“அரசியலில் ஊழல் புரையோடிப் போயிருப்பதற்கும் தார்மீக நெறிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரசியலில் உள்ள ஆளுமைகளின் தார்மீக வீழ்ச்சிக்கும் அதற்கும்கூட சம்பந்தமில்லை. ஏனெனில் அரசியல் ஒரு லௌகீகமான (பொருண்மை சார்ந்த) காரியம். வர்த்தக, தொழில் உலகின் அனிச்சைச் செயல்தான் (reflex) அரசியல். கொடுப்பதைவிட எடுத்துக்கொள்வதே போற்றுதலுக்குரியது’, ‘ஒரு கறைபட்ட கரங்களை மற்றொரு கரம் தூய்மைப்படுத்தி விடும்’ என்பதே இதன் தாரக மந்திரம்.”
- எம்மா கோல்ட்மேன், 1869-1940,
அரசு நிர்வாகச் சீர்குலைவு நிலை (anarchy) குறித்த அரசியல் தத்துவ அறிஞர்.
அரசு நிர்வாகச் சீர்குலைவு நிலை (anarchy) குறித்த அரசியல் தத்துவ அறிஞர்.
சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் அரசியல்-பொருளாதாரத்தின் மீது மிக அதிகமான தாக்கத்தை செலுத்திய காங்கிரஸ் கட்சிதான் சூட்கேஸ் அரசியலை இந்த தேசத்திற்கு அறிமுகப்படுத்தியது. அதை ஷேர் அரசியலாக மாற்றியிருக்கும் தி.மு.க.வுக்கும் அவர்கள் உற்ற துணையாக இருந்திருக்கிறார்கள் என்பது இந்திய வரலாற்றில் காங்கிரசின் தாத்பர்யத்தை நீடித்து நிலைக்கச் செய்கிறது. இந்தியாவின் அரசியல் பொருளாதாரத்தின் மீது தாக்கம் செலுத்தும் ஜாதி, மதம், மொழி, பிராந்தியம் போன்ற பல்வேறு இயக்குசக்திகளையும் விட வர்த்தக, தொழில் உலகத்தின் தாக்கம் மிகப் பெரியது. ரத்த உறவுகளால் தீர்மானிக்கப்படும் வாரிசு அரசியலின் இயக்கு சக்தி அதற்கு நிகரானது. இந்தியாவின் மிகப் பெரிய அரசியல் குடும்பம் ஒன்றின் வர்த்தக, உறவு மோதலுக்கு நடுவில் மீன் பிடித்த முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா இப்போது சிறையில். அவரைப் பயன்படுத்திப் பயனடைந்த தொழில் துறையினரும் கருணாநிதியின் உறவினர்களும் மட்டுமின்றி, ராசாவினால் பாதகம் அடைந்த கோபத்தினால் அவரை அம்பலப்படுத்துவதில் பங்கெடுத்த கருணாநிதி குடும்பத்திலுள்ள ‘ராசா அண்ட் கோ’வின் விரோதிகளும் ஒவ்வொருவராக அம்பலமாகி வருகிறார்கள்.
ஸ்பெக்ட்ரம் ஊழலிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வதற்காகவும் பி.ஜே.பி.யை மாட்டிவிடுவதற்காகவும் தற்போதைய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் அமைத்த நீதிபதி ஷிவ்ராஜ் பாட்டீல் ஒரு நபர் கமிட்டி புதிய பூதங்களைக் களத்தில் இறக்கிவிட்டிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தை ஆட்டுவிப்பதில் இதுவரை திரைமறைவாக இருந்த தயாநிதி மாறன் குடும்பத்தின் பங்களிப்புகள் இப்போது சந்திக்கு இழுக்கப்படுகின்றன.
