Sunday, May 29, 2011

ராஜாவின் கைதுக்கு காரணமான தமிழர்

"ஸ்பெக்ட்ரம்' ஊழலில் பதவி விலகி, தற்போது டில்லி திகார் சிறையில் உள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா. இதற்கு சி.பி.ஐ., மற்றும் சி.ஏ.ஜி., காரணம் என்றாலும், "ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை சி.பி.ஐ.,க்கு விலாவாரியாக எடுத்துச் சொன்னவர் ஒரு தமிழர். சுற்றுச்சூழல் துறையில், ராஜா அமைச்சராக இருந்தபோது, அவருக்கு கூடுதல் தனிச் செயலராக பணியாற்றினார் அந்த தமிழர். தொலைத்தொடர்புத் துறைக்கு ராஜா மாறியபோது, இந்த தமிழரும் அவரோடு சேர்ந்து கொண்டார். 2009ல் லோக்சபா தேர்தல் நடைபெறுவதற்கு முன், ராஜாவிற்கும், அந்த தமிழருக்கும் ஏதோ பிரச்னை ஏற்பட, அவர் ராஜாவிடமிருந்து பிரிந்து போனார். அவர் தான் சி.பி.ஐ.,க்கு அனைத்து விவரங்களையும் கூறியுள்ளார். கனிமொழி எப்படி இந்த பிரச்னையில் தலையிட்டார்? தி.மு.க., தொலைக்காட்சிக்கு எப்படி பணம் போனது? ராஜாவிற்கு நெருக்கமான தொழிலதிபர்கள் யார்? நிரா ராடியாவிற்கும், ராஜாவிற்கும் எப்படி தொடர்பு? என, அனைத்து விவரங்களையும் போட்டுக் கொடுத்து விட்டாராம். தற்போது இவருக்கு மத்திய அரசு பாதுகாப்பு அளித்துள்ளது.


பா.ஜ.,வில் மீண்டும் உமாபாரதி? மத்திய பிரதேசத்தின் முதல்வராக பணியாற்றிய உமாபாரதி, பா.ஜ.,வின் முக்கிய தலைவராக இருந்தவர். பிறகு, பலவித பிரச்னைகள் காரணமாக, கட்சியிலிருந்து வெளியேறினார். மீண்டும் கட்சிக்குள் வர முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறார். ஆனால், இதுவரை வர முடியவில்லை. உமாபாரதி கட்சிக்குள் வந்தால், ம.பி.,யில் பிரச்னையை உண்டாக்குவார்.நான் பதவி விலகி விடுவேன் என்று ம.பி., முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது ஒரு காரணம் என்றாலும், உமாபாரதியின் போக்கு, சித்தம் போக்கு சிவன் போக்கு. எந்த நேரத்திலும், என்ன வேண்டுமானாலும் பேசி விடுவார். இதனால், ஏற்கனவே கட்சியில் பல பிரச்னைகள் எழுந்துள்ளன. இதனால், இவரை கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று மூத்த தலைவர் அத்வானி சொல்லியும் கூட, உமாபாரதியை இதுவரை கட்சிக்குள் நுழைய விடவில்லை. அடுத்த ஆண்டு, உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது உ.பி.,யில் பரிதாப நிலையில் உள்ளது பா.ஜ., மீண்டும் அங்கு வெற்றி பெற, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த உமாபாரதியை கொண்டு வந்தால், பிரசாரத்திற்கு உதவியாக இருக்கும் என்று கட்சித் தலைவர் நிதின் கட்காரி திட்டமிட்டுள்ளார். ஆனால், கட்சியின் மற்ற தலைவர்களோ, உமா கட்சிக்குள் வந்தால், பலனை விட பிரச்னைகள் தான் அதிகமாகும் என்று கூறியுள்ளனர். என்ன செய்வது என தெரியாமல் குழம்பிப் போயுள்ளார் கட்காரி.


