தன் அரசியல் வாழ்வின் மிகக் கடினமான காலகட்டத்தை தி.மு.க., கடந்துகொண்டிருக்கிறது. தி.மு.க., என்றால், கருணாநிதி. கருணாநிதி என்றால் கனிமொழி. அந்த வகையில், கனிமொழி என்றாலே கழகம் தான். கட்சிக்கு வந்த களங்கம் என்று மட்டுமில்லாமல், தன் அருமை மகள் கனிமொழி என்பதால், தனிப்பட்ட முறையில் முதல்வருக்கும் இது நெருக்கடி தான்.
உயர்மட்ட செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் இதுபற்றி விலாவாரியாகவே விளக்கினார் கருணாநிதி. "சில நாட்களாகவே சி.ஐ.டி., காலனி இல்லத்துக்குப்போகவில்லை. தாயும், மகளும், மற்றுமுள்ளவர்களும் படும் வேதனையைக் காணச்சகிக்கவில்லை' என்பதாக அவர் கவலைப்பட்டிருந்தார். கனிமொழி கைதாவாரா? கருணை காட்டப்படுமா? சட்டம் கைகொடுக்குமா? மத்திய அரசு கைவிடுமா? என, ஏராளமான கேள்விக்குறிகள் அறிவாலயத்தைச் சுற்றி எழுந்துகொண்டிருக்கின்றன. தேர்தல் முடிவைப் போலவே, ஆளாளுக்கு, தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் இதுபற்றி விசாரித்துக் கொண்டிருக்கின்றனர். எனக்கு கிடைத்த தகவலின்படி, கனிமொழியின் கைது, எந்த வகையிலும் தவிர்க்கப்பட முடியாது என்பது தான் உண்மை. இதுகுறித்து, சட்டவல்லுனர்களிடமும், சி.பி.ஐ., அதிகாரிகளிடமும் விசாரித்த வகையில் கிடைத்த தகவல்கள்: "2 ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கைப் பொறுத்தவரை, இதுவரை யார் யாரெல்லாம் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனரோ, அவர்கள் அனைவருமே கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
கனிமொழி ஒருவரைத் தவிர, குற்றம்சாட்டப்பட்டவர்கள் எவருமே வெளியில் இல்லை. இவர்களில், முதல் எதிரியாகச் சேர்க்கப்பட்டுள்ள ராஜா ஒருவர் தான், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் முன்பே கைது செய்யப்பட்டவர்கள். மற்றனைவரும் குற்றப்பத்திரிகைக்குப் பிறகு கைதானவர்களே. அந்த வகையில், கனிமொழி கைதாவதற்கும் அதிகளவு வாய்ப்புகள் உள்ளன. "குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலே, விசாரணை அதிகாரியின் வேலையில் பாதி முடிந்துவிடுகிறது. அதன் பிறகும் கைதின் அவசியம் என்ன?' என்ற வினா எழுப்பப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு, இரண்டு அம்சங்கள் முக்கியமானவை. ஒன்று, விசாரணை. இன்னொன்று சாட்சிகள். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதன் மூலம், விசாரணை வேண்டுமானால் பெருமளவு முடிந்திருக்கலாமே தவிர, சாட்சிகள் கலைக்கப்படும் அபாயம் தொடரவே செய்யும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும் கைது நடவடிக்கை மற்றும் சிறைவாசம் கொண்ட வழக்குகள், ஏராளமான முன்னுதாரணங்களாக உள்ளன.
சாதாரண வழக்குகளில் மட்டும் தான், குற்றப்பத்திரிகை தாக்கலும், கைதி விடுவிப்பும் தொடர்புபடுத்தப்படுகிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட கடும் குற்றங்களில் அவ்வாறு செய்யப்படுவதில்லை. ஒருவர் கைது செய்யப்பட்டு 60 நாட்கள் அல்லது 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால், அவர் ஜாமீன் பெறுவதற்கு இயல்பாகவே தகுதியாகிறார் என்பது சாதாரண நடைமுறை தானே தவிர; எல்லா வழக்குகளுக்கும் பொருந்துவதல்ல. ஸ்பெக்ட்ரம் வழக்கைப் பொறுத்தவரை, குற்றம்சாட்டப்பட்ட எல்லாருமே, சமூகத்தில் பெரும் செல்வாக்கு உடையவர்கள். இவர்கள், சாட்சியைக் கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவர் என்றால், நீதிமன்றம் இதை மிகச் சுலபமாக ஏற்றுக்கொள்ளும். இவர்கள் வெளியில் நடமாடுவதன் மூலம், சாட்சிகள் கலைக்கப்படலாம்; மிரட்டப்படலாம்; வழக்கில் தலையீடு அதிகரிக்கலாம் என்பன போன்றவை, சி.பி.ஐ.,யின் வாதமாக இருக்கும்.
