Monday, May 16, 2011

தாயுள்ளம் கொண்டவர் கனிமொழி - கண்டுபிடித்த ராம்ஜெத்மலானி

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அகில இந்திய மீடியாவும் ஆவலுடன் எதிர்பார்த்த கனிமொழியின் நீதிமன்ற வருகை, கடந்த 6-ம் தேதி டெல்லியில் நடந்தது. கனிமொழிக்கான வக்கீல் சண்முகசுந்தரம்தான் என்றாலும், ஆஜரானவர் ராம்ஜெத்மலானி. அவரது ஸ்டார் வேல்யூவும் சேர்ந்து, மீடியாக்களை பாட்டியாலா நீதிமன்றத்தை நோக்கி மொய்க்க வைத்தது!
 

ராம்ஜெத்மலானி பேசப் பேச... அங்கு இருந்த பத்திரிகையாளர்களுக்கு மட்டும் அல்ல, கனிமொழி மற்றும் தி.மு.க. பிரமுகர்களுக்கும் வியர்க்க ஆரம்பித்தது.


''கலைஞர் டி.வி-யின் சி.இ.ஓ. சரத்குமார்தான் எல்லா போர்டு மீட்டிங்குகளிலும் கலந்து கொண்டு முடிவெடுத்துள்ளார். அவர்தான் சினியுக் நிறுவனம் கடன் வழங்கிய ஆவணம் உட்பட அனைத்து ஆவணங்களிலும் கையெழுத்துப் போட்டுள்ளார். கனிமொழி ஒருபோதும் கலைஞர் டி.வி-யின் அன்றாட நடவடிக்​கைகளில் கலந்து கொண்டதில்லை. கனிமொழி என்ன தவறு செய்தார்? அவருக்கு அந்த டி.வி-யில் பங்கு இருக்கிறது... அதிலும் பெரும்பான்மைப் பங்குகள் இல்லை. அப்படிப்பட்டவரை, கலைஞர் டி.வி-யின் 'ஆக்டிவ் பிரைன்’ என்று குற்றம் சாட்டுகிறீர்கள்! ஆக்டிவ் பிரைன் என்றால் என்ன? என்ன அர்த்தம் என்று சி.பி.ஐ-க்குத் தெரியுமா? கனிமொழியின் துரதிர்ஷ்டம், அவர் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் என்பது மட்டும்தான். இந்த ஒரு காரணத்துக்காகவே,  குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்கள். அவருக்கு எதிராக ஒரே ஓர் ஆதாரத்தையாவது காட்டுங்கள். உயிரையும் கௌரவத்தையும் காக்கும் பண்பு உள்ளவர் கனிமொழி. தாயுள்ளம் கொண்டவர். எந்தவிதமான தவறுகளுக்கும் உள்ளாகாமல் தூய்மையாக இருக்கும் ஒரு பெண் என்பதால், ஜாமீனில் வெளிவர அனைத்துத் தகுதிகளும் அவருக்கு உண்டு. இந்தக் குற்றப் பத்திரிகை ஓர் அநாகரிகமான அறிக்கை. கனிமொழிதான் கலைஞர் டி.வி-யைக்  கட்டுப்படுத்திவைத்து உள்ளார் என்றும், அவர்தான் எல்லா டைரக்ஷனையும் கொடுக்கிறார் என்றும், அவர்தான் நிறுவனத்தின் மூளை என்றும் சி.பி.ஐ. சொல்கிறது. ஆனால், ஏன் நிரூபிக்கவில்லை? சி.பி.ஐ. சொல்வது எல்லாம், 'அவர் ராசாவோடு ரெகுலராகத் தொடர்பில் இருந்தார்’ என்று. ஆமாம், எங்களுக்கு(டி.வி.) மத்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையில் இருந்து லைசென்ஸ் வேண்டும். அதற்காக, அவரைத் தொடர்பு கொண்டோம். அது எப்படித் தவறாகும்?'' - கேட்டு நிறுத்தினார் ஜெத்மலானி!     

கனிமொழி விவகாரத்தில் ராம்ஜெத்மலானியும் சரி, மற்ற குற்றவாளிகளின் வழக்கறிஞர்களும் ஒருவரை ஒருவர் குறை சொல்லியாவது பெயிலில் வந்துவிட வேண்டும் என்று கடுமையாக வாதாடினர். ராம்ஜெத்மலானி, குற்றப் பத்திரிகையை முழுமையாகப் படித்துவிட்டு, ஆ.ராசாவைப் பற்றி சி.பி.ஐ. என்னென்ன குற்றங்கள் கூறுகிறதோ அவற்றை, ஒவ்வொன்றாக நீதிபதியிடம் படித்துக் காட்டினார்.

