Saturday, May 21, 2011

தி.மு.க-வை வீழ்த்திய ஐம்பெரும் சக்திகளும், நமக்கு உணர்த்தும் பாடமும்....



யாரும் எதிர்பாராத ஏன் அண்ணா.தி.மு.க-கூட்டணி கட்சி தலைவர்களே எதிர்பாராத, கருத்துக்கணிப்புகளை மீண்டும் ஒரு முறை ஏமாற்றிவிட்டு  200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியை ஈட்டியிருக்கிறது அண்ணா.தி.மு.க.கூட்டணி.

யார் வென்றாலும் கூட்டணி ஆட்சிதான் என்ற அனைவரின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்கிவிட்டு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கட்டிலில் அமர்கிறார் ஜெயலலிதா.

நேற்றுவரை ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க-விற்கு எதிர்கட்சி அந்தஸ்து கூட கொடுக்காமல் அதையும்  விஜயகாந்திற்கு கொடுத்து ஒரு மவுனப்புரட்சியே செய்திருக்கிறார்கள் வாக்காளர்கள். இதற்க்கு முன்பு எம்.ஜி.ஆர்.,காலம் உட்பட எக்காலத்திலும்  தி.மு.க., எதிர்கட்சி அந்தஸ்தை வேறு யாருக்கும் விட்டுத்தந்ததில்லை(ராஜிவ்காந்தி மரணத்திற்கு பின் நடந்த தேர்தல் மட்டும் விதிவிலக்கு).
அதே நேரம் ஒரே கூட்டணியை சேர்ந்த இரு கட்சிகள் ஆளுங்கட்சியாகவும், எதிர்கட்சியாகவும் இருந்த முன்னுதாரணமும் தமிழக சட்டசபைக்கு உண்டு.....1991-இல் ஆளுங்கட்சியாக அண்ணா.தி.மு.கவும், எதிர்கட்சியாக அதே கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரசும், 1996-இல் ஆளுங்கட்சியாக தி.மு.கவும், எதிர்கட்சியாக அதே கூட்டணியை சேர்ந்த  மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரசும் இருந்திருக்கிறது.

1991-க்கு பிறகு நடந்த எந்த தேர்தலிலும் ஒரே கட்சி இருமுறை ஆளுங்கட்சியாக இருந்ததில்லை என்ற நடைமுறைக்கு மீண்டும் ஒரு முறை உயிரூட்டியிருக்கிறார்கள் வாக்காளர்கள் .அதன் அடிப்படையிலேயே அடுத்து அண்ணா.தி.மு.க.தான் ஆட்சிக்கு வருமென்று சிலரின் எதிர்பார்ப்பு இருந்ததே தவிர...இவ்வளவு பெரிய படுதோல்வியை தி.மு.க சந்திக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. தனது கோட்டை என்று சொல்லப்பட்ட சென்னை, அழகிரி கோட்டை என்று சொல்லப்பட்ட மதுரை  உட்பட பல மாவட்டங்களில் சுத்தமாக துடைத்தெறியப்படும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

கடந்த ஆறுமாதங்களுக்கு முன்பு இவ்வளவு பெரிய  வெற்றியை அண்ணா.தி.மு.க. சந்திக்கும் என்று சொல்லியிருந்தால் அண்ணா.தி.மு.க.,இரண்டாம் கட்ட தலைவர்களே விழுந்து விழுந்து சிரித்திருப்பார்கள். அந்த அளவுக்கு கட்சி கொடநாட்டில் முடங்கி கிடந்தது. அங்கிருந்தே அறிக்கை அரசியல் செய்து கொண்டிருந்தார் ஜெயலலிதா.....

கடந்த 2004-நாடாளுமன்ற தேர்தல், 2006- சட்டமன்ற தேர்தல், அதன்பிறகு 2009-நாடாளுமன்ற தேர்தல், இடையிடையே இடைத்தேர்தல் என்று தொடர்ந்து இறங்குமுகமாகவே இருந்து வந்த ஒரு கட்சி விஸ்வரூபம் எடுத்தது எப்படி?
இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று பார்த்தால்....இதற்கு காரணம் ஜெயலலிதாவோ, கூட்டணி கட்சி தலைவர்களோ அல்ல...மாறாக ஆளுங்கட்சியான தி.மு.க தான். தன் தவறுகள் மூலம் கொடநாட்டிலிருந்து கோட்டைக்கு ஜெயலலிதா போக  ஒரு வலுவான அடித்தளத்துடன் பாலம் அமைத்து கொடுத்தது சாட்சாத் தி.மு.க-வேதான். ஆளுங்கட்சியின் அதிருப்தி வாக்குகளை வேறு எங்கும் போக விடாமல் கூட்டணி என்ற  வலையின் மூலம் கச்சிதமாக தன்பக்கம் பிடித்துக்கொண்டது  மட்டும் தான் ஜெயலலிதா வேலை.ஆட்சி இழக்க காரணமான ஐம்பெரும் மைனஸ்களை இப்போது  பார்ப்போமா?