டாடா ஸ்கை நிறுவனத்தில் 33 சதவீதப் பங்கைக் கேட்டு டாடா நிறுவனத்தை மாறன் சகோதரர்கள் மிரட்டினார்கள் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட ஏராளமானோர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். அது உண்மையோ, இல்லையோ தெரியவில்லை. ஆனால் மாறன்களுக்கு டாடாவின் மீது கடுமையான ஆத்திரம் இருந்திருக்கிறது என்பதை நிரூபிக்கும் சந்தர்ப்ப சாட்சியங்கள் கிடைத்திருக்கின்றன. தயாநிதி மாறன் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது ஐடியா செல்லுலார் நிறுவனத்தில் டாடா நிறுவனத்திற்குப் பங்கு இருந்த காரணத்திற்காகவே ஓராண்டிற்கு மேல் அதன் அலைவரிசை ஒதுக்கீட்டு விண்ணப்பம் தேவையற்ற காரணங்களுக்காக முடக்கி வைக்கப்பட்டது என்ற அர்த்தத்தைக் கொடுக்கும் வகையிலான தகவல்கள் நீதிபதி ஷிவ்ராஜ் பாட்டீலின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
இத்தகைய நெருக்கடிகளாலோ என்னவோ, ஐடியா செல்லுலாரிலுள்ள தனது அத்தனை பங்குகளையும் டாடா நிறுவனம் வாபஸ் பெறுகிறது. அது நடந்த குறுகிய காலத்தில் நீண்ட காலமாகத் தடைபட்டிருந்த ஐடியா செல்பேசி சேவை நிறுவனத்திற்கான அலை வரிசை ஒதுக்கீட்டை முடித்து வைக்கிறார் தயாநிதி மாறன். டாடா மீதான தனிப்பட்ட, வர்த்தக விரோதத்தால் இந்தக் காரியம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இத்தகைய குற்றச்சாட்டுகளை அவர்கள் தரப்பு மறுக்கலாம். ஆனால் 2007ஆம் ஆண்டில் தி.மு.க. தலைவர் மு.கருணா நிதிக்கு ரத்தன் டாடா எழுதிய கடிதம் மாறன் சகோதரர்களுடன் அவருக்கிருந்த பகையை மறைமுகமாக உணர்த்துகிறது. ராசாவைப் பெரிதும் பாராட்டும் அந்தக் கடிதம், எப்படியானாலும் ராசாவையே தொலைத்தொடர்பு அமைச்சராக நீடிக்கச் செய்வதுதான் தங்களின் நலனுக்கு நல்லது என்ற டாடாவின் எண்ணத்தைக் காட்டுகிறது. “ஒரு சில உள்நோக்கம் கொண்ட சக்திகள் ராசாவின் சிறந்த நடவடிக்கைகளை” எதிர்ப்பதாகவும் ராசாவின் திட்டங்கள் “நேர்மையானவை, சரியானவை” என்றும் அந்தக் கடிதத்தில் கூறுகிறார் ரத்தன் டாடா. உள்நோக்கம் கொண்ட சக்திகள் என்று அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்பதை விளக்க வேண்டியதில்லை. ராசாவை ஏன் “நேர்மையான”வர் என கூறுகிறார் என்பதையும் சொல்ல வேண்டியதில்லை.
குற்றவுணர்வு மிகுந்த கண்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் செய்தி சேனல்களின் ஆசிரியர்களுடனான விவாதத்தில் கலந்துகொண்டது வெறுமனே ராசாவுடன் சம்பந்தப்பட்டது அல்ல. ராசாவின் ஒவ்வொரு முறைகேட்டிற்கும் அவர் எவ்வாறெல்லாம் வளைந்துகொடுத்தாரோ அதேபோல தயாநிதி மாறனுக்கும் செய்திருக்கிறார். தயாநிதி மாறனின் நெருக்குதலுக்கு இணங்கி, அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு மட்டுமே அலைவரிசையின் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற விதியை மாற்றுவதை வேடிக்கை பார்த்தார்.
விலையை நிர்ணயம் செய்யும் இடத்தில்தான் பேரங்களின் சூட்சுமம் அடங்கியிருக்கிறது என்பதால் தயாநிதி மாறனும் சரி, ராசாவும் சரி அது தங்கள் கையை விட்டுச் செல்வதை அனுமதிக்கவே இல்லை. 2001ஆம் ஆண்டில் விலை நிர்ணயத்தில் ராசா அலைவரிசையை விற்றது நாட்டுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது என்றால், தயாநிதி மாறனும் அதையேதான் செய்தார். மீட்க முடியாத தேசத்தின் வள ஆதாரத்தை ஒரு சில தனி நபர்கள் தாங்கள் இஷ்டப்பட்ட விலைக்குக் கூறு போட்டு கள்ளச் சந்தையில் விற்றார்கள். பிரதமர் அதை வேடிக்கை பார்த்தார். மன்னராட்சிகளில் மட்டுமே இது நிகழும். ட்ராய், டெலிகாம் கமிஷன், அமைச்சரவைக் குழு முதலிய எந்த அமைப்புக்கும் கட்டுப்படாமல் தயாநிதி மாறனும் ராசாவும் தேசத்தின் சொத்தான அலைவரிசையைத் தங்கள் சொத்தினைப் போல் விற்றிருக்கிறார்கள்.
நக்சல்கள் காட்டுக்குள் ஒளிந்து கொண்டு ஒரு கலெக்டரையோ, போலீஸ் அதிகாரியையோ அவ்வப்போது கடத்தி பணயத் தொகையைப் பெறுகிறார்கள். ஆனால் அரசியல்வாதிகள் சலவை மாறாத உடைகளின் அப்பழுக்கற்ற தோற்றத்தை கேமராக்களுக்குக் காட்டிவிட்டு, பொதுச் சொத்துக்களை பணயப் பொருளாக வைத்து சம்பாதிக்கும் அசிங்கமான காரியங்களை ஏ.சி. அறைக்குள் நிகழ்த்துகிறார்கள். ஏர்செல் நிறுவனம் சன் டைரக்ட் நிறுவனத்தில் “முதலீடு” செய்ய அவ்வாறு தான் பலவந்தப்படுத்தப்பட்டது என்று ஆங்கில நாளிதழ்கள் செய்தி வெளியிடுகின்றன. 2004ஆம் ஆண்டு அலைவரிசை ஒதுக்கீட்டிற்காக அப்போது டிஷ்நெட் என்ற பெயரில் அறியப்பட்ட அந்த நிறுவனம் விண்ணப்பிக்கிறது. தயாநிதி மாறன் தான் தொலைத்தொடர்பு அமைச்சர்.
