சிவபெருமான் தன் பேரருளை வாரி வழங்கும் பொருட்டு எழுந்தருளியுள்ள கோயில்களுள் பலவகையாலும் மேம்பட்ட சீரும் சிறப்பும் பொலிய திகழ்வது சிக்கல்!
முற்காலத்தில் மல்லிகை வனமாக இருந்த இத்தலத்தில் வசிஷ்ட முனிவர் ஆசிரமம் அமைத்து சிவனை எண்ணி தவம் செய்து வந்தார். அச்சமயம், காமதேனுப் பசுவும் இங்கே இறைவனை போற்றி வணங்கியது. அது இத்திருக்கோயில் திருக்குளத்தில் நீராடியபோது அதன் பால் பெருகி உண்டான வெண்ணெய் நீர்நிலை முழுவதும் பரவியது.
தவமிருந்த வசிஷ்டர் குளத்தினுள் பெருகியிருந்த பாலில் மிதந்த வெண்ணெயைக் கண்டார். அதனை ஒன்றாகத் திரட்டி சிவலிங்கமாக அமைத்து ஆத்மார்த்தமாக சிவபூஜை செய்தார். பூஜை நிறைவேறியதும் அந்த லிங்கத்தை வேறிடத்தில் அமைக்க முயன்றார் வசிஷ்டர். வெண்ணெய் லிங்கபிரான் திருவிளையாடல் புரிய எண்ணி "கல்' என இறுகி அசையாது நின்றார்.
"செல்வமே சிவபிரானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன், எங்கெழுந்தருளுவது இனியே' என்று தொழுது லிங்கத் திருமேனியை "சிக்' எனப் பிடித்தார். அன்று முதல் இத்தலத்திற்கு "சிக்கல் ' என்ற பெயர் வழங்கலாயிற்று. வெண்ணெய் திருமேனி என்பதால் வெண்ணெய் லிங்கபிரான், வடமொழியில் நவநீதேசுவரர்.
இத்தலத்தில் முருகப் பெருமான் சிங்கார வேலராக அமர்ந்து காட்சி அளிக்கிறார். முருகன் சிறப்புப் பெயர்களுள் "சிகிவாகனன்' என்பதும் ஒன்று. இதற்கு மயில் மீது அமர்ந்து விளங்குபவன் என்று பொருள்.
அம்பிகை வேல் நெடுங்கண்ணி என்னும் திருப்பெயரோடு இத்தலத்தில் தெற்கு நோக்கி தனிச்சந்நிதி கொண்டுள்ளாள். வெண்ணெய்பிரானும் வேல் நெடுங்கண்ணியும் பெருமை கொள்ளும் வண்ணம் இங்கே ஆண்டுதோறும் நிகழும் புராணச் சிறப்பு உள்ளது.
அமரர் காவலன் ஆறுமுகன், அசுரன் சூரபத்மனை அழித்திட ஆங்காரமாக புறப்பட்டபோது அந்த ஓங்கார ரூபனுக்கு ஒப்பற்ற ஆயுதம் ஒன்றினை அளித்திட எண்ணிய அன்னை வேல் நெடுங்கண்ணி, வேல் ஆயுதத்தினை வேலவனுக்கு அளித்தாள்.
அருள்விழியாள் அளித்த வேலை அனல் விழியால் பிறந்த அழகன் வாங்கும்போது அவன் உடலில் பெருகிய வெப்பத்தால் பொங்கியது வியர்வை! அப்போது அவனது வெற்றிக்கு அச்சாரம் இடப்பட்டு விட்டதால் அகமகிழ்வோடு ஆசியளித்தாள் அம்மை. புராணம் சொல்லும் இக்கூற்றினை உறுதிப்படுத்தும் விதமாக இன்றும் சிக்கல் திருத்தலத்தில் நிகழ்கிறது இந்த அற்புதம்!
ஆண்டுதோறும் கந்த சஷ்டியின் ஐந்தாம் நாள் (சூரசம்காரத்திற்கு முந்தைய நாள்) சூரனை வதைத்திட சிங்கார வேலவர் வேல்நெடுங்கண்ணியிடம் வேல் பெற்றிட வருவார். அன்னை அளித்திடும் வேலைப் பெற்றதும் பிள்ளை முகத்தில் வியர்வை துளிர்த்திடும். அருகில் இருப்போர் மேலேயெல்லாம் அது பெருகி தெளித்திடும்.
இத்தலத்து முருகனின் மூலவர் விக்ரகமே உற்சவராகவும் இருப்பது தனிச்சிறப்பு என்றால் அந்த விக்ரக திருமேனியில் சிங்கார வேலவன் முழுமையாய் உறைந்திருப்பதை உணர்த்தும் விதமாக வேல் வாங்கும் தருணத்தில் வியர்வை பொங்குவது, கண்டால் மட்டுமே உணரக்கூடிய அதிசயம்! அற்புதம். கோலமயில் வாகனன் புகழ்பாடும் கோயிலில் திருமால் "கோலவாமனர்' எனும் திருநாமத்தோடு எழிற்கோலம் விளங்க அருள்கோலம் பூண்டு தனிச்சந்நிதி கொண்டிருக்கிறார்.
"சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் போர் முடித்து' என்பார்கள். சூரசம்ஹாரம் செந்திலில் நடந்தாலும் அதற்கான அச்சாரமாக அன்னை வேல்நெடுங்கண்ணி சிங்கார வேலவனுக்கு வேலாயுதத்தைத் தருவதும் அதனை பெற்றிடும் வேலவன் திருமுகம் வியர்ப்பதும் ஆண்டுதோறும் அடியவர் கண்டுமகிழும் அற்புத நிகழ்வாகும்.
No comments:
Post a Comment