Monday, May 30, 2011

தி.மு.க.,வுக்கு மாற்றாக ஏற்பாடுகள்: எதற்கும் எப்போதும் காங்., தயாராகிறது

தன்னை கைவிட்டு விட்ட கோபத்திலும், ஆற்றாமையிலும் தி.மு.க., இருக்கும் சூழ்நிலையில், அந்த கட்சியை சமாதானப்படுத்தும் பணியை ஓரளவுக்கு மேல் தொடர காங்கிரஸ் விரும்பவில்லை. காரணம், எந்த சூழ்நிலையிலும் தி.மு.க., தங்களை விட்டுப் போய் விடாது என, தீவிரமாக நம்பிக் கொண்டிருந்தாலும் கூட, ஒருவேளை உறவை முறித்து கொண்டால், அதை எப்படி சமாளிப்பது என்பதற்கான நடவடிக்கைகளில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், தாங்கள் முற்றிலும் வஞ்சிக்கப்பட்டதாக தி.மு.க., கருதுகிறது.

 

குறிப்பாக தன் குடும்பத்தினரையாவது காப்பாற்றுவர் என பெரிதும் எதிர்பார்த்திருந்த கருணாநிதி, தன் மகள் கனிமொழி கைது செய்யப்பட்டவுடன், காங்கிரஸ் மீது பெரிதும் நம்பிக்கை இழந்து விட்டார். இந்த ஊழல் விவகாரத்தில், ஏதாவது ஒருவிதத்தில், மறைமுக உதவிகளையாவது, ஆட்சி பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் செய்து, தங்களுக்கு நேரும் பாதிப்பின் அளவையாவது குறைக்கும் என, கடைசி வரை தி.மு.க., நம்பிக் கொண்டிருந்தது. சுப்ரீம் கோர்ட்டை காரணம் காட்டி, கடைசியில் தங்களை கைவிட்டுவிட்டதால், காங்கிரஸ் மீது தி.மு.க., கடும் கோபத்தில் உள்ளது. இந்த கோபத்தை வெளிப்படையாக காட்ட முடியாத சூழ்நிலையும் தி.மு.க.,வுக்கு உள்ளது. சட்டசபை தேர்தலில் எதிர்பாராத அளவுக்கு தோல்வியடைந்ததை இன்னமும் ஜீரணிக்க முடியாத நிலையில், அந்த கட்சி உள்ளது.

அதேசமயம் தி.மு.க., தோற்க போகிறது என பலவாறு உளவுத் தகவல்கள் வந்து கொண்டே இருந்தாலும் கூட, தோற்கும் குதிரை மீதே பணம் கட்டலாம் என்ற அளவுக்கு காங்கிரஸ் முனைந்ததற்கும் காரணங்கள் இருந்தன.தி.மு.க., தோற்றால் முன்பை விட தீவிரமாக தங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கும் என காங்கிரஸ் நம்பியது. அதேபோல எவ்வளவு இடர்பாடுகள் இருந்தாலுமே கூட, நம்பிக்கையான கூட்டணி கட்சியாக திகழ்கிறோம் என மக்கள் மத்தியிலும், தி.மு.க.,வினர் மத்தியிலும் ஒரு கருத்தை ஏற்படுத்தலாம் என்றும் காங்கிரஸ் நம்பியது. அந்த நம்பிக்கைகள் எதுவுமே வீண் போகவில்லை. தேர்தல் தோல்விக்கு பிறகு தி.மு.க.,வின் நிலைமை படுதிண்டாட்டமாக உள்ளது. காங்கிரசின் தயவின்றி அணுவளவும் அசைய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை, காங்கிரஸ் உள்ளுக்குள் ரசிக்கவே செய்கிறது. இதைத்தான் எதிர்பார்த்தோம் என்ற ரீதியில் அந்த கட்சி உள்ளது. மிகவும் வருத்தமுடன் தன் மகளை பார்க்க வந்த கருணாநிதியை சந்தித்த குலாம்நபி ஆசாத் போன்றவர்கள், சோனியாவை சந்திக்க வாருங்கள் என்று கூட அழைத்து பார்த்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் தி.மு.க.,வை ஒரு அளவுக்கு மேல் ஆட்டிப்படைக்க முடியாது என்ற நிலை வந்தால், அப்போது என்ன செய்வது என்ற கேள்விக்கு, பல வகைகளிலும் முன்னேற்பாடுகளை செய்திட காங்கிரஸ் தீவிரமாக முயன்று வருகிறது. மத்தியில் தி.மு.க.,வின் 18க்கு மாற்று என்ன என்பதில், காங்கிரஸ் மிகுந்த தெளிவாகவே இருக்க விரும்புகிறது. பார்லிமென்டின் மொத்தம் 545 இடங்களில், பெரும்பான்மைக்கு 273 இடங்கள் தேவை. காங்கிரசிடம் 208 தான் உள்ளது. மம்தா மட்டுமே இப்போது கூட்டணியில் பிரச்னை இல்லாதவராக உள்ளார். தி.மு.க.,வும், தேசியவாத காங்கிரசும் காங்கிரசுக்கு நம்பிக்கையற்ற தோழர்களாகவே ஆகிவிட்டனர்.