தேர்தல் கமிஷன் பட்ட பாடு: இந்த முறை நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில், 54 கோடி ரூபாய் பணம் தேர்தல் கமிஷனால் கைப்பற்றப்பட்டுள்ளது. மற்ற மாநில தேர்தல்களில் நம்ம ஊர் மாதிரி பணப் பட்டுவாடா செய்யப்படுவதில்லை. அடிதடி, துப்பாக்கிச்சூடு, மின்னணு ஓட்டு இயந்திரங்களை சூறையாடுவது போன்றவை வடமாநில தேர்தல்களில் நடக்கும். தற்போது அதுவும் நடப்பதில்லை. ஆனால், நம்ம ஊரில் நிலைமையே வேறு. எங்கும், எதிலும் பணம் தான். இதைத் தடுக்க பல வழிகளில் செயல்பட்டது தேர்தல் கமிஷன். அதிகாரிகளும், ஊழியர்களும் தங்கள் உயிரையும் பணயம் வைத்து, இரவு நேரங்களில் பணத்தை கைப்பற்றியுள்ளனர். ஓட்டுப்பதிவு நடைபெறுவதற்கு முன்தினம், பணப் பட்டுவாடா நடைபெறலாம் என்பதால், இதைக் கண்காணிக்க பெரும் பணி ஆற்றியது கமிஷன். 12ம் தேதி காலையிலிருந்து இரவு வரை, டில்லி தேர்தல் கமிஷன் அதிகாரிகள் வீட்டிற்கு செல்லவில்லை. அலுவலகத்திலேயே தங்கி விட்டனர். திடீரென ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், உடனே அதை சமாளிக்க இந்த ஏற்பாடு. மறுநாள் ஓட்டுப்பதிவு முடிந்து இரவு 9 மணி வரை அலுவலகத்திலேயே இருந்தனர். ஒரு வழியாக எந்த பிரச்னையும் இல்லாமல், ஓட்டுப்பதிவு முடிய, வீடு சென்றனர் அதிகாரிகளும், ஊழியர்களும். மொத்த பணத்தையும் பிடிக்காவிட்டாலும் கூட தங்களால் முடிந்ததை தேர்தல் கமிஷன் செய்துள்ளது என்று பெருவாரியான மக்கள் பாராட்டினாலும், ஒரு சிலர், கிடைக்கிற பணத்தை இவர்கள் வராமல் தடுத்து விட்டார்களே என்று வருத்தப்பட்டனர்.


ஜனாதிபதிக்கு தயாராகும் வீடு: ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும், அவர் தங்க, மத்திய அரசு வீடு ஒதுக்குவது வழக்கம். தற்போதைய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், அடுத்த ஆண்டு ஓய்வு பெறுகிறார். இவருக்கு வீடு ஒதுக்கப்பட வேண்டும். இதற்கு முன் ஓய்வு பெற்ற பலர், டில்லியிலேயே வீடு வேண்டும் என விருப்பப்பட்டார்கள். அதனால், அவர்களுக்கு டில்லியிலேயே வீடு ஒதுக்கப்பட்டது. நம்ம ஊர் வெங்கட்ராமன், சென்னையில் தங்கப் போவதாக சொன்னதால், அவருக்கு சென்னையில், அரசு தரப்பில் வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. பிரதிபா பாட்டீல் மகாராஷ்டிராவை சேர்ந்தவர். புனேயில் தனக்கு வீடு வேண்டும் என்று மத்திய அரசிடம் தெரிவித்துள்ளார். இரண்டு வீடுகளை ஒன்றாக சேர்த்து கட்டித் தரவேண்டும் என்றும் பிரதிபா கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கான வேலைகளை மத்திய அரசு தொடங்கி விட்டது. தான் பதவியில் இருக்கும்போதே அந்த புனே வீட்டை நல்ல முறையில் அலங்கரித்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார் பாட்டீல். ஜனாதிபதி பதவியில் இருப்பவர்களுக்கு சொந்தமாக வீடு இல்லாமலா இருக்கும்? அப்படியே இருந்தாலும், அரசு தரப்பில் வரும் இலவச வீட்டை விட யாருக்கு மனம் வரும். பல வருடங்களுக்கு முன் காலமான முன்னாள் ஜனாதிபதி ஜெயில் சிங்கிற்கு ஒதுக்கப்பட்ட வீடு, இதுவரை காலி செய்யப்படவில்லை. இப்படி பல முன்னாள் ஜனாதிபதிகள் மேலே சென்ற பிறகும், அவர்களுடைய அரசு வீட்டை திருப்பித் தராமல் வாரிசுகள் ஜாலியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...