Monday, May 23, 2011

அனைத்தும் அரசியல், அவ்வளவுதான்!


அனைத்தும் அரசியல், அவ்வளவுதான்!



செல்வி ஜெயலலிதா தலைமையிலான புதிய தமிழக அரசு, புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலக கட்டடத்தில்  சட்ட மன்றத்தையோ, தலைமை செயலகத்தையோ வைத்திருக்கப் போவதில்லை என்ற செய்தி
வெளியாகியிருக்கிறது.


இந்த நடவடிக்கைக்கு சிலர் பலத்த எதிர்ப்பினையும் தெரிவித்திருக்கிறார்கள். மேலோட்டமாகப் பார்க்கும் போது  மக்களுடைய வரிப்பணத்தை ஏராளமாகச் செலவு செய்து கட்டிய இடத்தை வேண்டாமென்று ஒதுக்குவது 
தவறாகத்தான் இருக்கும்.


சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை ஆங்கிலேயர்கள் கட்டியது என்பதற்காக சுதந்திரத்துக்குப் பிறகு அமைந்த  காங்கிரஸ் அரசு அந்த இடத்தை வேண்டாமென்று ஒதுக்கவில்லை. அதுபோலவே டெல்லியிலுள்ள பாராளுமன்ற  கட்டடம், கல்கத்தாவிலுள்ள ரைட்டர்ஸ் கட்டடம், சென்னை மாநகராட்சி மன்றம் இருக்கும் ரிப்பன் கட்டடம்  இவற்றையெல்லாம் அன்னியர் கட்டியது என்பதற்காக நாம் ஒதுக்கிவிடவில்லை. சுதந்திரத்துக்குப் பின்னரும்  அங்கெல்லாம் அரசாங்க அலுவலகங்கள் நடைபெறத்தான் செய்கின்றன.


ஆனால், சென்னையில் கட்டப்பட்டுள்ள புதிய தலைமைச் செயலகக் கட்டட விவகாரம் அவைகளிலிருந்து சற்று  மாறுபட்டது. எப்படி? தலைமைச் செயலகத்துக்குப் புதிதாகக் கட்டடம் கட்டப்படவேண்டுமென்கிற எண்ணம்
முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் போதே தோன்றியதுதான். அப்போது அவர்கள் ராணி மேரி கல்லூரி  இருக்குமிடத்தில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டலாம் என்று திட்டமிட்டார்கள். அப்போது அதற்கு பலத்த  எதிர்ப்பு ஏற்பட்டது. ராணி மேரி கல்லூரி பழைமை வாய்ந்தது; அதனை இடமாற்றம் செய்வதோ, அந்த கல்லூரி  கட்டடங்களை இடிப்பதோ கூடாது என்று போராட்டம் நடந்தது. அதற்கு மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து 
நடத்தினார். போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய பாரம்பரிய நினைவுச் சின்னங்களை அழிக்கக்கூடாது என்பதை  யாரும் மறுப்பதற்கில்லை என்றாலும், தி.மு.க.வினர் நடத்திய போராட்டம் அ.தி.மு.கவினரின் முயற்சிக்கு
முட்டுக்கட்டைப் போடுவதாகத்தான் அமைந்தது. வேறு இடம் பார்த்து முடிவு செய்வதற்கு முன்பாக அந்த ஆட்சி  முடிவுக்கு வந்தது. தி.மு.க. அரசு அமைந்ததும் புதிய இடம் தேடி இறுதியில் ஓமாந்தூரார் தோட்டத்தை முடிவு
செய்தார்கள்.


அதுவரை நடவடிக்கைகள் சரிதான். பிறகு அங்கு புதிய தலைமைச் செயலகத்துக்குக் கட்டடம் கட்டும் முயற்சியில்,  கட்டட வடிவமைப்பு முதல் அதன் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட்டு அவ்வப்போது ஆலோசனைகளை  வழங்கி, முதன் முதலாகப் புதிதாக வீடு கட்டும் ஒரு நடுத்தர வர்க்கத்து மனிதரைப் போல முதலமைச்சர் தனது  நேரடி கண்காணிப்பில் நடத்தி வந்தார். இப்படி முதல்வர் அங்கு தினமும் போய், கட்டட வளர்ச்சியைப் பார்த்து  ஆலோசனைகளை வழங்கியதை தினந்தோறும் ஒரு செய்தியாகவே வெளியிட்டு வந்தனர்.