கனிமொழி கைதானது தி.மு.க.,வை கோபத்தில் உள்ளாக்கியது என்றால், மகாராஷ்டிராவில் சரத் பவாருடனும் சுமுகமான சூழல் காங்கிரசுக்கு இல்லை. சந்திரபாபு நாயுடுவும், சரத் பவாரும் சமீபத்தில் சந்தித்து பேசியதை, காங்கிரஸ் சாதாரணமாக எடுத்துக் கொள்ள தயார் இல்லை. இச்சூழ்நிலையில், சமாஜ்வாடி கட்சியின் 22 இடங்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் 21 இடங்களை, காங்கிரஸ் எப்போதுமே ரிசர்வ் செய்து வைத்துள்ளது. இதை பயன்படுத்துவதா, வேண்டாமா என்ற குழப்பமும் காங்கிரசுக்கு உள்ளது. காரணம் உ.பி., மாநில அரசியல் தான் ராகுலின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என அந்த கட்சி நம்புகிறது.

ராகுல் தலைமையேற்று நடத்திய பல தேர்தல்களும் தோல்வியில் முடிந்துவிட்டதையடுத்து, அவரது கடைசி நம்பிக்கை உ.பி., மட்டுமே. அங்கு அடுத்தாண்டு நடக்கும் சட்டசபைத் தேர்தல் ராகுலின் எதிர்காலத்தை நிர்ணயிக்க போகிறது. பிரதமர் பதவியில் இருந்து மன்மோகன் சிங்கை அகற்றிவிட்டு, ராகுலை அமர்த்த வேண்டுமென்று காங்கிரசுக்குள் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். ராகுலின் அரசியல் எதிர்காலத்தை பாழாக்கும் விதத்தில் அவசரப்பட்டு முலாயம், மாயாவதியின் ஆதரவை பெற அந்த கட்சி ஒரு தடவைக்கு பல தடவை யோசிக்கவே செய்யும். ஆனால், நிலைமைகளுக்கு ஏற்றவாறு இந்த ஆதரவை காங்கிரஸ் பயன்படுத்தும். இது தவிர ஜெயலலிதா முன்வந்து அளித்த ஆதரவு கணக்கான அ.தி.மு.க., தேவகவுடா, அஜித்சிங் கூட்டணி எம்.பி.,க்கள் 17 பேர் வரை உள்ளனர். அ.தி.மு.க.,வின் ஆதரவையும் தங்கள் பக்கம் திருப்புவதற்கு காங்கிரஸ் பல முன்முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

தேர்தல் முடிந்தவுடன் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும் விழா நடந்த போது, உண்மையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களையும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே திட்டமிடப்பட்டிருந்தது. டில்லி மேலிடத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த தகவல் எம்.எல்.ஏ.,க்களுக்கும் சென்றடைந்து விட்டது. ஆனால், நரேந்திர மோடி வருகிறார் என்ற தகவல் கிடைத்ததும் மேலிடம் தடுத்து விட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியாவே ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...