Monday, May 23, 2011

சென்னை போலீஸ் கமிஷ்னராக 'என்கெளண்டர்'திரிபாதி: அச்சத்தில் ரெளடிகள்!


சென்னை நகர புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள ஜே.கே.திரிபாதி 3 ஆண்டுகள் தென் சென்னை இணை போலீஸ் கமிஷனராக பணியாற்றியபோது தான் பிரபல தாதா அயோத்திகுப்பம் வீரமணி உள்பட 12 ரெளடிகள் `என்கெளண்டரில்' போலீசாரால் போட்டுத் தள்ளப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது இவரே கமிஷ்னராகியுள்ளதால் சென்னை ரெளடிக் கும்பல்களிடையே பெரும் அச்சம் நிலவுவதாகத் தெரிகிறது.

அப்போது போலீஸ் கமிஷனராக இருந்த விஜயகுமாரின் பக்கபலத்தோடு ரெளடிகளை வேட்டையாடினார் திரிபாதி. இதனால் பல ரெளடிகள் சென்னை நகரை காலி செய்துவிட்டு ஓட்டம் பிடித்ததும் நடந்தது.

இந் நிலையில் சென்னை போலீஸ் கமிஷ்னராக பதவியேற்ற திரிபாதி அளித்த பேட்டி:

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கு முதலில் முக்கியத்துவம் கொடுத்து அரசு கடமையாற்றும் என்று முதல்வர் கூறியுள்ளார். அவரது கூற்றுப்படி, சென்னை நகரில் சட்டம்- ஒழுங்கு பிரச்சனைக்கு முதல் முக்கியத்துவம் கொடுத்து போலீசார் பணியாற்றுவார்கள்.

ரெளடிகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள். அனைத்து குற்றங்களையும் குறைப்பதற்கு உரிய வழிவகை காணப்படும். செயின் பறிப்பு, பிக்பாக்கெட், வழிப்பறி, திருட்டு போன்ற எல்லாவித குற்றங்களையும் தடுப்பதற்கும், நடந்தவற்றை கண்டுபிடிப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 10 ரூபாய் கூட மக்களுக்கு இழப்பு ஏற்படக்கூடாது என்ற வகையில் சென்னை போலீசாரின் செயல்பாடு இருக்கும்.

மக்கள் இரவு நிம்மதியாக தூங்கிவிட்டு, காலையில் நல்லபடியாக எழுந்து சூரிய உதயத்தை பார்க்கவேண்டும். அதற்கேற்ற வகையில் போலீசாரின் செயல்பாடு இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அது நிறைவேற்றப்படும். குழந்தைகள் நல்லபடியாக பள்ளிக்கு போய்விட்டு சந்தோஷமாக பயமில்லாமல் வீடு திரும்பிவர வேண்டும். பெற்றோர்களுக்கு, நமது குழந்தைக்கு என்ன ஆனதோ? என்ற பயம் இருக்கக்கூடாது.
அதுபோல வீடுகளில் பெண்களும், முதியோர்களும் தனியாக பயமில்லாமல் இருக்கும் வகையில் ஒரு நல்ல சூழ்நிலை உருவாக வேண்டும். அதற்கேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். சென்னை போலீசார் இதை ஒரு சவாலாக ஏற்று வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.

ரவுடிகள் மீது `என்கெளண்டர்' நடவடிக்கைகள் மீண்டும் எடுக்கப்படுமா? என்று கேட்டதற்கு, `என்கெளண்டர்' என்பது போலீசாரின் கொள்கையல்ல. குற்றவாளிகளை பிடிக்கும்போது மோதல் ஏற்பட்டால், தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள போலீசார் பயன்படுத்தும் கடைசி ஆயுதம்தான் அது என்றார்.

புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சாரங்கியைப் போல இவரும் ஒரிஸ்ஸா மாநிலத்தைச் சேர்ந்தவரே என்பது குறிப்பிடத்தக்கது.


கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் :
திகார் சிறையில் சந்தித்தார்

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி, ஜாமின் மறுக்கப்பட்டு, டில்லி திகார் சிறையில் இருக்கும் தன் மகள் கனிமொழியை, முன்னாள் முதல்வரும், தி.மு.க., தலைவருமான கருணாநிதி நேற்று நேரில் சந்தித்தார். பயப்படாமல் இருக்கும்படி ஆறுதல் கூறினார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராஜ்யசபா எம்.பி., கனிமொழியின் ஜாமின் மனுவை, கடந்த வெள்ளியன்று, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி சைனி நிராகரித்ததால், அன்று மாலையே, திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.உடன் கனிமொழியின் தாயார் ராஜாத்தி டில்லி வந்தார். மறுநாள், பாட்டியாலா கோர்ட்டில் கனிமொழி ஆஜரான போது, மகளை கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்தினார் ராஜாத்தி.கோர்ட்டில் நடைபெற்ற உருக்கமான சந்திப்புக்கு பின், கனிமொழியின் தந்தை கருணாநிதி, எப்போது டில்லிக்கு வருவார் என்ற பரபரப்பு ஏற்பட்டது.கனிமொழி கைது செய்தி கேள்விப்பட்டவுடனே, கருணாநிதி, டில்லிக்கு கிளம்பலாம் என, முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால், அன்றைய தினம், நிருபர்களிடம் பேசிய அவர், "தற்போதைக்கு டில்லி செல்லும் திட்டம் இல்லை' என்று கூறினார்.அடுத்த நாள், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில், கருணாநிதி கலந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால், அந்த நிகழ்ச்சியில், தி.மு.க., சார்பில், டி.ஆர்.பாலு மட்டும் பங்கேற்றார். இது, தி.மு.க., - காங்கிரஸ் இடையே இணக்கமான உறவு இல்லை என்பதை வெளிப்படுத்தியது.

