ந்து டி ஆர் பாலு ஜேபிசி விசாரணையில் நடந்ததை ஒப்பித்ததாகவும் தகவல்கள் சொல்கின்றன. கூட்டணி தர்மத்தை, காங்கிரஸ் முற்றிலும் கைகழுவி இருந்தால், இதெல்லாம் சாத்தியமாகி இருக்குமா?
அதே திங்களன்றுதான் ஏர்செல் நிறுவனத்தின் முன்னால் அதிபர் சிவசங்கர் சிபிஐ தலைமையிடத்தில் ஆஜராகி,தயாநிதி மாறன் கட்டாயப் படுத்தியதால் தான் தன்னுடைய நிறுவனத்தை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க நேரிட்டதாக வாக்குமூலம் அளித்திருக்கிறார். தயாநிதி உடனடியாக மறுப்புத் தெரிவித்தாலும், அவரை நம்புவார் எவருமில்லை. தானாகவே மந்திரிசபையில் இருந்து ராஜினாமா செய்துவிடும்படி அவருக்குக் குறிப்பால் உணர்த்தப் பட்டிருப்பதாக, வேண்டுமென்றே தகவல்கள் கசிய விடப் பட்டுக் கொண்டிருக்கின்றன.
தயாநிதி மாறன் திஹார் சிறையில், கனிமொழி, ஆ.ராசா இவர்களுடன் கம்பனி கொடுக்க வேண்டிய கட்டாயத்தை கொஞ்சம் ரசனையுடனேயே அரங்கேற்றிக் கொண்டிருப்பது போலத்தான் நிகழ்வுகள் சுட்டுகின்றன.
இதுதான் கூட்டணி தர்மமா என்று கேட்கிறீர்களா?
"கூட்டணி தர்மம்" என்றால், கூட்டுக் கொள்ளையில் பிரச்சினை, சிக்கல் எதுவும் இல்லாத போதுதான்!மாட்டிக் கொள்கிற நேரம் வரும்போது காங்கிரஸ் கட்சி கையாளுகிற "தர்மமே" வேறுதான்!
இதுதான் கூட்டணி தர்மமா என்று கேட்கிறீர்களா?
"கூட்டணி தர்மம்" என்றால், கூட்டுக் கொள்ளையில் பிரச்சினை, சிக்கல் எதுவும் இல்லாத போதுதான்!மாட்டிக் கொள்கிற நேரம் வரும்போது காங்கிரஸ் கட்சி கையாளுகிற "தர்மமே" வேறுதான்!
கூட்டுக் களவாணிகளை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற வேண்டிய தருணம் இது!
இன்றைக்கு நம்மோடு வாழும், சிறந்த நாடாளுமன்ற நடைமுறைகளை நன்கறிந்தவர், பண்புள்ள அரசியல்வாதி என்று தேடிப்பார்த்தால் திரு இரா செழியன் பெயர் தான் நினைவுக்கு வரும். முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னாள், இந்திரா காண்டி கொண்டுவந்த அந்தக் கறுப்பு தினங்கள், எமெர்ஜென்சி என்று நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டு அமலில் இருந்த இருபது மாதங்களின் நினைவுகளை, ஆவணப்படுத்தி ஒரு நூல் எழுதியவர்.
நாவலர் என்றால் நாவன்மையில் சிறந்தவர் என்றுதானே நினைப்பீர்கள்? திராவிட இயக்கங்கள் தலைஎடுத்தபோது தலைகீழான அர்த்தங்கள் தான் முன்னுக்கு வந்தன.
அரசியலில் உளருவாயனாக இருந்த நெடுஞ்செழியன், நாவலரானதும், ஏதோ ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக ஒரு மூலையில் இருந்தவர் பேராசிரியரானதும், இரட்டை அர்த்தம்,கிறுத்திருவமான கொச்சைமொழி வசனங்கள் எழுதியே கலைஞராகி, முத்தமிழ் வித்தகரான கொடுமையும் நடந்த காலங்களில், திராவிட இயக்கத்தில் இருந்து 1972-1976 காலங்களில் திமுகவின் நாடாளுமன்றக் குழுவின் தலைவராகவும், வெளியேறி வந்து ஜெயப்ரகாஷ் நாராயணன் அமைத்த தேசீய ஒருங்கிணைப்புக் குழுவிலும், ஜனதா கட்சியை நிறுவியவர்களில் ஒருவராகவும் ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் குழுவிலும் இருந்து தேசீய உணர்வோடு செயல்பட்ட சிறந்த நாடாளுமன்றவாதி திரு இரா.செழியன்!
