மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும்:ஜெயலலிதாவின் புதிய அணுகுமுறை; சுறுசுறுப்புடன் பணியாற்ற அமைச்சர்களுக்கு உத்தரவு
திரைப்படம்
தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஜெயலலிதா 3-வது முறையாக பதவி ஏற்றுள்ளார். இந்த முறை அவரது அணுகுமுறையில் பெரிய மாற்றங்கள் காணப்படுகின்றன.13-ந்தேதி தேர்தல் முடிவு வந்ததும் பத்திரிகையாளர்களை சந்திக்கையில் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட முக்கியத்துவம் அளிக்கப்படும். தமிழக மக்கள் அவதிப் பட்டு வரும் மின் வெட்டு பிரச்சினையை தீர்ப்பேன்.மக்கள் நலப்பணிகளுக்கு முன்னுரிமை அளிப்பேன் என்றார்.
இதைப்பார்த்து பொது மக்களும் பத்திரிகையாளர்களும் வியந்தனர். தமிழ்நாட்டுக்கு பக்குவம் வாய்ந்த அனுபவ முதிர்ச்சி பெற்ற தலைவர் கிடைத்து விட்டார் என்று தமிழக மக்கள் சந்தோஷப்பட்டனர்.சட்டம்- ஒழுங்கை நிலை நாட்டுவேன் என்று அவர் சொன்னது மக்களுக்கு நிம்மதி அடையச் செய்துள்ளது. குறிப்பாக சென்னை மக்கள் மிகவும் வரவேற்றுள்ளனர்.
மந்திரி சபை பதவி ஏற்பின் போது அமைச்சர்கள் யாரும் முதல்-அமைச்சர் காலில் விழவில்லை. இது அ.தி.மு.க. வினருக்கும், பார்வையாளர்களுக்கும் ஆச்சரியம் அளிப்பதாக இருந்தது.கட்சி தலைவர்களையும், மூத்த தலைவர்களையும் அரவணைத்து சென்று ஜெயலலிதா புதிய கலாச்சாரத்துக்கு வித்திட்டு இருப்பதாக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பதவி ஏற்பு விழாவுக்கு முன் ஜெயலலிதா தலைவர்களது சிலைகளுக்கு மாலை அணிவிக்க செல்லும் போது தனக்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருப்பதை அறிந்தார். உடனே போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளை அழைத்து தனக்காக போக்குவரத்து நிறுத்தப்படக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தார்.
ஜெயலலிதா “இசட்” பிரிவு பாதுகாப்பில் உள்ளார். அவருக்காக போக்குவரத்து நிறுத்தப்படலாம். ஆனால் தனக்காக போக்குவரத்தை நிறுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது அவரது புதிய அணுகு முறையையே காட்டுகிறது. போலீசார் ஒருவருக்கொருவர் இதைச் சொல்லி ஆச்சரியப்பட்டனர்.போலீஸ் அதிகாரிகளும் அரசியல் தலையீடு இல்லாமல் நேர்மையுடன் கடமையாற்றலாம் என்று பேசிக் கொண்டனர்.
மக்களுக்கு பயனுள்ள நல்ல திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதில் ஜெயலலிதா அதிக அக்கறையுடன் உள்ளார். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற தனி இலாகாவையே உருவாக்கி அதற்கு அமைச்சரையும் நியமித்துள்ளார்.இது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத ஒன்றாகும். இதன் மூலம் ஜெயலலிதா தமிழகத்தை பெரிய முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்ல தொடங்கி விட்டதாக அதிகாரிகள் மத்தியில் பேசப்படுகிறது.
கோட்டையில் அமர்ந்து முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதும் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு 4 கிராம் தங்கத்தாலி, அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு சலுகையை 6 மாதமாக உயர்த்துவது உள்ளிட்ட 7 திட்டங்களை நிறைவேற்றுவதற்கான கோப்புகளில் முதலாவதாக கையெழுத்திட்டார்.
தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டங்களை 1 1/2 வருடத்தில் நிறைவேற்றுவேன் என்று கூறியிருந்தார். அதற்கான பணிகளில் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் முடுக்கி விட்டுள்ளார். முதல்-அமைச்சரின் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் திறமை சாலிகளாகவும், பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தவர்களாகவும் விளங்கியவர்கள்.
இதனால் தமிழக அரசு முழு வீச்சில் இயங்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.முதல்-அமைச்சர் பதவி ஏற்ற மறுநாளே அரசு உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். அவர்களுக்கு அதிரடியான பல உத்தரவுகளை பிறப்பித்தார். அடுத்து பிற்பகலில் கோட்டையில் அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டி 3 மணி நேரம் அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் 33 அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் துறைகளைப் பற்றியும், அதன் செயல்பாடுகளைப் பற்றியும் எப்படி தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்களிடமே ஜெயலலிதா கேட்டு அறிந்து கொண்டார்.
அனைத்து அமைச்சர்களும் சிறப்பாக பணியாற்றி மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும். அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார். ஒவ்வொரு மாதமும் துறைகளைப் பற்றி ஆய்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவது குறித்தும் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.
இதற்காக அமைச்சர்களிடம் தேர்தல் அறிக்கையின் நகல்கள் வழங்கப்பட்டு ஒவ்வொரு திட்டங்களாக விவாதிக்கப்பட்டது. அமைச்சர்கள் அனைவரும் அடிக்கடி கிராமப் பகுதிகளுக்கு சென்று அவர்களது குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து அவர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.
மக்களுக்கு தேவையான புதிய திட்டங்களை செயல் படுத்த வேண்டும் என்றார். ஒவ்வொரு துறைகளில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வரவேண்டும், புதிய விஷயங்களை எப்படி புகுத்தலாம் என்பது குறித்தும் அமைச்சர்களிடம் யோசனைகளை கேட்டறிந்தார்.
தமிழகத்தில் நவீன அறிவியல் புரட்சி, வேளாண்மை, தொழில் வளம், கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றை பெருக்கவும் ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களை நிறைவேற்றவும் இலக்கு வைத்துள்ளார். ஜெயலலிதாவின் எண்ணத்துக்கு ஏற்ப அமைச்சர்களும் சுறுசுறுப்பாக பணியில் இறங்கி விட்டனர்.
இன்று 2-வது நாளாக தங்களது துறை சார்ந்த பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். பதவி ஏற்ற 3 நாளிலேயே ஜெயலலிதா புதிய அணுகு முறையுடன் களம் இறங்கி இருப்பதால் தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தலை நிமிர்ந்து நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
No comments:
Post a Comment