சரணடையச் சொல்லியோ, கைதாகும்படியோ நீதிமன்றம் உத்தரவிடும்போது, ஜாமீன் கேட்டு கனிமொழி தரப்பு மனுத்தாக்கல் செய்யலாம். இதிலும், ராஜா ஒருவரைத் தவிர, மற்ற அனைவருமே ஜாமீன் கேட்டு, மனு தள்ளுபடி செய்யப்பட்டு, சிறையில் இருப்பவர்கள் தான். ராஜா மட்டுமே, இதுவரை ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, கனிமொழியின் ஜாமீன் மனுவும் ஏற்றுக்கொள்ளப்படும் வாய்ப்பு குறைவு. "இவர் வெளியில் நடமாடுவதால் வழக்குக்கு குந்தகம் இல்லை' என சி.பி.ஐ., உத்தரவாதம் தந்தால், ஜாமீன் தருவது பற்றி நீதிமன்றம் பரிசீலிக்கலாம். ஆனால், குற்றம்சாட்டப்பட்ட அத்தனை பேரின் ஜாமீனுக்கும் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, கனிமொழிக்கு மட்டும் சி.பி.ஐ.,யால் கருணை காட்ட முடியாது. மிகப் பெரிய உடல்நலக் குறைவோ, சிறைவாசம் அனுபவிக்க முடியாத, தள்ளாத வயதோ கூட கனிமொழிக்கு இல்லை. எனவே, உடல்நிலையைக் காரணம் காட்டியும் அவர் ஜாமீன் கோர முடியாது.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டும், சுப்பிரமணியசாமியும், இந்தியாவில் உள்ள அத்தனை ஊடகங்களும் நேரடியாகக் கண்காணிக்கின்றன. விசாரணை நீதிமன்றத்திலோ, விசாரணை அதிகாரிகளிடத்திலோ ஏதேனும் சின்னச் சலனம் தென்பட்டால் கூட, மிகப் பெரிய கூச்சல் கிளம்பிவிடும்; சுப்ரீம் கோர்ட் விளாசிவிடும். அந்த வகையிலும், கனிமொழி விட்டுவைக்கப்படுவது சிரமமே. இப்படி எல்லா அம்சங்களும் விரல் நீட்டுவது, சிறைச்சாலையே நோக்கியே! இருந்தாலும், "அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்' என்ற பொது விதி இருப்பதால் தான், திட்டவட்டமான இந்த விஷயம் கூட, சஸ்பென்சாகவே நீடிக்கிறது!
"தமிழகத்தில், 1996ல் நடந்த சம்பவங்கள் தற்போது நடக்கவுள்ளன. இதன் மூலம், ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் தடுமாறி வரும், தி.மு.க., மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள், அ.தி.மு.க., வட்டாரத்தில் முழுவீச்சில் நடந்து வருகின்றன' என, உயரதிகாரிகள் வட்டாரத்தில் ஒரு தகவல் உலவி வருகிறது.
கடந்த, 1991-96ல், அ.தி.மு.க., ஆட்சி முடிவுற்று, தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றது. ஐந்தாண்டு அ.தி.மு.க., அரசில் நடந்த ஊழல்கள் துறைவாரியாக பட்டியலிடப்பட்டு, வழக்குகள் வேகமாய் பாய்ந்தன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அப்போதைய சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, செங்கோட்டையன், செல்வகணபதி, கண்ணப்பன், மதுசூதனன், ஈஸ்வர மூர்த்தி, நாகூர் மீரான், இந்திரகுமாரி என, பெரும்பான்மையான அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சரமாரியாக சுமத்தப்பட்டன. போக்குவரத்து கழகங்களுக்கு உதிரி பாகங்கள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக செங்கோட்டையன் மீதும், இலவச, வேட்டி, சேலையில் ஊழல் செய்ததாக இந்திரகுமாரி மீதும், சுடுகாட்டு கொட்டகை அமைப்பதில் ஊழல் செய்ததாக செல்வகணபதி மீதும், மின் உற்பத்திக்கு நிலக்கரி வாங்கியதில் முறைகேடு செய்ததாக கண்ணப்பன் மீதும் வழக்குகள் பதிவாயின. தொடர்ந்து பாய்ந்த வழக்குகளால், அ.தி.மு.க., கடும் பின்னடைவை சந்தித்தது. அ.தி.மு.க.,வில் தொடர்ந்தால், வழக்குகள் நிச்சயம் என்ற பயத்தில் முக்கிய பிரமுகர்கள் சிலர், தி.மு.க.,விற்கு மாறினர்; சிலர், "ஆக்டிவ்' அரசியலில் இருந்து, "நல்லபிள்ளையாய்' ஒதுங்கி வழக்கில் இருந்து தப்பித்தனர். இந்த வழக்குகள் காரணமாக, மற்றொருபுறம் பொதுமக்கள் மத்தியில், அ.தி.மு.க., கடும் அவப்பெயரை பெற்றது. அந்த காலகட்டத்தில் போடப்பட்ட வழக்குகளை உதாரணமாக காட்டி, இன்று வரை எதிர்தரப்பு பிரசாரம் செய்யுமளவிற்கு இந்த வழக்குகள், அ.தி.மு.க.,வின் இமேஜை சேதப்படுத்தின.