ஒரு மாநிலத்தின் மிக முக்கியமானதொரு கட்டடப் பணியில் முதல்வர் ஆர்வம் காட்டியதில் ஒன்றும் தவறு  கிடையாது. கருணாநிதி கேட்டாரல்லவா, ராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்து 'ராமசேது'வைக் கட்டினான்  என்று. அதே கேள்வியை இப்போது இவரைப் பார்த்து கேட்க முடியுமே! இவர் எந்த கல்லூரியில் ஆர்கிடெக்ட்  எனும் கட்டட வடிவமைப்புக் கலையைப் பயின்றார். எந்த பொறியியல் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார்
என்று. ஒரு கட்டடம் கட்ட டெண்டர் விட்டு அதனைக் கட்ட ஒப்புக்கொண்ட ஒப்பந்ததாரரிடம் பொறுப்பை  ஒப்படைத்துவிட்டு, அவ்வப்போது அதன் வளர்ச்சி பற்றி கேட்டு தெரிந்து கொண்டிருக்கலாமே. இந்த  வேலைகளைச் செய்யத்தான் மேற்பார்வையிடவும், ஆலோசனைகளை வழங்கவும் பொறியியல் வல்லுனர்களும்,  கட்டடத்தைக் கட்டும் பொறுப்பில் ஒப்பந்தக்காரர்களும் இருக்கிறார்களே, இவர்களெல்லாம் இருக்கையில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் தினமும் அங்கு போய் மேற்பார்வையிடுவது என்பது சற்று பொறுத்தமில்லாமல்  இருக்கிறது.


ஆனால் அவர் நடந்து கொண்ட முறையிலும், இந்த கட்டட வளர்ச்சியில் காட்டிய அதீத ஆர்வமும், அது குறித்து  ஊடகங்களுக்குக் கொடுக்கப்பட்ட செய்திகளும், இது ஏதோ, அவரது ஆயுட்கால சாதனை போலவும், அவர்
எண்ணத்தில் உதித்து உருவாக்கிய "அறிவாலயம்" போலவும் ஒரு பிரமையை ஏற்படுத்தினார்கள்.


இதெல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு ஆர்வத்திற்கு பதில் வெறுப்பையே வளர்த்தது என்று  சொல்லலாம். தன்னுடைய காலத்தில் கட்டியது, தான் முன்னிருந்து கட்டியது, தான் அந்த கட்டடத்தில் சட்டசபையை நடத்தி  முதல்வராக இருந்து சாதனை புரிந்தது என்று உலகம் உணரவேண்டுமென்கிற தணியாத தாகம்தான் அவரது  ஆர்வத்தில் தென்பட்டது. அதுமட்டுமல்ல, அந்த கட்டடம் விரைவில் முடிக்கப்பட்டு இந்த சட்டசபையின்  ஆயுட்காலத்துக்குள் அங்கு சபையை நடத்தி விடவேண்டும், அங்கு தனது பெயர் பளிங்குக் கல்லில்  பொறிக்கப்பட வேண்டும் என்பதில்தான் இவர்களது ஆசை இருந்தது.


அந்த அவசரத்தின் காரணமாக அரைகுறையாக முடிந்திருந்த கட்டடத்தில் முக்கியமான கூரைப் பகுதி முடியாத  நிலையில் அங்கு திரைப்பட செட்டினை அமைத்து அவசர அவசரமாக டெல்லி தலைவர்களை அழைத்து திறப்பு
விழா நடத்திடத் துடித்தனர். இந்த அவசரக் கோலத்தின் காரணமாகத்தான் மக்கள் மனங்களில் இந்த கட்டடத்தின்  உறுதித்தன்மை குறித்த சந்தேகங்கள் ஏற்பட்டுவிட்டன.


இத்தனை காலம் சட்டமன்றமும் தலைமைச் செயலகமும் நடந்த புனித ஜார்ஜ் கோட்டையில் இனியும் தொடர்ந்து  நடப்பதில் தவறு ஒன்றுமில்லை. புதிய கட்டடத்தை உபயோகிக்காமலா விட்டுவிடுவார்கள். அங்கு அதிகம் மக்கட்
புழக்கம் இல்லாத அலுவலகங்கள் அல்லது வேறு காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்கள்.


இதற்கு ஏன் இத்தனை எதிர்ப்புகள்? கி.வீரமணியும், மருத்துவர் இராமதாசும் எதிர்க்கிறார்கள் என்றால் புரிகிறது.


ஆனால் வைகோவுக்கு என்னவாயிற்று? அவருக்குத் தெரியாதா இந்த உண்மைகள் எல்லாம்? அனைத்தும் அரசியல். அவ்வளவுதான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...