இந்நிலையில், நேற்று காலை, சென்னையிலிருந்து டில்லிக்கு வந்தார் கருணாநிதி. காலை, 11.30 மணிக்கு, டில்லி விமான நிலையம் வந்து சேர்ந்த அவர், அங்கிருந்து நேராக கான்மார்க்கெட் அருகில் உள்ள தாஜ்மான்சிங் நட்சத்திர ஓட்டலுக்கு விரைந்தார்.அங்கு, தி.மு.க ., எம்.பி.,க்கள் சிலருடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். சிறிய ஓய்வுக்கு பின், மாலை, 5 மணிக்கு, ஓட்டலை விட்டு கிளம்பினார். அவருடன் ராஜாத்தி, கனிமொழியின் கணவர் அரவிந்தன், டி.ஆர்.பாலு ஆகியோர் உடன் சென்றனர். இரண்டு கார்கள் மற்றும் ஒரு எஸ்.பி.ஜி., வாகனம் புடைசூழ, திகார் சிறைக்கு சென்ற கருணாநிதி, சரியாக, 5.45 மணிக்கு உள்ளே சென்றார்.மீடியாக்கள் குவிந்திருந்த கேட்டை தவிர்த்து விட்டு, வேறுவழியாக, கருணாநிதியும், அவருடன் வந்தவர்களும் உள்ளே சென்றனர். அப்போது, சிறைக்கு வெளியே, எம்.பி.,க்கள் சிவா, ரித்தீஷ், ஜெயதுரை போன்றவர்கள் காத்திருந்தனர்.

கருணாநிதி உள்ளே சென்றபோது, அதற்கு முன்பாகவே, சந்திப்புக்கான ஏற்பாடு, முறைப்படி செய்யப்பட்டிருந்தது. அதாவது, 1ம் நம்பர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராஜாவையும், 4ம் நம்பர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சரத்குமார் ரெட்டியையும், கனிமொழி அடைக்கப்பட்டிருக்கும், 6ம் நம்பர் சிறைக்கு அழைத்து வந்திருந்தனர். அருகில் உள்ள சிறை கண்காணிப்பாளர் அறையில், இவர்கள் மூன்று பேரும் காத்திருக்க, கருணாநிதி அங்கு சென்றார்.இந்த சந்திப்பின்போது, கருணாநிதியுடன் ராஜாத்தி, அரவிந்தன், துரைமுருகன், பொன்முடி, சண்முகநாதன் ஆகியோர் உடனிருந்தனர். உடன் சென்றிருந்த டி.ஆர்.பாலு, வெளியிலேயே நின்று கொண்டிருந்தார். தன்னை சந்திக்க வந்த தந்தை கருணாநிதியை பார்த்ததும் கனிமொழி சற்று உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கியதாகக் கூறப்படுகிறது. அவருக்கு, பயப்படாமல் இருக்கும்படி கருணாநிதி ஆறுதல் கூறியதாகத் தெரிகிறது.
நீண்ட இடைவெளிக்குப்பின் சந்திக்கும் ராஜாவிடமும் சில நிமிடங்கள் பேசிய கருணாநிதி, அவருக்கும் ஆறுதல் தெரிவித்தார். பின்னர், சரத்குமார் ரெட்டியிடமும் ஆறுதல் தெரிவித்துவிட்டு, தனது, 45 நிமிட சந்திப்பை முடித்துக் கொண்டு கருணாநிதி வெளியே வந்தார்.

மகளைச் சந்தித்த பின், கருணாநிதி நேராக விமான நிலையத்துக்கு சென்று சென்னைக்கு கிளம்ப திட்டமிட்டிருப்பதாக முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தன் சென்னை பயணத்தை ரத்து செய்துவிட்டதாக, அப்போது தான் தகவலும் கிடைக்க, திரும்பவும் தாஜ்மான்சிங் ஓட்டலுக்கே திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.இதற்கு மாறாக, அந்த ஓட்டல் வேண்டாம் என்றும், வேறு ஓட்டலில் தங்க ஏற்பாடு செய்யும்படியும் கருணாநிதி தெரிவித்து விட்டதாக கூறப்பட்டது. ஓட்டலில் தங்கியிருந்த கருணாநிதியை, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் நேற்றிரவு சந்தித்துப் பேசினார்.

ஏற்கனவே, கருணாநிதி சென்னையில் அளித்த பேட்டியில், "சோனியாவை சந்திக்கப் போவதில்லை' என, கூறியிருந்தார். சோனியா, நேற்று ஒரு நாள் அவசரப் பயணமாக காஷ்மீர் சென்றிருந்தார். பிரதமர் மன்மோகனும் எத்தியோபியா பயணம் மேற்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், ஸ்பெக்ட்ரம் வழக்கு நடைபெறும் பாட்டியாலா கோர்ட்டில் ஆஜராக, நேற்று, கனிமொழி வந்த போது, அவரை மத்திய ரசாயன அமைச்சர் அழகிரி மனைவி காந்தியும், அவரது மகன் துரை தயாநிதியும் சந்தித்தனர். கனிமொழி நிலைகண்டு கலங்கினார் காந்தி. அங்கிருந்த ராஜாத்தியுடனும் காந்தி பேசினார். அதேநேரத்தில், முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினும் நேற்றிரவு டில்லி வந்தார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...