Sunday, May 29, 2011

தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா!

தமிழகத் தேர்தல் முடிவு இன்ப அதிர்ச்சியை அளித்திருக்கிறது. அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறப்போகிறது என்று நாம் முன்பே எதிர்பார்த்தோம் என்றாலும் இந்த அளவுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை மக்கள் அதிமுகவுக்கு அளிப்பார்கள் என்பதை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. எதிர்க்கட்சி அந்தஸ்துக்குக்கூட அருகதை இல்லாத அளவுக்கு திமுக தோல்வியைத் தழுவி இருக்கிறது என்றால் எந்த அளவுக்கு மக்கள் திமுக ஆட்சியின்மீது வெறுப்படைந்திருந்தனர் என்பது தெளிவாகிறது.
 
இதை ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக கூட்டணியின் அமோக வெற்றி என்று கூறுவதைவிட, திமுக தலைமையிலான கூட்டணிக்கு எதிராக எழுந்த மக்களின் மௌனப் புரட்சி என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். தமிழகம் முழுவதும் திமுகவுக்கு எதிராக ஒரே மாதிரியான மனோபாவம் காணப்பட்டிருப்பது புதியதொன்றும் அல்ல. தமிழக மக்கள் கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலைத் தவிர, ஏனைய தேர்தல்களில் எல்லாம் ஏதாவது ஒரு கட்சிக்குப் பேராதரவு அளித்துத் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாக்களித்து வந்திருக்கிறார்கள் என்பதுதான் சரித்திர உண்மை.
 
1967-லும், 1977-லும், 1996-லும் காணப்பட்ட எழுச்சியை இந்தத் தேர்தலிலும் காண முடிகிறது. பெருந்திரளாக மக்கள் வாக்குச்சாவடியை நோக்கிப் படையெடுத்ததை, ஆளும் கட்சியினர் தங்களது பணப் பட்டுவாடாவின் விளைவு என்று தப்புக்கணக்குப் போட்டனர் என்றால், பல தேசியத் தொலைக்காட்சி சேனல்களின் கருத்துக் கணிப்புகளும்கூட அல்லவா, எதார்த்த நிலைமையைப் புரிந்துகொள்ளாமல் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்புக்குக் கட்டியம் கூறின? குழப்பம் ஆட்சியாளர்களிடமும், ஊடகங்களிடமும் இருந்ததே தவிர, மக்களிடம் இருக்கவில்லை.
 
 மின் வெட்டு, விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற பிரச்னைகள் திமுக ஆட்சியினர்மீது மக்களுக்குப் பரவலான அதிருப்தி ஏற்படுவதற்குக் காரணிகள் என்றாலும், திமுகவைத் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓட ஓட விரட்டியது என்னவோ "குடும்ப ஆட்சி' என்கிற அருவருப்பான விஷயம்தான். ஜெயலலிதா தலைமையில் அமைய இருக்கும் அதிமுக ஆட்சியில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் இல்லாவிட்டாலும் நிச்சயமாகத் தலையீடு தவிர்க்க முடியாதது என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். அது நன்றாகத் தெரிந்திருந்தும் வாக்களித்திருக்கிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்?
 
கருணாநிதியின் தலைமையிலான திமுக ஆட்சியில், அவரது மனைவி மட்டுமோ அல்லது அவரால் வாரிசு என்று அடையாளம் காட்டப்பட்ட துணை முதல்வர் மு.க. ஸ்டாலினின் குடும்பம் மட்டுமோ ஆதிக்கம் செலுத்தி இருந்தால்கூட மக்கள் இந்த அளவுக்குக் கோபமும் வெறுப்பும் அடைந்திருக்க மாட்டார்கள். கருணாநிதியின் குடும்பம் என்கிற பெயரில், மனைவி, துணைவி, மக்கள், பேரக் குழந்தைகள் என்று ஒரு டஜன் குடும்பங்களின் ஆதிக்கமல்லவா நடந்தது?
 
  அதைக்கூடப் பொறுத்துக் கொண்டிருப்பார்கள். மாவட்டத்துக்கு மாவட்டம், தொகுதிக்குத் தொகுதி, ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு என்று அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள், சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்கள், வட்டச் செயலர்கள் என்று பல நூறு குடும்பங்கள் செலுத்திய ஆதிக்கமும், அரங்கேற்றிய அட்டகாசங்களும் கொஞ்சமா நஞ்சமா? அத்தனை அடாவடிப் பேர்வழிகளுக்கும் வாக்குச் சீட்டின் மூலம் தக்க பாடம் புகட்டி இருக்கிறாôர்கள்.
 
தமிழனை நினைத்தால் பெருமிதமாக இருக்கிறது. தமிழன் இந்தியாவையும், மக்களாட்சியையும் காப்பாற்றி இருக்கிறான். அதற்காக அவனுக்குத் தலைவணங்க வேண்டும் போலிருக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில், நாங்கள் முறையாகப் பணம் விநியோகம் செய்திருப்பதால் வெற்றிபெற்று விடுவோம் என்றும், எங்களது இலவசத் திட்டங்கள் சென்றடையாத வீடுகளே இல்லை அதனால் வெற்றி பெற்று விடுவோம் என்றும் எத்தனை திமிராகத் திமுகவினர் பேசினார்கள்.
 
யோசித்துப் பாருங்கள். இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருந்தால், திருமங்கலம் ஃபார்முலா, இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் அந்தந்த ஆளும் கட்சியினராலோ, எதிர்க்கட்சியினராலோ, அரங்கேற்றப்பட்டிருக்காதா? மக்களின் நியாயமான உணர்வுகள் தேர்தலில் பிரதிபலிக்காமல் போனால், வாக்குகள் விலைக்கு வாங்கப்படும் அவலம் இந்தியா முழுவதும் அரங்கேறினால், அதன் தொடர்விளைவு அராஜகத்திலும், தீவிரவாதத்திலும் அல்லவா முடிந்திருக்கும்? இந்தியா தமிழனுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறதா, இல்லையா?
 
