Sunday, May 29, 2011

தி.மு.க., - காங்., உரசல் ஆரம்பம்

தமிழக சட்டசபை தேர்தலில், மரண அடி வாங்கிவிட்டது தி.மு.க., இந்த முடிவு, டில்லியிலும் தி.மு.க.,வுக்கு பல பிரச்னைகளை ஏற்படுத்த உள்ளது. "தேர்தலில் தி.மு.க.,வுக்கு வெற்றி கிடைக்காது' என, டில்லி காங்கிரஸ் தலைவர்களுக்கு சொல்லப்பட்டது. ஆனாலும், இந்த அளவுக்கு மோசமாக இருக்கும் என, காங்கிரஸ் தலைவர்கள் எண்ணிப் பார்க்கவில்லை. ஸ்பெக்ட்ரம் ஊழல் தான் தோல்விக்குக் காரணம் என்பதை, காங்கிரஸ் வெளிப்படையாக சொல்லாவிட்டாலும், தனியாக பேசும் போது, அது தான் காரணம் என ஒத்துக் கொள்கின்றனர். "வேறு வழியில்லாமல், தி.மு.க., வுடன் கூட்டணியை தொடர வேண்டியதாயிற்று. அதற்கான பலனை இப்போது அனுபவிக்கிறோம்' என்கிறது காங்கிரஸ் வட்டாரம்.இனிமேல் தி.மு.க., வுடன் கூட்டணி தொடருமா என்று கேட்டால், "இப்போதைக்கு தேர்தல் எதுவும் கிடையாது. அதனால், கூட்டணி பற்றி எதற்கு பேச வேண்டும்' என்கின்றனர் காங்கிரசார். லோக்சபா தேர்தல், 2014ல் நடை பெற உள்ளது. அப்போது, தி.மு.க.,வுடன் நிச்சயம் கூட்டணி இருக்காது என்றும் காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது. "அ.தி.மு.க., - காங்., கூட்டணி தான், 2014ல் லோக்சபா தேர்தலை சந்திக்கும்' என்கிறார் ஒரு காங்கிரஸ் எம்.பி., "அ.தி.மு.க., வை தன் பக்கம் இழுக்க, பா.ஜ., முயற்சிக்கும். ஆனால், மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வர, பா.ஜ.,வுக்கு வாய்ப்பு கிடையாது' என்றும் அவர் கூறுகிறார்.

ராஜ்யசபாவில் உயரும் அ.தி.மு.க., எண்ணிக்கை

அ.தி.மு.க.,வின் வெற்றி, பார்லிமென்டிலும் எதிரொலிக்கும். ராஜ்யசபாவில், தமிழகத்திலிருந்து 18 எம்.பி.,க்கள் உள்ளனர். இதில், ஏழு பேர், தி.மு.க., வைச் சார்ந்தவர்கள். ஐந்து பேர், அ.தி.மு.க., வினர். நான்கு காங்கிரஸ். இரண்டு இடது சாரிகள்.வரும் 2013ல், ஆறு எம்.பி.,க்களின் பதவிக்காலம் முடிகிறது. இதில் இளவரசன், டாக்டர் மைத்ரேயன் ஆகியோர் அ.தி.மு.க.,வைச் சார்ந்தவர்கள். தி.மு.க., விலிருந்து, கனிமொழி, திருச்சி சிவா ஆகியோரும், காங்கிரசிலிருந்து, ஞானதேசிகன், இடதுசாரியிலிருந்து, டி.ராஜா ஆகியோருடைய பதவிக்காலம் முடிகிறது.இந்த ஆறு சீட்களையும் தற்போது, அ.தி.மு.க.,வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் கைப்பற்றும். இதனால், அ.தி.மு.க.,வின் பலம், ராஜ்யசபாவில் அதிகமாகும். கூட்டணிக்கட்சி எம்.பி.,யான டி.ராஜாவுக்கு, மீண்டும் எம்.பி.,யாக வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யெச்சூரி கிண்டல்

சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு இரண்டு நாட்களுக்கு முன், இடதுசாரி தலைவர் சீதாராம் யெச்சூரியும், காங்கிரஸ் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷûம் சந்தித்துக் கொண்டனர். எப்போதும், மற்றவர்களை கேலி செய்து, ஏளனமாகப் பேசும் ஜெய்ராம், ராஜ்யசபா எம்.பி., யெச்சூரியிடம், "மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும், உங்கள் கட்சி தோற்கப் போகிறது. எப்படி நீங்கள் மறுபடியும் ராஜ்யசபாவுக்கு வரப் போகிறீர்கள்?' என்று கிண்டலாகக் கேட்டார். இந்த மாநில எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளித்தால் தான், யெச்சூரி மீண்டும் எம்.பி.,யாக முடியும்.உடனே யெச்சசூரி, "நான் ராஜ்யசபாவுக்கு வருவது இருக்கட்டும்... நீங்கள் எங்கிருந்து ஜெயிக்கப் போகிறீர்கள்? ஆந்திராவில், ஜெகன் ஆட்சிக்குப் பிறகு, அங்கு காங்கிரஸ் ஆட்சி ஆட்டம் காணப் போகிறதே?' என்றார். தற்போது, ஆந்திராவிலிருந்து, ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார் ஜெய்ராம்.யெச்சூரியின் கேள்விக்கு பதில் அளிக்காமல், அமைதியாக சென்றுவிட்டார் ஜெய்ராம்.

அம்மாவுக்காக அமைச்சர் படும் பாடு

முன்னாள் சபாநாயகர் சங்மாவின் மகள், அகதா சங்மா. மத்திய அமைச்சராக உள்ளார். 29 வயதிலேயே அமைச்சராகி, சாதனை ஏற்படுத்தியவர் இவர். இவருடைய தாயார் மேகாலயாவில் உள்ளார். அவரை அடிக்கடி டில்லிக்கு அழைத்து வருகிறார் அகதா. மேகாலயாவிலிருந்து டில்லிக்கு, ரயிலில் பயணம் செய்வது தான் வசதி. ஆனால், இவருடைய அம்மாவை, அரசு செலவில் தன்னுடன் அழைத்து வர முடியாது. காரணம், தன்னைச் சார்ந்து தன் தாய் இருந்தால்தான், எம்.பி., என்ற முறையில், அம்மாவின் செலவை அரசு ஏற்றுக் கொள்ளும். அகதாவின் அப்பா சங்மா, முன்னாள் சபாநாயகர். அதனால், அவருடைய மனைவிக்கு அவர் தான் பாதுகாப்பாளர். எப்படியாவது, தன் அம்மாவுக்கு ரயில் பாஸ் வாங்க முயற்சித்தார். சிறப்பு ரயில் பாஸ் வேண்டி, சபாநாயகர் மீரா குமாருக்கு கடிதம் எழுதினார். ஆனால், மறுத்துவிட்டார் சபாநாயகர்.வெறுத்துப் போன அகதா, உடனே ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதினார். அகதாவுக்கு ஆதரவாக, எந்த நேரமும் இலவசமாக வந்து போகும்படி, ரயில் பாஸ் வழங்க சிபாரிசு செய்துள்ளார் மம்தா. மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கும் முன், அகதாவிற்கு சாதகமாக கையெழுத்திட்டுள்ளார் மம்தா. ஒரு பெண்ணின் பிரச்னையை, மற்றொரு பெண்தானே உணர முடியும்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...