குடும்ப ஆதிக்கம்
கலைஞர் குடும்பத்தினர்  அரசியலில் மட்டுமல்ல(இதை பற்றி தனியாக சொல்ல ஒன்றுமில்லை, எல்லோராலும் அலசப்பட்ட ஒன்றுதான்)....சினிமாவிலும் புகுந்து தன் ஆக்டோபாஸ் கரங்களால் மெல்ல மெல்ல சுருட்டி கொண்டார்கள்.
தமிழ்நாட்டிலிருக்கும் 70% சதவிகித தியேட்டர்களை கைக்குள் வைத்துக்கொண்டு எந்த படம் வெளியாக வேண்டும், அது எத்தனை நாள் ஓட வேண்டும் என்று தீர்மானிக்கும் பவர் சென்டராக விளங்கியது குடும்பம். எவ்வளவு நல்ல படமாக இருந்தாலும், எவ்வளவு ஹவுஸ் புல்லாக  ஓடினாலும் சரி, தன் கம்பெனி பேனரில்  படத்தை வெளியிட முடிவு செய்து விட்டால் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் வெளி பேனர்  படத்தை தூக்கிவிட்டு தன் பேனர் படங்களை(மட்டுமே) வெளியிட்டு மற்ற நடுத்தர தயாரிப்பாளர்களின் எதிர்ப்புக்கும்,வெறுப்புக்கும் ஆளாகினார்கள்.

விலைவாசி+ மின்வெட்டு
இது இந்தியா முழுவதும் அதாவது நாடு தழுவிய பிரச்சினையாக இருந்தாலும் தமிழ் நாட்டில் மட்டும் தான் இப்படி...மற்ற மாநிலங்கள் மின்சார தடையின்றி ஜொலிப்பது போலவும், பத்து ரூபாய்க்கு ஒரு மூட்டை கத்தரிக்காய், அரை மூட்டை வெங்காயம் கிடைப்பது போலவும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து மக்களை மனதை கரைத்து இருந்தார்கள்..இந்த பிரச்சாரம் மக்களை இவர்கள் பக்கம் திருப்ப வைத்தது. இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் விலைவாசி குறையாது....இன்றைய விலையை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்..அடுத்த ஐந்து வருடத்தில் ஜெயலலிதா ஆட்சி முழுமை பெறும்போது இதைவிட பல மடங்கு கூடித்தான் இருக்கும். விலை நிலங்கள் எல்லாம் ரியல் எஸ்டேட்காரர்களின் கையில் சிக்கி மனை நிலங்களாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில்  உற்பத்தியை எந்த லட்சணத்தில் பெருக்குவது? எதை வாங்குவதாக இருந்தாலும்  பக்கத்துக்கு மாநிலத்தில் தான் வாங்கவேண்டும்.

ஈழ பிரச்சினை + மீனவர் பிரச்சினை....
ஈழப்பிரச்சினையில் ஜெயலலிதாவை விட கலைஞரையே மக்கள் அதிகம் நம்பினார்கள். ஆனால் கலைஞர்  சோனியாவை நம்பி மக்களை கைவிட்டதன் விளைவு, மக்கள் இப்போது  கலைஞரை கைவிட்டிருக்கிறார்கள். அடுத்து மீனவர் பிரச்சினை...

நம் மீனவர்கள் நம் நாட்டு எல்லைக்குள்  மீன்பிடித்தாலும் அவர்களை சுட்டு சுட்டு விளையாடியது இலங்கை கடற்படை...ஒவ்வொரு தடவையும் மீன்பிடிக்க செல்லும்போது மீன்களுக்காக வீசும் வலையில் மீன்களோடு  மீனவர்களின் பிணத்தையும் அள்ளிக்கொண்டு வந்தார்கள் மீனவர்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு துரும்பை கூட கிள்ளி போடாமல் ஆட்சியாளர்கள் இருந்தார்கள். நினைத்திருந்தால் மத்திய அரசை நிர்பந்தித்து  ராஜ பக்சேவை மிரட்டியிருக்க முடியும்...தொட்டதெற்கெல்லாம்  ராஜினாமா நாடகம் போடும் கலைஞரால் இந்த விசயத்தில் ஒன்றும் சொல்ல முடிய வில்லை. இது மீனவ மக்களின் மனதை அசைத்து பார்த்துவிட்டது...தொடர்ந்து சீமானின்  பிரச்சாரம் ஒரு காரணியாக அமைந்துவிட்டது.