அதில் டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனத்தில் இருந்து கலைஞர் டி.வி-க்கு  200 கோடி டிரான்ஸ்ஃபர் ஆவதற்கு ராசாவே காரணமாக இருப்பதைக் குறிப்பிட்டு, ''இப்படிக் குற்றப்பத்திரிகையில் இருப்பது எல்லாம் உண்மை என்று எடுத்துக் கொண்டாலும், அவர்தான் இதற்குப் பொறுப்பு. இதற்கும் என்னுடைய கட்சிக்காரரான கனிமொழிக்கும் சம்பந்தம் இல்லை!'' என்று வாதாடினார். அவர்தான் என்று ராம் ஜெத்மலானி சொன்னது, ஆ.ராசாவை. இதை சி.பி.ஐ. தரப்பு கவனமாகக் குறித்துக் கொண்டது.

தன்னுடைய கட்சிக்காரரைக் காப்பாற்ற, அடுத்தவரைக் காவு கொடுப்பது என்பது, எல்லாக் குற்ற வழக்குகளிலும் நடப்பதுதான். அதே தந்திரத்தைதான் இந்த வழக்கிலும் ஜெத்மலானி கையாண்டார். இது முதலில் கனிமொழிக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியது. நீதிமன்றத்தில் அமர்ந்தபடி இதைக் கேட்ட ராசா, சலனம் இல்லாமல் உட்கார்ந்து இருந்தார்.

விவாதங்கள் முடிந்த பிறகு, ஆறு முறை கனிமொழியும் ஆ.ராசாவும் பேசிக் கொண்டனர். 2-ஜி வழக்கின் விசாரணைப் படலம் தொடங்கிய 9-ம் தேதி அன்று, குற்றவாளிகளுக்கு சாட்சியங்கள், வாக்குமூலங்கள் அடங்கிய 8,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் கொடுக்கப்பட்டன. இதைப் பெற்றுக்கொண்ட ஆ.ராசாவும் கனிமொழியும் ஒன்றாகவே ஒரே வரிசையில் உட்கார்ந்து இருந்தார்கள். இருவரும் பேசினார்கள். எனவே ராம்ஜெத்மலானியின் வாதம், ஏற்கெனவே சொல்லி வைத்துக் கொண்டு  சொன்னதாகவே கருதத் தோன்றுகிறது.

அதனால்தான், ஜாக்கிரதையாக ஒரு வரியை ராம் ஜெத்மலானி, நீதிபதி ஒ.பி.சைனியை பார்த்துச் சொன்னார். அதாவது, “என்னுடைய வாதங்கள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளை எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது...” என்று சொன்னது, ஒருவகையில் ராசாவைக் காப்பாற்றத்தான் என்று டெல்லி வக்கீல்கள் நினைக்கிறார்கள்.

கலைஞர் டி.வி-யின் சி.இ.ஓ. சரத்குமாருக்கு ஆஜரானவர் வி.ஜி.பிரகாசம். அவர் சார்பில் பேசியவர் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும் மூத்த வழக்கறிஞருமான அல்டாஃப் அகமது. ''சரத்குமார் ஒரு அப்பாவி. இந்தச் சமயத்தில், அதை நாங்கள் நிரூபிக்க முடியாது. இப்போது அனுப்பப்பட்டு உள்ள சம்மன் மூலம் அவரை சிறைக்கு அனுப்ப முடியாது. கலைஞர் டி.வி-யை வழக்கில் சேர்க்காமல், தனிப்பட்ட சரத்குமார் மீது  குற்றச்சாட்டுகள் வைப்​பதை ஏற்றுக்கொள்ள முடியாது!'' என்றார்.

கிட்டதட்ட ஒரு நாள் முழுக்க, கனிமொழி மற்றும் சரத்குமார் தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டன. மறு நாள் 7-ம் தேதிதான் சி.பி.ஐ. வழக்கறிஞர் யு.யு.லலித் பதில் கொடுத்தார்.
 

ராம் ஜெத்மலானி மாதிரி, லலித் வசனம் பேசவில்லை. நிதானமாகப் பேசினார். ''ஒரு புலனாய்வுத் துறையால் என்ன செய்ய முடியுமோ... அவற்றை எல்லாம் சி.பி.ஐ. இந்த வழக்கில் செய்து, குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன் நிறுத்தி உள்ளது. எந்த வழக்கிலும் குற்றச்சாட்டுப் பதிவு செய்யாமல் சம்மன் அனுப்பும்போதுதான், சி.ஆர்.பி.சி. 88-வது பிரிவின்படி பெயிலுக்கு மனு செய்ய முடியும். ஆனால், இங்கே குற்றச்சாட்டு, பதிவு செய்யப்பட்டு உள்ளது. 'வீட்டில் இருந்து வந்தோம், திரும்பவும் வீட்டுக்கே அனுப்புங்கள்’ என்று குற்றவாளிகள் சொல்ல முடியாது. அவர்களை ஜாமீனில் விடுவது, நீதிமன்றத்தின் பொறுப்பு. ஆனால், ரிமாண்டில் வைத்த பின்னர்தான் ஜாமீனில் விடுவிக்க முடியும். இவர்கள் தவறாகப் புரிந்து கொண்டு, தவறான வழியில் தங்கள் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்து உள்ளனர். பாண்ட் பத்திரத்தின்படி, ஜாமீன் பெற முடியாது. அவர்கள் ஜாமீனில் செல்ல வேண்டுமானால், வேறு வழியில் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்!'' என்று சொன்னார்.