“தேவையற்ற”, “தெளிவற்ற” விளக்கங்களைக் கோரி அதற்கான ஒதுக்கீடு தாமதப்படுத்தப்பட்டதாக நீதிபதி ஷிவ்ராஜ் பாட்டீல் கமிட்டியின் அறிக்கை கூறுகிறது. கடைசியில் 2006ல்தான் ஏர்செல்லாக மாறும் அந்த நிறுவனத்திற்கு அலைவரிசை ஒதுக்கப்படுகிறது. அதற்கடுத்த நான்கே மாதங்களில் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் குழுமத்தின் சன் டைரக்ட் டி.டி.எச். நிறுவனத்தில் 675 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது ஏர்செல் நிறுவனத்தின் அதிபரான அனந்த கிருஷ்ணனின் குழும நிறுவனம் ஒன்று. இது ஒரு முழுமையான பிசினஸ் முதலீடு மட்டுமே என்றும் இதற்கும் ஸ்பெக்ட்ரம் முறைகேடுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சன் குழுமம் விளக்கம் கொடுத்திருக்கிறது. ஆனால் அலைவரிசை ஒதுக்கீட்டிற்கான பிரதிபலனாகத்தான் இந்தப் பணம் முதலீடு செய்யப்பட்டது என்ற சந்தேகத்தை ஆங்கில நாளிதழ்கள் எழுப்புகின்றன.
ஸ்பெக்ட்ரம் விருந்தில் பங்கு போட்டுக் கொண்ட ஒவ்வொருவரும் இப்போது ‘நான் அவன் இல்லை’ என நடித்து தப்பித்துவிட நினைக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கான லஞ்சமாகத்தான் கலைஞர் டி.வி.க்கு 206 கோடி ரூபாய் கடன் வந்தது என்பது சத்தியமாக உண்மை அல்ல என்கிறார் அந்த சேனலின் எம்.டி ஷரத் குமார். எனினும் இந்த ஒரு ஆதாரத்தை வைத்தே கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களை சி.பி.ஐ. கைது செய்யமுடியும் என்பது பலரையும் கடும் பீதியில் உறைய வைத்திருக்கிறது. 2ஜி அலை வரிசை ஒதுக்கீட்டில் அதிக பலன் அடைந்தது நாங்கள் அல்ல, மற்ற பலர்தான் என்று சொல்லி டாடா நிறுவனத்தை மாட்டிவிடப் பார்க்கிறார் அனில் அம்பானி. 2ஜி அலை வரிசை ஒதுக்கீட்டு முறைகேடுகள் அனைத்தையும் பற்றி ஒரு நாள் முழுக்க சி.பி.ஐ. யிடம் சாட்சியம் அளிப்பேன் என்று கூறிய காவிக் கோஷ்டியைச் சேர்ந்த முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் அருண் ஷோரி இப்போது பின்வாங்கி, தப்பித்தோடும் வழியைத் தேடி ஓடுகிறார். நரகத் தின் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி இந்தத் தொல்லைகளிலிருந்து தனக்குக் கிடைத்த விடுதலையை முதல் முதலாக ரசிக்கிறார் பிரமோத் மகாஜன்.
இந்தியாவை நிஜமாக ஆளும் கார்ப்பரேட் உலகம் இந்த 2ஜி பூதத்தை எவ்வாறு பாட்டிலில் அடைப்பது எனத் தெரியாமல் திணறுகிறது. பூதாகாரமான ஈகோ மோதல்களிலும் போட்டி பொறாமையிலும் சிக்கி சிடுக்கு விழுந்திருப்பதால் பரஸ்பர நலன்கள் அடிவாங்கினாலும் அவர்களால் ஒரு சுமுகமான இடத்திற்கு வர இயலவில்லை. “சுகவீனப்பட்டு படுக்கையில் வீழ்ந்திருக்கும்போது, ஒரு பக்கமிருந்து இன்னொரு பக்கம் புரண்டு படுத்தால் நன்றாக இருப்பது போல் தோன்றும். அதேபோலத்தான் அரசியல்” என்று கூறினார் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரபல ஜெர்மானிய எழுத்தாளர் வோல்ஃப்காங் வான்கோ. தமிழக அரசியலிலும் ஸ்பெக்ட்ரம் ஊழலின் விளைவாக பொதுமக்கள் அப்படியான ஒரு மனநிலைக்கு வந்திருக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் நாணயத்தின் அடுத்த பக்கத்தில் போயஸ் தோட்டத்துத் தலைவி எதையாவது கொடுப்பார் என்று தெரியும் என்றாலும் அது என்ன என்று தெரிந்துகொள்வதுதான் இந்திய அரசியலில் எஞ்சியுள்ள ஒரே சுவாரசியம்.
No comments:
Post a Comment