ஸ்பெக்ட்ரம்

தவறான கொள்கைகளாலும், ஏல முறைகளாலும் அரசு கருவூலத்திற்கு சேரவேண்டிய 176000 கோடி ரூபாய்களை  பத்தாயிரம் கோடி, இருபதாயிரம் கோடி என்று லஞ்சம் வாங்கிக்கொண்டு தனியார் அலைபேசி கம்பெனிகளுக்கு தாரை வார்த்தது அரசு....இதில் கடந்த முறை ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், தி.முகவிற்கு கணிசமான பங்கிருந்தாலும் என்னவோ 1,76,000 கோடி ரூபாய்களையும் தி.மு.க-வே ஏகபோகமாக கொள்ளையடித்ததாக தொடர்ந்து பரப்புரை செய்து படித்தவர்களையும் பாமரர்களையும் ஒரு சேர நம்ப வைத்தது அண்ணா.தி.மு.க.கூட்டணி. அதன் தாக்கம்  நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராம புறங்களிலும் நன்றாகவே எதிரொலித்திருக்கிறது . 
இன்று கனிமொழிக்கு ஒரு பிரச்சினை என்றதும் அவரது வக்கீல் ராம்ஜெத்மலானி மூலம்,  இதன் முழுப்பொறுப்பு ராசாதான், கனிமொழி அல்ல என்று சொல்ல வைத்த கலைஞர்  இதே வார்த்தையை அன்று ராசா மீது குற்ற சாட்டு வைக்கப்பட்டவுடன் சொல்லி அவரை பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் நீக்கி வைத்திருந்தால் ஓரளவு கிளீன் இமேஜை தக்கவைத்திருக்கலாம். ஆனால், ராசா கைது செய்யப்பட்டும் கூட ஒருவர் கைது செய்யப்பட்டதால் மட்டுமே குற்றவாளியல்ல என்று கூறியதன் விளைவை  இப்போது அனுபவிக்கிறார்கள்.....

காங்கிரஸ்
ஈழப்பிரச்சினையிலும், மீனவர்கள் பிரச்சினையிலும் தி.மு.க-வை விட காங்கிரஸ் மீதே  மக்களுக்கு அதிக கோபம் இருந்தது. தொகுதி ஒதுக்கீட்டு பிரச்சினையை காரணம் காட்டியாவது  காங்கிரசை விட்டு வெளியேறி இருந்தால் குறைந்த பட்சம் எதிர்கட்சியாக கூட தி.மு.க வந்திருக்கலாம். (கடந்த காலத்தில் பிரபாகரனை  ஆதரித்து திருமங்கலத்தில் வைகோ பேசியதால் தான் அவரை பொடாவில் தள்ளினார் ஜெயலலிதா...அதன்பிறகு பிரபாகரனை பிடித்து தூக்கில் இடவேண்டும் என்றும், ஈழத்தில் போர் என்றால் பலர் சாகத்தான் செய்வார்கள் என்றும் கூறியவர்தான் ஜெ...முதன்முதலில் சீமானை கைது செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தவரும் அவர்தான்.ஆனாலும் பிரச்சினையின் வீரியம் அறிந்து தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்...ஜெயித்தும் விட்டார்).
  ஆனால், தன் குடும்பத்திற்கு ஏதும் ஆபத்து வந்துவிடக்கூடாது என்று தொடர்ந்து காங்கிரசை பிடித்து தொங்கினார் கலைஞர்...இன்று ஆட்சியையும் இழந்து தன் குடும்ப உறுப்பினர்களை உள்ளே அனுப்பும்  நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்று ஒரு கட்சிக்கு காமராஜர் காலத்தோடு கருமாதி பண்ணியாகிவிட்டது.இப்போது இருப்பது லட்டர் பேட் கட்சிதான். அதற்கு இவ்வளவுமுக்கியத்துவம் கொடுத்திருக்க கூடாது.

மேலும் தேர்தல் கமிசனையும் பாராட்டுகிறார்கள். பாராட்ட இதில் என்ன இருக்கு? அவர்கள் தன் கடமையை செய்திருக்கிறார்கள். வழக்கமாக தேர்தல் கமிசனின் செயல்பாடுகள் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவே இருக்கும். அதை மாற்றிக்காட்டி தேர்தல் கமிசனின் அதிகாரத்தை அறிய வைத்தவர் சேஷன்...இப்போது குரேஷி அந்த அதிகாரத்தை கையில் எடுத்திருக்கிறார் இன்னும் கொஞ்சம் கடுமையாகவே ...யாருக்கும் பணியாமல் தன் அதிகாரத்தை சரியாக நிலைநாட்டியிருக்கிறது தேர்தல் கமிஷன். அவர்கள் கொஞ்சம் அசந்திருந்தாலும் நிலைமை மாறியிருக்கும் என்பது என்னவோ உண்மை.

இந்த தேர்தல் நமக்கு உணர்த்தும் செய்தி என்னவென்றால்.....
மக்கள் பணத்திற்கோ, இலவசத்திற்கோ மயங்கி வாக்களிக்கவில்லை..அப்படி வாக்களித்திருந்தால் அதையெல்லாம் கொடுத்த தி.மு.க.வே திரும்ப வந்திருக்கும்.

அடுத்து....அதிகமான் அளவு வாக்கு பதிவானால் அது ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே இருக்கும் என்று சொல்லப்படுவதும் மாறியிருக்கிறது...ஆளுங்கட்சியின் அதிருப்தி கூட அதிகமான வாக்குபதிவின் மூலம் எதிரொலிக்கும் என்பது நிரூபணம் ஆகி இருக்கிறது.
சரி.....தி.மு.க. வீழ்ந்ததற்கான காரணங்களை அலசிவிட்டோம்...

அடுத்து அண்ணா.தி.மு.க., வென்றதற்கான காரணங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...