 முன்னாள் அமைச்சர் ஒருவரின் தொகுதியில் ஏறத்தாழ 10,000 வாக்காளர்களுக்கு, அதுவும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை வாக்காளர்களுக்கு, டோக்கன் வழங்கப்பட்டு மாவட்டத் தலைநகரிலுள்ள ஷோரூமிலிருந்து டிவிஎஸ் 50 இலவசமாக எடுத்துச் செல்லும்படி பணித்தார்கள். எட்டே எட்டுபேர் மட்டும்தான், டிவிஎஸ் 50 எடுத்துச் சென்றார்கள். ஏனையோர் அந்த டோக்கனைக் கிழித்துப் போட்டுவிட்டு வாக்களித்திருக்கிறார்கள். பல இடங்களில் நரிக்குறவர்களின் காலனியில் பண விநியோகம் செய்தவர்களை விரட்டி அடித்திருக்கிறார்கள்.
 
 பட்டணத்தில் படித்தவர்கள் காரில் வந்து இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை வெட்கமில்லாமல் கேட்டுச் செல்லும்போது, பல கிராமத்து ஏழைத் தமிழர்கள் தங்களை விலைபேச வந்தவர்களை விரட்டி அடித்திருப்பதைப் பற்றிக் கேள்விப்படும்போது மேனி சிலிர்க்கிறது. இனிமேல், அரசியல்வாதிகள் பணம் கொடுத்து வாக்குகளைப் பெற முயற்சிக்க மாட்டார்கள். பண விநியோகத்தால் மட்டுமே வெற்றி உறுதி செய்யப்படாது என்பதால், தங்கள் கைப்பணத்தை விரயமாக்கத் தயாராக மாட்டார்கள்.
 
   பணத்துக்கு ஆசைப்பட்டும், இலவசங்களில் மயங்கியும் தனது வாக்குகளை விலைபேசத் தயாராக இல்லை என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்த்தி விட்டிருக்கிறான் தன்மானத் தமிழன். ஆட்சியாளர்கள் என்னதான் இலவசங்களை அள்ளிக் கொடுத்தாலும், அடிப்படை நிர்வாகம் இல்லாமல் போனால், மின் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற மக்கள் பிரச்னைகளைத் தீர்க்காமல் போனால், வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தாவிட்டால், அந்த ஆட்சியைத் தூக்கி எறியத் தயங்க மாட்டோம் என்பதை அழுத்தம்திருத்தமாகத் தெளிவாக்கி இருக்கிறார்கள் தமிழக வாக்காளப் பெருமக்கள். என்னவொரு அரசியல் முதிர்ச்சி, பெருமிதமாக இருக்கிறது!
 
ஈரோட்டில் முத்துசாமி, முதுகுளத்தூரில் சத்தியமூர்த்தி, கிணத்துக் கடவில் மு. கண்ணப்பன், ஆர்.கே. நகரில் சேகர்பாபு என்று கடைசி நேரத்தில் கட்சி மாறிய அத்தனை சந்தர்ப்பவாதிகளும் தோல்வியைத் தழுவி இருக்கிறார்கள். ஜாதிக் கட்சிகளான பாமக, விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் என்று சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்தவை மண்ணைக் கவ்வி இருக்கின்றன. காங்கிரûஸப் பற்றி சொல்லவே வேண்டாம். வாக்காளர்களிடம்தான் என்னவொரு தெளிவு...
 
 கடந்த மக்களவைத் தேர்தலில், சிவகங்கை தொகுதியில் ஒரு மிகப்பெரிய மோசடி நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. பூத் வாரியான வாக்குகளைப் பதிவு செய்து காட்டுகின்ற படிவம் 20-ல் அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனுக்குக் கிடைத்த வாக்குகளைக் காங்கிரஸ் வேட்பாளரான மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்துக்கும், அவரது வாக்குகளை ராஜகண்ணப்பனுக்கும் மாற்றி எழுதி, காங்கிரஸ் வேட்பாளர் ப. சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என்கிற குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறார் முதல்வராகப் பதவி ஏற்க இருக்கும் ஜெயலலிதா. யார் கண்டது, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக அணியின் முழு வெற்றியே இப்படி ஒரு தில்லுமுல்லால் பெறப்பட்டதுதானோ என்னவோ? சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அப்படி ஓர் ஐயத்தை எழுப்புகிறதே...
 
தேர்தல் முடிவுகள் திமுகவுக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் தரப்பட்டிருக்கும் தண்டனை என்றால், திறமையான அதேநேரத்தில் நேர்மையான நிர்வாகம், மக்களின் உணர்வுகளையும், பிரச்னைகளையும் பிரதிபலிக்கும் ஆட்சி, கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய குடும்ப ஆதிக்கமும், தலையீடும் இவையெல்லாம் இல்லாமல், கேவலம், பணத்தையும், இலவசங்களையும் காட்டி இனிமேலும் யாரும் எங்களை ஏமாற்ற முடியாது என்பது அதிமுகவுக்கும், மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க இருக்கும் செல்வி. ஜெயலலிதாவுக்கும் அவர்கள் உணர்த்தும் பாடம்.
 
 "தமிழனென்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா!'' என்கிற நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களை  பெருமிதத்துடன் தலைவணங்கிப் பாராட்டுகிறது!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...