Sunday, May 29, 2011

சண்டேன்னா மூணு! கருணாநிதி!கேடி பிரதர்ஸ்!கனிமொழி!



துக்ளக் அட்டைப்படங்களில் இரண்டு கழுதைகள்  பேசிக் கொள்கிற மாதிரி வருபவை முத்திரை பதிப்பவை என்பது துக்ளக் இதழின் வாசகர்களுக்குத்  தெரியும்! இந்த அட்டைப்படக் கார்டூனில் திமுகவின் தோல்விக்கான காரணங்களை திமுக தலைவரே கூட ஆராய விரும்பா விட்டாலும், சொல்கிறார்கள். விடுபட்டுப் போன, ஆனால் மிக முக்கியமான ஒரு காரணம், கேடி பிரதர்ஸ் என்று (இனிஷியலை வைத்து மட்டுமல்ல, செய்திருக்கிற உட்டாலக்கடி வேலைகளை வைத்தும் தான்!) அழைக்கப்படும் மாறன் சகோதரர்கள்!

 நாலே வருடங்கள்! சரிவு கலைஞர் டீவீக்கு மட்டுமல்ல....இங்கே 

சரிந்து விழுந்த செல்வாக்கை, கட்சியைத்தூக்கி நிறுத்த கருணா நிதியால் முடியுமா, ஸ்டாலினால் கட்சியைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்க முடியுமா என்பதெல்லாம் ஒன்பதுரூபாய் நோட்டு மாதிரித் தான்! செலாவணியானால் தான் உண்டு!
கருணாநிதி பிறந்த நாள் வருகிற ஜூன் மாதம் மூன்றாம் தேதி வருவதை ஒட்டி, கட்சியை முடுக்கிவிட கோபாலபுரத்தில் இருந்து முயற்சிகள் ஆரம்பமாகி இருக்கின்றன. ஜெயலலிதா கூட ஜூன்  மூன்றாம் தேதி, கருணாநிதிக்கு பிறந்தநாள் பரிசாக சில அதிரடி அறிவிப்புக்களைத் தருவார் என்றும் சொல்கிறார்கள்!
சன் குழுமத்துக்கு கொஞ்சம் விசேஷமான கவனிப்பு இருக்கும் ன்றும் ஒரு தகவல். வீராப்பெல்லாம் ஒடுங்கி, தேர்தல் trend தெரிய ஆரம்பித்த உடனேயே சன் தொலைகாட்சி திடீர் நடுநிலைமை வகிக்க ஆரம்பித்திருப்பது. பார்க்க வடிவேலு காமெடி மாதிரியே இருக்கிறது!
மே முப்பதன்று, டில்லி உயர்நீதி மன்றத்தில் கனிமொழி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது, ஆனால் ஜாமீன் கிடைப்பதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. மாறாக,சிபிஐ  இந்த மனுவின் மீது தன்னுடைய பதிலை சொல்வதோடு  விசாரணை எந்த அளவில் இருக்கிறது என்பதைக் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் கேட்டிருக்கிறது. மொரிஷியஸ் நாட்டுக்கு விசாரிக்கப் போன சிபிஐ உருப்படியான தகவலோடு திரும்பி இருக்கிறதா அல்லது எப்போதும் போல வெறும் கையை வீசிக் கொண்டுதான் திரும்பியிருக்கிறதா என்பதைக் கொஞ்சமாவது அன்றைக்குச் சொல்ல வேண்டுமே!

போதாக்குறைக்கு, மூன்றாவது, நான்காவது துணைக் குற்றப் பத்திரிகைகளில் இன்னும் கொஞ்சம் பெயர்களையும் சேர்த்து, திஹாருக்கு விருந்தாளிகளாக அனுப்புகிற வரை,இப்போதிருக்கும் நிலையில், கனிமொழி உட்பட 2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியவர்கள் எவரும் ஜாமீனில் வெளிவருவது சாத்தியமில்லை என்று தான் தெரிகிறது. அதனால், குற்றப்பத்திரிகை மிகவும் வலுவாக இருக்கிறது என்றோ, விசாரணையில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுக் குற்றவாளிகள் அத்தனைபேரும் தண்டனை அனுபவிப்பார்கள் என்றோ முடிவுக்கு வந்தீர்களானால்,அதன் பொறுப்பு உங்களுடையது!
கனிமொழிக்கு ஆதரவாக அடுத்து திஹார் சிறைக்குள் யார் யார் போகப் போகிறார்கள் என்பது தான் இப்போதைய பரபரப்பு! தயாளு? தயாநிதி? அல்லது தயாநிதி காங்கிரசில் சேர்ந்து திமுகவின் அஸ்திவாரத்தை அசைத்துப் பார்க்கிற மாதிரி  இன்னொரு சுற்று ஆட்டத்தை,ஆரம்பிப்பாரா?
ஊகம் உங்களுடையது!
2005 இலிருந்தே தயாநிதியின் மந்திரி பதவியை வைத்து, சன்குழுமம் தன்னுடைய வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யும், எவருடன் வேண்டுமானாலும் கூட்டு சேரும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்! மதுரை தினகரன் அலுவலகத்தில் மூன்று ஊழியர்கள் கொல்லப்பட்டதருணத்தில்  கலாநிதி மாறன் அழகிரியைக் குறிப்பிட்டே குற்றம் சாட்டியது அவ்வளவு சீக்கிரமாக மறந்துவிடக் கூடியதுதானா?இப்போது திமுக தலைவர் குடும்பம் சந்தித்து வரும் அத்தனை பிரச்சினைகளுக்கும் மூலகாரணம் தயாநிதிதான் என்பதும் கூடக் கரைவேட்டிகளுக்குத் தெரிந்ததுதான்!

