தமிழக சட்டமன்ற தேர்தலில் தேர்தல் கமிஷன் நடவடிக்கைகள் பாராட்டுக் குரியதாய் அமைந்தன. முந்தைய தேர்தல்களில் கள்ளஓட்டு, வாக்குச் சாவடிகள் சூறை, ஓட்டுக்கு பணம்,வன்முறை, என ரணகளத்தை பார்த்த அனுபவம் வாக்காளர்களுக்கு உண்டு.
இந்த தேர்தலையும் அது போலவே எதிர்பார்த்தனர். ஆனால் தேர்தல் கமிஷனின் தடாலடி செயல்களால் நிகழ்வுகள் தலைகீழாக மாறிப்போனது. மாநிலம் முழுவதும் வாகன சோதனைகள் நடத்தி ஓட்டுக்கு பணம் கொண்டு செல்வதை தடுத்தனர். இச்சோதனையில் கட்டுக்கட்டாக பல கோடிகள் கைப்பற்றப்பட்டது. பணத்தை எடுத்துச் செல்ல பயந்தனர். இதற்கு கண்டனங்களும் எழுந்தன. அதனை தேர்தல் கமிஷன் காதில் வாங்கவில்லை.
கோர்ட்டில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளில் இருந்தும் தனக்குரிய அதிகார எல்லைகளை தெளிவுபடுத்தி ஜெயித்து வெளிவந்தது. வாகன சோதனைகளை மீண்டும் தொடர்ந்தது. இதனால் பணப்பட்டுவாடா சுருண்டது. தேர்தல் செலவுகளிலும் கிடுக்குப்பிடி போட்டது. சுவர் விளம்பரங்களை தடுத்தது. வேட்பாளர்களின் வாகன ஊர்வலங்கள், கொடி தோரண கொண்டாட்டங்கள், இரவு 10 மணிக்கு மேல் நடக்கும் ஒலி பெருக்கி பிரசார இம்சைகள் அனைத்தையும் முடக்கி போட்டது. இதனால் தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடந்தது.
வன்முறை துளியும் தலை காட்டவில்லை. தேர்தல் கமிஷனே போட்டோவுடனான வாக்காளர் அடையாள சீட்டுகளை வீடு வீடாக வினியோகித்து ஒட்டு போடும் ஆர்வத்தை தூண்டி விட்டது. வாக்குச்சாவடிகளில் போலீசாரை நிறுத்தி கரை வேட்டிக்காரர்களை அருகில் நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்டது. இதனால் இதுவரை ஓட்டுப்போடாதவர்கள் கூட தைரியமாக வந்து ஓட்டளித்தனர்.
வாக்குப்பதிவு சதவீதமும் அரசியல் கட்சியினர் ஆச்சரியப்படும்படி எகிறியது. தேர்தல் கமிஷன் வாக்காளர்களின் நன்றிக்கும், பாராட்டுக்கும் உரியதாய் உயர்ந்து நிற்கிறது.
ஆட்சியை பறித்தது ஊழல், குடும்ப தலையீடு, விலைவாசி உயர்வு...!
அளவுக்கு அதிகமான ஊழல் குற்றச்சாட்டுகளும், ஒரு துறையைக் கூட விட்டு வைக்காமல், அனைத்து துறைகளிலும் கருணாநிதியின் குடும்பத்தினர் மூக்கை நுழைத்து, ஏகபோக ஆதிக்கம் செலுத்தியதும் தான், தி.மு.க.,வை படுதோல்வி அடையச் செய்து, ஆட்சியை பறிகொடுக்க வைத்துவிட்டது.
No comments:
Post a Comment