அவரும் கனிமொழி, சரத்குமார் மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கினார். ''இப்படிப்பட்ட ஒரு சீரியஸான வழக்கில், பெண் என்ற காரணத்தால் மட்டுமே ஜாமீனில் செல்ல முடியாது. இவர்களை நீதிமன்றக் காவலில் (சிறையில்) வைக்கவேண்டும்!'' என்று குறிப்பிட்டார்.
 
டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனத்தில் இருந்து, இரண்டு நிறுவனங்களைத் தாண்டி, கலைஞர் டி.வி-க்குப் பணம் வந்த தேதிகள், பின்னர் எஃப்.ஐ.ஆர். போட்ட பின்னர் நடந்த திடீர் ஒப்பந்தங்கள், ராசா கைதானவுடன் பணத்தைத் திரும்ப ஒப்படைத்தது, அதே தேதிகளில் இந்தப் பணம் 'ரிவர்ஸாக’ மற்ற கம்பெனிகளுக்குத் திரும்பிச் சென்ற விதங்களை சி.பி.ஐ. வக்கீல் விளக்கினார்.

''இந்த ஊழல் பகிரங்கமாக நடந்து உள்ளது. இவர்கள் ஊழல் பணத்தைப் பெற்றுக் கொண்டு, பின்னர் ஆவணங்களைத் தயாரித்து உள்ளனர். ஒரு குற்றத்தை மறைப்பதற்காக, இப்படிப்பட்ட போலி ஆவணங்களைத் தயாரிப்பது மற்றொரு குற்றம். இது இந்த வழக்கின் வேகத்தை அதிகப்படுத்தி உள்ளது!'' என்று, குற்றப்பத்திரிகையில் இருந்து மிக சென்சிட்டிவான விஷயங்களை விளக்கினார். 

''கனிமொழிக்கு 20 சதவிகிதப் பங்குகள் இருக்கின்றன. தயாளு அம்மாளுக்கு 60 சதவிகிதப் பங்குகள் இருக்கின்றன. இப்படி ஒரு குடும்பத்துக்கு 80 சதவிகிதப் பங்குகள் இந்த டி.வி. நிறுவனத்தில் இருக்கிறது என்றால், இவர்களைத் தவிர வேறு யாருக்கு இதில் சம்பந்தம் இருக்க முடியும்? யாரால் இந்த கம்பெனி நடக்கும்? தயாளு அம்மாள் தனக்கு உள்ள பிரச்னைகளை ரிக்கார்டுபூர்வமாக எழுதிக் கொடுத்து ஒதுங்கிவிட்டார். 2007 முதல் நடந்துள்ள சம்பவங்கள், சாட்சியங்கள், ஆதாரங்களைப் பார்க்கும்போது, இந்தப் பெண்ணைத்(கனிமொழி) தவிர, வேறு யாருக்கும் இதில் சம்பந்தம் இல்லை!'' என்று கடுமையான வாதங்களை வைத்தார் லலித். 

இதே 2-ஜி வழக்கில் சில குற்றவாளிகளுக்குக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சம்மன் அனுப்பப்பட்டு, ஆஜராகும்போது முன் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தனர். ஆனால், அவர்கள் ஜாமீன் மனு தள்ளுபடியாக, நீதிமன்றக் காவலில் வைத்து, சிறைக்கு அனுப்பப்பட்டனர். இதே மாதிரி, எடுத்த எடுப்பிலேயே கனிமொழி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படவில்லை. இந்த சி.ஆர்.பி.சி. 88-ன்படி சம்மனுக்கு பாண்ட் பெற்றுக் கொண்டு ஜாமீனில் அனுப்புங்கள் என்பதுதான் கனிமொழி தரப்பு வாதம். இதற்குத்தான் வாதங்கள் கடுமையாக நடந்தன.

வருகிற 14-ம் தேதி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கொடுக்க இருக்கிறது. ஒருவேளை இந்த வாதங்களை ஏற்றுக் கொள்ளாமல், நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டு, கனிமொழியை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டால், அப்போது ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்று கனிமொழி மற்றும் சரத்குமார் தரப்புகளில் திட்டம் இடப்படுகிறது!

14-ம் தேதி, கனிமொழிக்கு மற்றொரு முறை ஜாமீன் கேட்க வாய்ப்பு கிடைக்குமா என்பதும் சந்தேகமே!
     


 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...