Wednesday, June 8, 2011

பதவி பறிபோகும் நாள் வெகு தொலைவில் இல்லை?

 
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் நடந்த இமாலய ஊழல் தொடர்பான விசாரணை, தனது சிறகுகளை பின்னோக்கி விரிக்க, முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சரும், இந்நாள் ஜவுளித்துறை அமைச்சருமான தயாநிதி மாறனுக்கு வியர்க்கத் தொடங்கியுள்ளது.

2001ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் கடைபிடிக்கப்பட்ட கொள்கைகள், உரிமத்திற்கு விலை நிர்ணயிக்கப்பட்ட முறை ஆகியவற்றை மத்திய புலனாய்வுக் கழகம் தோண்டத் தொடங்கியதும் அதுவரை பாதுகாப்பான அமைச்சராக இருந்த தயாநிதியை இறந்த காலம் துரத்தத் தொடங்கியது.

ஏர்செல் நிறுவனம் கைமாறிய விவகாரத்தில் தயாநிதியின் அழுத்தம் இருந்தது என்று அந்நிறுவனத்தின் நிறுவனர் சி.சிவசங்கரன் ம.பு.க. விசாரணையில் அளித்த வாக்குமூலம் தயாநிதி மாறனின் அமைச்சர் பதவிக்கு உலை வைத்துவிட்டது என்று டெல்லி வட்டாரங்கள் சங்கு ஊதுகின்றன. ஏர்செல் நிறுவனத்திற்கு முதலில் (சிவசங்கரன் கையில் இருந்தபோது) 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யாமல் அலைக்கழித்த அன்றைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அந்நிறுவனத்தின் 74 விழுக்காடு பங்குகள் மலேசியாவின் மாக்சிஸ் கம்யூனிகேஷனுக்கு கைமாறிய பிறகு 14 தொலைத் தொடர்பு வட்டங்களுக்கு 2ஜி ஒதுக்கீடு அளிக்கப்பட்டதும், அதற்குக் கைமாறாக, கலாநிதி மாறனின் சன் நெட்வொர்க் நிறுவனத்தில் ரூ.599 கோடிக்கு மாக்சிஸ் முதலீடு செய்ததும், பிறகு அதே நிறுவனம் கலாநிதி மாறன் வாங்கிய ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் மேலும் 200 கோடி ரூபாய் முதலீடு செய்ததும் முறைகேடு நடந்ததற்கு ஆதாரங்களாகியுள்ளது.

“மாக்சிஸ் முதலீட்டால் எனக்கு எந்த இலாபமும் இல்லை” என்று தயாநிதி கூறினாலும், அதனால் தனது சகோதரனின் சன் நெட்வொர்க்கிற்கு இலாபமில்லையா? என்ற வினாவிற்கு பதில் கூற முடியவில்லை. இந்த விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியதுமே, முதலில் சோனியாவையும், பிறகு மன்மோகன் சிங்கையும் சந்தித்து தன்னிலை விளக்கமளித்தார் தயாநிதி மாறன் என்று கூறப்படுகிறது. ஆனால், “அவர்கள் சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்று கூறியதும், தான் கைவிடப்பட்டதை உணர்ந்தார். ஏனெனில் தயாநிதி விடயத்தில் தி.மு.க. தலைமை கொஞ்சமும் ‘கருணை’ காட்டவில்லை.

இதில் மிக நகைச்சுவையாக கேட்கப்படும் வினாவும் உள்ளது. அது “ரூ.200 கோடிக்கே திகாரில் இருக்கும்போது, ரூ.700 கோடிக்கு அங்கே இடமிருக்காதா?” என்பதே. அது மட்டுமின்றி, 2ஜி அலைக்கற்றை ஊழலில் படாத பாடுபட்ட ஆ.இராசா, தான் எடுத்த முடிவுகள் அனைத்தும், ஏற்கனவே நடைமுறையில் இருந்த கொள்கை, வழிமுறைகளின் அடிப்படையில்தான் என்று கூறியதை ம.பு.க. மிகத் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

அதன் புலனாய்வின்படி, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தொலைத் தொடர்பு அமைச்சகத்திற்கு இந்த அளவிற்கு ‘கொள்கை சுதந்திரத்தை’ பெற்றுத் தந்தவரே தயாநிதிதான் என்பது தெரியவந்துள்ளது. அதனால்தான் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு நடத்திவரும் விசாரணையில் பங்கேற்ற ம.பு.க. இயக்குனர் ஏ.பி.சிங், 2001ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை அமைச்சர்களாக இருந்தவர்கள் காலத்தில் எப்படியெல்லாம் ஒதுக்கீடு கொள்கைகள் வசதியாக வளைக்கப்பட்டன என்பதை ஆராய்து வருவதாக குறிப்பிட்டார். அப்போது அமைச்சர்கள் பெயரையும் கூறி அவர் விளக்கினார். தயாநிதி மாறனின் பெயரை உச்சரிக்கும்போது, நா.கூ.கு.வில் இடம் பெற்றுள்ள டி.ஆர்.பாலு கோபத்துடன் தலையிட்டுள்ளார். பெயர் கூறுவதை தடுத்துவிட்டால் மட்டும் காப்பாற்றிவிட முடியுமா என்று கேட்கிறது டெல்லி வட்டாரம்.

எப்போதுமே, ஆட்சிக்கு ஆபத்து என்றாலோ அல்லது அவப்பெயர் என்றாலோ களப்பலி கொடுத்து அதனை காப்பாற்றிக்கொள்வது என்கிற காங்கிரஸின் கொள்கைப்படி, விரைவிலேயே, அதாவது வழக்குப் பதிவான உடனேயே, தயாநிதியை பதவி விலகுமாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி வாயிலாக காங்கிரஸ் தலைமை தெரிவிக்கும். அந்த நாள் தூரத்தில் இல்லை என்கிறது டெல்லி வட்டாரம்.
 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...