இந்த தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதில் அக்கட்சி தலைமை உறுதியாக உள்ளது. அவ்வாறு ஆட்சி அமையும் போது, "1996ல் அ.தி.மு.க.,விற்கு எதிராக வழக்குகள் மூலம் கொடுக்கப்பட்ட நெருக்கடி, தற்போது, தி.மு.க.,விற்கு கொடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது. இந்த யோசனை அ.தி.மு.க.,விற்கு வரக் காரணமாக இருந்ததே இந்த ஆட்சியில் ஒதுக்கி வைக்கப்பட்ட, உயரதிகாரிகள் தான் என்கின்றனர் விவரமறிந்தவர்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் என்பதை புரிந்து கொண்ட அவர்கள், அடுத்து அமையும் அரசில் முக்கிய பதவிகளை பிடிக்க தற்போதிருந்தே காய் நகர்த்த துவங்கியுள்ளனர். அதற்காக, கடந்த ஐந்தாண்டு கால, தி.மு.க., ஆட்சியில், துறை வாரியாக நடந்த முறைகேடுகள், ஊழல் விவகாரங்களை ஆதாரங்களோடு பட்டியல் போட்டு, அ.தி.மு.க., தலைமையிடம் கொடுத்துள்ளனர். அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், இந்த ஆதாரங்களின் அடிப்படையில், தற்போதைய முதல்வர் கருணாநிதியில் துவங்கி, அவரது முன்னணி அமைச்சரவை சகாக்கள் மீது வழக்குகள் பதிவாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, பொதுப்பணித் துறை, தொழில் துறை, மின் துறை, போக்குவரத்து, உணவு, உயர்கல்வி, சுகாதாரம், நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட துறைகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பான ஆவணங்கள் தற்போது தொகுக்கப்பட்டுள்ளது என்கிறது அதிகாரிகள் வட்டாரம்.
பொதுப்பணித் துறையில் நடந்த பெரிய திட்டங்களுக்கு யார், யாருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. பணிகளின் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் குற்றசாட்டு பதிவு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு தொழில் நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் பின்னணி குறித்தும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் குறித்தும் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு, 50 கோடி ரூபாய் வரை செலவு செய்து, தமிழ்நாடு மின்சார வாரியம் வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கி வருகிறது. இது குறித்தும், மின் உற்பத்திக்கு நிலக்கரி வாங்கியதில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து துறையில், ஜவகர்லால் நேரு நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 5,000க்கு மேற்பட்ட புது பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் வாங்கியதில் உள்ள பின்னணி குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்ட மளிகை பொருள்கள் கொள்முதல், அரிசி கடத்தல் ஆகிய விவகாரங்கள் உணவுத் துறையை குறிவைத்து சேகரிக்கப்பட்டுள்ளன.
மருந்து கொள்முதல், நெடுஞ்சாலைத் துறையில் மேற்கெண்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பணிகளில் நடந்த முறைகேடுகள், புதிதாய் துவங்கப்பட்ட கல்லூரிகளின் பின்னணி குறித்தும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. இது தவிர, புதிய தலைமைச் செயலகம் கட்டுமானப் பணி விவகாரம், செம்மொழி மாநாட்டையொட்டி கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட, 1,000 கோடி ரூபாய்க்கு மேலான வளர்ச்சி பணிகள் போன்றவற்றில் உள்ள குறைபாடுகளும் தொகுத்து, அ.தி.மு.க., தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் சிலர் மீது எழுந்துள்ள கொலை சம்பவங்களில் தொடர்பு, நில ஆக்கிரமிப்பு, மிரட்டல், கட்டப் பஞ்சாயத்து போன்ற புகார்கள் தூசி தட்டப்பட உள்ளது.
மொத்தத்தில், ஆட்சி மாற்றம் ஏற்படுமானால், அடுத்தடுத்து பாயும் வழக்குகள் மூலம், தி.மு.க.,வை நிலைகுலைய வைக்க வேண்டும் என்ற திட்டம், உயரதிகாரிகளின் பரிபூரண ஒத்துழைப்பில் நிச்சயம் நடக்கப் போகிறது என்கின்றனர், அ.தி.மு.க., முன்னணி நிர்வாகிகள்.
No comments:
Post a Comment