Saturday, May 28, 2011

வெள்ளை துண்டுக்கு மாறும் கருணாநிதி: குருபெயர்ச்சியால் திடீர் மாற்றம்


குருபெயர்ச்சி சாதகமில்லாமல் போனதால், மஞ்சள் நிறத்தில் இருந்து, அடிக்கடி வெள்ளை துண்டுக்கு கருணாநிதி மாறி வருகிறார். ஆரம்பம் முதல் கறுப்பு துண்டு அணிந்த கருணாநிதி, ஐந்தாண்டுகளுக்கு மேலாக மஞ்சள் துண்டுக்கு மாறினார். "கழுத்து பகுதியில் அதிக வலி ஏற்படுவதால், கனமான மஞ்சள் துண்டு அணிந்தால் கழுத்து பகுதியில் வெப்பம் ஏற்படும். வலியை அது கட்டுப்படுத்தும் என, மருத்துவர்கள் ஆலோசனைப்படி துண்டு மாற்றம் நடந்தது' என, தி.மு.க., தரப்பில் கூறப்பட்டது.


"கருணாநிதி ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசியில் பிறந்ததால், குருபலம் பெற அவர் மஞ்சள் துண்டு அணிந்தார்' என, ஆன்மிக பெரியோர் கூறி வந்தனர். முதல்வராக பதவியில் இருந்த காலத்தில் மஞ்சள் துண்டை அவர் தவிர்த்தது இல்லை. தஞ்சாவூரில் இரண்டாண்டுகளுக்கு முன் மறைந்த அன்பில் பொய்யாமொழி குடும்ப திருமணம் நடந்த போது, முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், தி.மு.க., கரை வேட்டியை தவிர்த்து, பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து வந்தார். அவ்விழாவில் பேசிய ஸ்டாலின், "அன்பில் பொய்யாமொழியின் குடும்பத்தார் கேட்டுக் கொண்டதால், பட்டுக்கு மாறினேன்' என பேசினார். அடுத்து பேசிய கருணாநிதி, "நாம் திராவிட கொள்கையில் தோய்ந்தவர்கள். எக்காரணம் கொண்டும் நம் கரை, அடையாளங்களை மாற்றக் கூடாது' என, பட்டு வேட்டி, சட்டைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.


சென்றாண்டு, செப்டம்பர் 25ம் தேதி, தஞ்சை பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழாவில், பெரிய கோவில் நந்தி மண்டபத்தில், நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் தலைமையில், 1,000 நடனக் கலைஞர்கள் ஒரு சேர நடனமாடினர். இந்நிகழ்ச்சியை ரசிக்க வந்த அப்போதைய முதல்வர் கருணாநிதி, பட்டு வேட்டி, பட்டுச் சட்டை, பட்டுத்துண்டு அணிந்து வந்தார். முன்னதாகவே, மேடைக்கு வந்துவிட்ட கனிமொழி மற்றும் கருணாநிதி குடும்பத்தார் மற்றும் அமைச்சர்கள் ஓடி வந்து, கருணாநிதி பட்டாடை அணிந்து வந்ததை புகழ்ந்தனர். "தி.மு.க., படுதோல்வி, கனிமொழி கைது, ஸ்பெக்ட்ரம் பிரச்னையால் குழப்பம்' என, பல தோல்விகளுக்கு இடையே, கடந்த சில நாட்களாக, கருணாநிதி மஞ்சள் துண்டை தவிர்த்து, அடிக்கடி வெள்ளை துண்டுக்கு அணிந்து வருகிறார். சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னரும், கனிமொழி கைது செய்யப்பட்ட பின், டெல்லி பயணத்தின் போதும் கருணாநிதி வெள்ளைத்துண்டு அணிந்திருந்தார்.


இதுபற்றி ஜோதிடர்கள் சிலர் கூறியதாவது: மஞ்சள் துண்டு குருபலத்துக்காக அணிவது. மே 8ம் தேதி நடந்த குருபெயர்ச்சி கருணாநிதிக்கு சாதகமாக இல்லை. குரு பகவான், 12ல் உள்ளார். இந்த சூழலில் அவர் மஞ்சள் நிற துண்டு அணியாமல், வெள்ளை துண்டு அணிந்தால், அது அவருக்கு அமைதியை தரும். வெள்ளை நிறம் பொதுவாக சந்திரன், சூரியன், சுக்கிரன் ஆகிய ராசிகளுக்கானது. குருவின் பலவீனத்தை குறைத்து, அமைதி தரும் என்பதால் இம்மாற்றம் நடந்துள்ளது. அடுத்தாண்டு மே மாதம் நடக்கும் குருபெயர்ச்சி வரை, அவர் வெள்ளைத் துண்டு அணிந்து, அதற்கான பரிகாரத்தை அவரோ அல்லது அவரது குடும்பத்தாரோ மேற்கொண்டால், அவருக்கு மன அமைதி ஏற்படும். அதனால் தான் கருணாநிதி அடிக்கடி வெள்ளை துண்டுக்கு மாறி, மீண்டும் மஞ்சள் துண்டு அணிகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...