"நாவலர்" நெடுஞ்செழியனின் இளவல் என்று அறிமுகப்படுத்துவது, செழியனுக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்காது என்றாலும், உண்மை.அது தான்!
இன்றைக்கு தினமணி நாளிதழில் திரு இரா.செழியன் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரை, இந்தப்பக்கங்களுக்கு வருகிற ஒவ்வொரு வாசகரும் அவசியம் படிக்க வேண்டியது, படிப்பதோடு பிறருக்கும் எடுத்துச் சொல்லப் படவேண்டியது என்று கருதுகிறேன்.
"நாவலர்" நெடுஞ்செழியனின் இளவல் என்று அறிமுகப்படுத்துவது, செழியனுக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்காது என்றாலும், உண்மை.அது தான்!
இன்றைக்கு தினமணி நாளிதழில் திரு இரா.செழியன் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரை, இந்தப்பக்கங்களுக்கு வருகிற ஒவ்வொரு வாசகரும் அவசியம் படிக்க வேண்டியது, படிப்பதோடு பிறருக்கும் எடுத்துச் சொல்லப் படவேண்டியது என்று கருதுகிறேன்.
கறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்!
இரா.செழியன்
First Published : 08 Jun 2011 02:31:28 AM IST
இரண்டாம் உலகப் போர் (1939 - 1945) நடைபெற்ற காலத்தில், இந்தியாவில் மக்களுக்குத் தேவையான பல்வேறு பொருள்களின் உற்பத்தி குறைந்து, விலைவாசிகள் ஏறிய நிலையில் கள்ள மார்க்கெட் தோன்றியது.
அதன் விளைவாக, கள்ள மார்க்கெட் விற்பனைகளில் கிடைக்கும் பணம், வரி வருமானத்தில் காண்பிக்கப்படாமல், கறுப்புப் பணமாக வளர ஆரம்பித்தது.
ஊழலும், கள்ளப்பணமும் பெரும்பாலாக அரசாங்க அதிகாரிகளிடம் பெருகிவருவதைக் கண்ட பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் தலைமையிலான அரசாங்கம், 1947-ல் ஊழல் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றியது.
அதன் பிறகு, 1956-ல் கே. சந்தானம் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தந்த அறிக்கையின் மீது, ஊழல் கண்கானிப்புக் குழு அமைக்கப்பட்டது. 1965-ல் மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்த நிர்வாகச் சீர் திருத்தக் குழுவின் அறிக்கையில், சுவிடன் நாட்டிலுள்ள ஆம்பட்ஸ்மன் அமைப்பைப்போல இந்தியாவிலும், ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைக் கண்காணிக்கத் தக்க அமைப்பு உருவாக வேண்டும் என்று பரிந்துரை செய்தது.
ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, 1969-ல் மத்திய அரசாங்கம் லோக்பால் மசோதாவைக் கொண்டுவந்தது. ஆனால், அது சட்டமாக நிறைவேற்றப்படவில்லை. அதேபோல் 10 தடவைகள் லோக்பால் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு சட்டமாக நிறைவேற்றப் படாமல் போயின.
ஆயினும், அரசாங்க நிர்வாகத்திலும், பல்வேறு பொது துறைகளிலும், ஊழல் நடவடிக்கைகள் மிக வேகமாகப் பரவி, கடைசியாக 2008-ல் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள பிரம்மாண்டமான 2ஜி அலைவரிசை ஊழல் வெளிப்பட்டது. இது இந்திய மக்களிடம் பலமான கண்டனத்தையும், பயங்கரமான அச்சத்தையும் உண்டாக்கியது.
காந்திய வழியில் உண்ணாவிரத முறையை மேற்கொண்டு மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அண்ணா ஹசாரே பொதுமக்களின் ஆதரவைத் திரட்ட ஆரம்பித்தார். அதனால் 40 அரசாங்க அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலம் வெற்றி பெற்றார்.