தயாநிதி மாறன் வியாழக்கிழமை சோனியாவை அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறார்! குலாம் நபி ஆசாத்தும் கூட இருந்திருக்கிறார்! சோனியாவை சந்திப்பதற்கு முன்னால், செவ்வாய்க்கிழமை  தயாநிதி மாறன் செய்திருக்கிற இன்னொரு ஆச்சரியப் படுத்துகிற வேலை, மு.க அழகிரியுடன் திஹார் சிறைக்குப்போய்க் கனிமொழியை சந்தித்தது தான்! 'இதயம் கனத்தது; கண்கள் பனித்தன' கதை வசனம் நினைவுக்கு வந்தாலும் சரி! கூட இருந்து குழிபறிப்பது,'உடனிருந்தே கொல்லும் வியாதி' என்ற சொலவடைகள்  நினைவுக்கு வந்தாலும் சரி! அது உங்கள் பாடு.

கோபாலபுரம் , சி ஐ டி நகர் இரண்டு குடும்பங்களும்,பெங்களூரில் இருந்து செல்வி உட்பட மிக ஒற்றுமையாக, கனிமொழிக்குப் பக்க பலமாகத் தங்கள் ஒற்றுமையை திஹார் சிறைக்குப்போய் சந்தித்துக் காண்பித்திருக்கிறார்கள். நவக்கிரகங்கள் மாதிரி எதிரும்புதிருமாய் நேற்றுவரை இருந்தவர்களைக் கனிமொழி கைது விவகாரம் ஒற்றுமைப் படுத்தியிருக்கிறதா? அல்லது, "இன்று நீ! நாளை நான்"  "உன்னாலே நான்-- என்னாலே நீ கெட்டாய்!" ரகம் தானா?கொசுக்கடி தாங்காமல் கனி மொழி அவதிப்பட்டார் என்றெல்லாம் அனுதாபத்தை உச்சுக் கொட்டின ஊடகங்கள் கூட,இந்தக் குடும்ப ஒற்றுமை அதிசயத்தைப் பற்றி என்ன பேசுவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கின்றன. குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்கிற மாதிரி, இந்தத் திடீர் ஒற்றுமை எங்கே போய் எதிலே முடியும் என்பதை ஊகிக்க முடியாததுதான் காரணம் என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்!

இவ்வளவு சொல்லிவிட்டு, காங்கிரஸ் சமாசாரத்தைக் கொஞ்சம் தொடவில்லையானால், கூட்டணி தர்மம் என்னாகிறது?
சுரேஷ் கல்மாதிக்குத் துணையாக சில அதிகாரிகள் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டதோடு விவகாரம் முடிந்து விடவில்லை. பிரதமர் Shunglu Committee அறிக்கை மீது காலதாமதம் செய்யாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதி இருக்கிறார். டில்லி அரசு, அந்தக் கமிட்டியின் அறிக்கையை நிராகரித்து, தவறுகள் எதுவுமே நடக்கவில்லை என்று பதில் சொல்லியிருக்கிறது. சீக்கிரமே சுரேஷ் கல்மாடிக்குத் துணையாக, சில காங்கிரஸ் புள்ளிகளும் திஹாருக்குப் போக வேண்டியிருக்கும் என்று சில தகவல்கள் நமட்டுச் சிரிப்புடன் கசிய விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மும்பை ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு விவகாரத்தில் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் முன்னாள் இந்நாள் முதலமைச்சர்கள் மாட்டிக் கொண்டு உள்ளே போக வேண்டிய நேரமும் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த மாதிரி நெருக்கடியான நேரத்தில், திமுகவை மாட்டிவிட்டு, தங்கள் கட்சி அம்மணமாய்த்திரிவது ஜனங்களுடைய கண்ணுக்குத்  தெரிய விடாமல் திசை திருப்புவது, காங்கிரஸ் கட்சிக்குக் கைவந்த கலைதான்! சௌகரியமும் கூட இல்லையா!!
கூட்டணி தர்மத்துக்கு எல்லோரும் ஒரு "ஓ " போடுங்க! வேறென்ன செய்வது?!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...