தமிழ்நாட்டில், தமிழைத் தவிர மற்ற மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் அநேகர் உண்டு.
இவர்களில் மற்ற எல்லோரையும் விட, தெலுங்கு பேசுபவர்களே அதிகம். ஆந்திர எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகள் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் கூடத் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் கணிசமாக இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் சரித்திரத்தைப் படித்தால் இதற்கான காரணம் புரியும்.
1.கி.பி.1500-களின் ஆரம்பத்தில் ஹம்பியைத் தலைநகரமாகக் கொண்ட விஜயநகரப் பேரரசின் கிருஷ்ணதேவராயர் காலத்தில் தான் தெலுங்கு பேசுபவர்கள் இன்று தமிழ்நாடு என்று சொல்லப்படும் பகுதிகளில் அதிகமாக ஆதிக்கம் செலுத்தத் துவங்கினார்கள்.
மதுரையும் தஞ்சாவூரும் அவர்கள் காலத்தில் செழித்து வளர்ந்தன.
இந்த மன்னர்கள் பல்வேறு சமயங்களில் காஞ்சிபுரம், ஆரணி, செஞ்சி, ஆற்காடு ஒன்றிய இடங்களில் இஸ்லாமியர்களுடன் போர் புரிய வேண்டியிருந்தது.
மதுரை, திருச்சி, தஞ்சாவூர் போன்ற இடங்களில் மற்ற சோழ, பாண்டிய மன்னர்களுடன் பல்வேறு காலங்களில் போர் புரிய வேண்டியிருந்தது.
இன்றைய தமிழ்நாட்டின் பெரும் பகுதியைத் தங்கள் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு வந்தார்கள்.
மிக அதிகமான தடவை போர் புரிந்தது காஞ்சிபுரம் அருகில் தான்.
பல தமிழ்நாட்டுக் கோவில்களை மீட்டு, செப்பனிட்டு, திருப்பணி செய்த பெருமை
விஜயநகர மன்னர்களுக்கு உண்டு. நூற்றுக்கணக்கான கோயில்களுக்குப் பெருமளவில் பொருளுதவி செய்தார்கள். தினசரி வழிபாடுகள் சிறந்த வண்ணம் நடைபெற உதவினார்கள். அவர்களுடைய இறைத் தொண்டு உண்மையிலேயே மெச்சத்தக்கது.
2. 1500- களுக்கு முன்பும் கூட, இன்றைய தமிழ்நாட்டின் சில இடங்களில் தெலுங்கு மன்னர்களின் ஆதிக்கம் இருந்தது. ஒரே ராஜ்யம்- ஒரே ராஜா என்றிருக்கவில்லை. சிறு சிறு பகுதிகளுக்கு வெவ்வேறு காலங்களில் மன்னர்களாக இருந்தனர்.
3. மொழிவாரி மாகாணங்கள் அமைவதற்கு முன்னால் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளாவின் பல பகுதிகள் சென்னை (மதறாஸ்) மாகாணத்தில் தான் இருந்தன. அந்தக் காலத்தில், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், தெலுங்கு பேசுபவர்கள் தமிழ்நாட்டிற்கும், தமிழ் பேசுபவர்கள் ஆந்திராவுக்கும் இடம்பெயர்ந்து செல்வது சாதாரண விஷயம் தான்.
நிறைய மலையாளம் பேசும் மக்களும் இங்கே இருப்பதற்கு இதுவே காரணம்.
தெலுங்கர்கள் மட்டுமல்ல மராட்டியர்கள் கூட தமிழ்நாட்டை ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆட்சி செய்து வந்தார்கள். மாமன்னன் வீரசிவாஜி மதுரை வரை வந்து வென்று திரும்பிச் சென்றான். தமிழ் மண்ணில் இருந்து இஸ்லாமியர்களை விரட்டி எடுத்த பெருமை அவனுக்கும் உண்டு. சென்னை மண்ணடியில் இருக்கும் காளிகாம்பாள் கோவிலில் வீரசிவாஜி வழிபட்ட நிகழ்வு சரித்திரத்தில் இருக்கிறது.
சிவாஜி திரும்பிச் சென்ற பிறகும் கூட, தஞ்சாவூர் மராட்டியர் வசம் தான் இருந்தது.
வியாபாரத்திற்காக இங்கே வந்து குடியேறிய குஜராத் சௌராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் பலர் உண்டு. மதுரையில் இவர்களை பார்க்கக் கிடைக்கும். "பட்டு நூல்" காரர்கள் என்ற பெயரும் இவர்களுக்கு உண்டு.
கடந்த காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக,
இங்கே வந்து குடியேறிய பிற மொழி மக்கள் இன்று முழுத் தமிழர்கள் ஆகிவிட்டனர். தமிழை முழுவதும் ஏற்றுக்கொண்டு விட்டனர்.
எப்படி அந்தக் காலத்தில் வட இந்தியாவில் பல இடங்களிலும் குடி பெயர்ந்த தமிழர்கள் அந்தந்த மாநில மொழியைச் செவ்வனே கற்றுக்கொண்டு அந்தந்த மாநிலத்தவராக மாறிவிட்டார்களோ அப்படியே இவர்களும் மாறிவிட்டார்கள்.
தமிழ், தமிழர், தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலாச்சாரம் என்று எல்லாவற்றொடனும் ஒன்றிவிட்டனர்.
தமிழர்களுக்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாடும் இனிக் காண முடியாது.
இதுதான் இயற்கை. இதுவே காலத்தின் கட்டாயமும். அவர்களை வாழ்த்துவோம்! 


No comments:
Post a Comment