மகத்தான 2ஜி ஊழல் இந்தியா முழுவதிலும் பெறும் அதிர்ச்சியை உண்டாக்கிய நேரத்தில், ஊழல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான ஒரு வலுவான சட்டத்தை உருவாக்க வேண்டுமென்று, 2011 ஏப்ரல் 5-ம் தேதி புதுதில்லியில் ஜந்தர் மந்தர் மைதானத்தில் சாகும்வரை உண்ணா விரதத்தை அண்ணா ஹசாரே மேற்கொண்டார்.
இதற்கு நாடெங்கும் பேராதரவு வளர்ந்த நிலைமையில், அண்ணா ஹசாரேயின் உண்ணாவிரதம் புரட்சிகரமான நிலைமையை, நாட்டில் ஏற்படுத்தும் என்பதற்கு அஞ்சி, புதியதொரு லோக்பால் மசோதாவை உருவாக்கிட, அண்ணா ஹசாரே அமைப்பின் சார்பில் ஐந்து பேர்களும், அரசாங்கம் சார்பில் 5 மந்திரிகளும், அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
2011 ஆகஸ்டு 15-க்குள் ஊழலை அடக்குவதற்கான வலிவான சட்டம் நிறைவேற்றப் பட்டாக வேண்டும் என்பதில் அண்ணா ஹசாரே கண்டிப்பாக இருக்கிறார்.
புதிய லோக்பால் மசோதாவின் கூட்டுக் குழுவில் இதுவரை நிகழ்ந்துள்ள பேச்சுகளும், உடன்பாடுகளும் இன்னமும் தெளிவு படவில்லை. கர்நாடக லோக் ஆயுக்தா சட்டத்தின்கீழ், மாநில முதல்வரின் மீது புகார்கள் வந்தால் அவற்றையும், ஆய்வு செய்யக் கூடிய அதிகாரம் லோக் ஆயுக்தா நீதிபதிக்குத் தரப்பட்டிருக்கிறது.
அதே வகையில் மத்திய லோக்பால் சட்டத்திலும், பிரதம மந்திரியின் மீது வரும் குற்றச்சாட்டுகளையும் விசாரிப்பதற்கான அதிகாரம் தரப்பட வேண்டுமென்று அண்ணா ஹசாரே குழுவினர் வற்புறுத்துகின்றனர்.
ஹசாரே குழுவினர் தரும் கண்டிப்பான வேண்டுகோள்களைச் சமாளிக்க முடியாமல் பிரதம மந்திரியும், காங்கிரஸ் தலைவரும் மற்ற மந்திரிகளும் தடுமாறும் நிலையில், யோகி ராம்தேவ் அறிவித்த மற்றொரு உண்ணாவிரதப் போராட்டமும், மத்திய மந்திரி சபையை அலைக்கழித்துள்ளது.
இந்தியாவில் பரவியிருக்கும் கறுப்புப் பணத்தையும், வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் மறைத்து வைத்திருக்கும் கள்ளப் பணத்தையும், இந்திய அரசாங்கம் திரும்பப் பெறவேண்டும் என்பதை வலியுறுத்தி, 2011 ஜூன் 4-ம் தேதி "சாகும்வரை உண்ணாவிரதம்'' இருக்கப்போவதாக பாபா ராம்தேவ் அறிவித்தார். ஹசாரே இருந்த உண்ணாவிரதத்துக்கு அடுத்த படியாக, ராம்தேவ் உண்ணாவிரதமும் பெருத்த கிளர்ச்சியை பொது மக்களிடம் உண்டாக்கும் என்ற அச்சம், மத்திய மந்திரிகளுக்கு ஏற்பட்டு விட்டது.
எப்படியாவது பாபா ராம்தேவை அமைதிப்படுத்தி, ஹசாரே குழுவில் இருந்து அவரைப் பிரித்துவிட மத்திய மந்திரிகள் முடிவுசெய்தனர்.
தில்லிக்கு விமானம் மூலம் ஜூன் 1-ம் தேதி வந்த பாபாவை வரவேற்க பிராணப் முகர்ஜி, வசந்த் பன்சால், கபில் சிபல், சுபோத்காந்த் சகாய் ஆகிய நான்கு மாமந்திரிகளும் தில்லி விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
மிக ஆடம்பரமான முறையில் ராஜ மரியாதையுடன் நான்கு மந்திரிகளும் வரவேற்று, மகிழ்ச்சியுடன் உரையாடி அவருடைய ஆலோசனைகளைக் கேட்டு வேண்டுகோள்களுக்கு இணங்கி அரசாங்கம் நடந்து கொள்ள இருப்பதால், ராம்தேவ் உண்ணா விரதம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கேட்டுக்கொண்டார்கள்.
பாபா ராம்தேவுக்கு மந்திரிகள் தந்த சிவப்புக் கம்பள வரவேற்பைப் பத்திரிக்கையாளர்களும், காங்கிரஸ் தலைவர்கள் உள்பட்ட பலரும் மிக ஆச்சரியத்துடன் கவனித்தனர். ஜூன் 1-ம் தேதி முதல் ஜூன் 3-ம் தேதி முடிய மத்திய மந்திரிகள் அடுத்தடுத்து வந்து பாபா ராம்தேவிடம் உரையாடினார்கள். அமைதி காப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றன. இருப்பினும் யோகி ராம்தேவிடம் அவர்களுடைய வேண்டுகோள்கள் பலன் தரவில்லை.
முடங்கிக் கிடக்கும் கறுப்புப் பணத்தை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் கண்டிப்பான உத்தரவை வெளியிட்டால் ஒழிய, ஜூன் 4-ம் தேதி உண்ணாவிரதத்தைத் தாம் மேற்கொள்வதில் எத்தகைய மாறுதலும் இல்லை என்று பாபா கூறிவிட்டார். ராம்தேவ் எடுக்கும் முயற்சிக்கு தமது முழு ஆதரவு இருப்பதாக அண்ணா ஹசாரே அறிவித்தார்.
கடைசி முயற்சியாக, கபில் சிபல், சுபோத் காந்த் சகாய் ஆகிய இரு மந்திரிகளும் யோகி ராம்தேவை தில்லியில் உள்ள உயர்தர ஐந்து நட்சத்திர கிளாரிட்ஜ் ஹோட்டலுக்கு அழைத்துக்கொண்டு போய், நான்கு மணிநேரத்துக்கு மேல் பேசிப் பார்த்தார்கள். அதற்கும் பலனில்லை.
இதற்குள் தில்லி ராம்லீலா மைதானத்தில் ஏராளமான ராம்தேவ் ஆதரவாளர்கள் குவிந்துவிட்டனர். முதலில் அறிவித்தபடி, ஜூன் 4-ம் தேதி இரவு ராம்தேவ் குரு தமது உண்ணாநோன்பை ஆரம்பித்தார். அங்கு காத்திருந்த அவருடைய ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் அந்த நோன்பில் கலந்து கொண்டனர். இரவு 1 மணிக்குப் பிறகு திடீரென தில்லி போலீஸ் பட்டாளம் ராம்லீலா மைதானத்துக்குள் அணிவகுத்து வந்தது. உண்ணா விரதம் இருக்கும் பாபா ராம்தேவை அழைத்துச் செல்ல முற்பட்டனர்.
144 தடை உத்தரவு போடப்பட்டிருப்பதாக அறிவித்து, கூடியிருந்த கூட்டத்தைக் கலைக்க போலீஸாரின் தடியடி தர்பார் நடைபெற்றது. கண்ணீர்ப் புகை வீசப்பட்டது. அடிபட்டவர்கள், உதைபட்டவர்கள், ரத்தக் களரியில் சிக்கியவர்கள் தரையில் தள்ளப்பட்டனர். கடைசியில் ராம்லீலா மைதானத்தை விட்டு, பாபா ராம்தேவைப் போலீஸார் வெளியே கடத்திச்சென்று மறுநாள் காலை ஹரித்வாரில் விட்டார்கள். 15 நாள்களுக்கு அவர் தில்லிக்குள் வர தடை போடப்பட்டது.
ஜூன் 5-ம் தேதி காலையில் மத்திய மந்திரி சுபோத் காந்த் சகாய் நிருபர்களிடம் கூறியதாவது: "ராம் தேவுடன் இனி எந்தப் பேச்சு வார்த்தையும் நடத்துவதாக இல்லை. வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கறுப்புப் பணத்தைக் கொண்டுவர மத்திய அரசு ஏற்கெனவே நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ராம்தேவ் முழுக்க முழுக்க அரசியல்வாதிபோல் செயல்பட்டு வருகிறார்'.
இதுபற்றிக் கபில் சிபல் கூறியதாவது, "ராம்லீலா மைதானத்தில் யோகா நடத்தவும், ஐந்தாயிரம் பேர் வரை கூடுவதற்கும் மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.இவற்றையெல்லாம் மீறி அவர் செயல் பட்டிருக்கிறார். யோகா மேடையை அரசியல் மேடையாக்கிவிட்டார். சட்டம், ஒழுங்கை நிலை நாட்டவே அவர்மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. 4-ம் தேதி மாலை 4 மணிக்கு அவர் எங்களுடன் பேசுகையில் உண்ணாவிரதத்தை நிறுத்திக்கொள்வதாக உறுதியளித்தார். ஆனால் 5 மணிக்கு மறுத்துவிட்டார்”.
.
இவ்வாறு பல்வேறு வகைகளில் 4-ம் தேதி நடைபெற்ற போலீஸ் நடவடிக்கைகளுக்கு மத்திய மந்திரிகள் பொறுப்பற்ற முறையில் சமாதானம் கூற ஆரம்பித்துவிட்டனர்.
ராம்தேவ் ஓர் அரசியல்வாதிபோல செயல்பட்டிருக்கிறார் என்று மத்திய மந்திரி சுபோத் காந்த் சகாய் கூறியிருக்கிறார்.இந்தியாவில் ஒரு தனிப்பட்ட மனிதர் அரசியல்வாதிபோல செயல்படுவது எந்தச் சட்டப்படி குற்றம் என்று அவர் விளக்கினால் நல்லது.
ஜூன் 1-ம் தேதி தில்லி விமான நிலையத்தில் மத்திய மந்திரிகள் நான்கு பேர் காத்திருந்து சிவப்புக் கம்பளத்தை விரித்து அவரை வரவேற்றார்களே, அதன்பிறகு ஜூன் 4-ம் தேதி காக்கிச் சட்டைப் போலீஸாரை அனுப்பி ராம்லீலா மைதானத்திலிருந்து குண்டுக்கட்டாக அவரையும் மற்றவர்களையும் இழுத்துச் சென்றார்களே, இது எந்தச் சட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது?
ஜூன் 4-ம் தேதி நள்ளிரவில் ராம்லீலா மைதானத்தில் அமைதியாகக் கூடியிருந்த கூட்டத்தின்மீது போலீஸார் நடத்திய தடியடி, கண்ணீர் புகை மூலம் விரட்டியடித்தது ஜனநாயக முறைக்கு மாறுபட்ட - சட்டம் - நீதி - நேர்மைக்கு விரோதமான - செயல்பாடு என்று சட்ட நிபுணர்களும், பத்திரிகையாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கூடியிருந்த மக்களைப் போலீஸார் அடித்ததும், தரையில் இழுத்துச் சென்றதும், மருத்துவமனைகளில் ரத்தக் காயங்களுடன் சேர்க்கப் பட்டதும் பற்றிய படங்கள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக, ராம்லீலா மைதானத்தில் போலீஸார் நடத்திய விபரீதமான செயல்பாடுகளைப் பற்றி, செய்திகள் மூலம் கவனித்த உச்ச நீதிமன்றம் தாமாகவே, விசாரணை நடத்த முன்வந்துள்ளது.
நாட்டில் சட்டம் - அமைதி - நீதி - நேர்மை ஆகியவற்றைப் பாதுகாக்க அரசாங்கம் இருக்கிறது. அதற்கு மாறாக, சட்டத்தை மீறி, அமைதியைக் குலைத்து, நேர்மையற்ற முறையில் அநீதியான ஆட்சியை நடத்த ஓர் அரசாங்கம் முற்பட்டால், அத்தகைய காட்டாட்சி முறையை நீக்கிட மக்களின் எழுச்சிமிக்க புரட்சி வெடித்து எழும் என்பது உலக வரலாற்றில் பல நாடுகளில் நடைபெற்றது என்பது அடிப்படை அரசியல் பாடமாகும்.
இந்தியாவிலும் அத்தகைய அரசியல் பாடம் ஆரம்பிப்பதற்கான கட்டாயம் ஏற்பட்டு விட்டதாகத் தோன்றுகிறது.
No comments:
Post a Comment