Monday, May 23, 2011

கனிமொழியும் கைது-இனியும் காங். கூட்டணியில் திமுகவால் நீடிக்க முடியுமா?

முன்னாள் அமைச்சர் ராசாவைத் தொடர்ந்து, கனிமொழியும் தற்போது கைதாகியுள்ளதால், இனியும் காங்கிரஸுடனான கூட்டணியில் திமுகவால் நீடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு மேலும் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்க முடியாது என்ற நெருக்கடியான நிலையும் ஏற்பட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை கிட்டத்தட்ட திமுகவுக்கு எதிரான பிரம்மாஸ்திரமாகவே பயன்படுத்திக் கொண்டது காங்கிரஸ். இது அரசியல் தெரிந்த அனைவருக்கும் நன்றாகப் புரிய கூடியதாகும்.

ஆரம்பத்தில் இந்த விவகாரத்திலிருந்து திமுகவைக் காக்க காங்கிரஸ் முயன்றது போல காட்டிக் கொண்டது அக்கட்சி. ஆனால் உண்மையில், பிரச்சினையை வலுவாக்கி, திமுகவை நிரந்தரமாக சிக்கலில் ஆழ்த்தும் காங்கிரஸின் முயற்சி அது என்பது காங்கிரஸின் போக்கை உற்றுப் பார்த்தவர்களுக்குப் புரிந்திருக்கும்.

முதலில் ராசா பதவியிழந்தார். பின்னர் கைதும் செய்யப்பட்டார். இப்போது கனிமொழியும் கைது செய்யப்பட்டுவிட்டார்.

இதனால் திமுக வட்டாரமும், முதல்வர் கருணாநிதியின் குடும்பமும், குறிப்பாக கருணாநிதியின் துணைவி ராசாத்தி அம்மாளும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ராசா, கனிமொழி என இரு முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு விட்ட நிலையில் அடுத்து தயாளு அம்மாளையும் இந்த வழக்கில் இணைக்க தீவிர முயற்சிகள் நடைபெறும் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பும் நிலவுகிறது. எனவே இனியும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் திமுக நீடிக்குமா, நீடிக்க முடியுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸின் மனம் கோணாமல்தான் நடந்து வந்தார் கருணாநிதி. முள் மீது விழுந்து விட்ட சேலையை பத்திரமாக எடுப்பது மட்டுமே அவரது ஒரே கவனமாக இருந்து வந்தது.

காங்கிரஸ் கட்சி தேர்தலின்போது அதிக சீட்களைக் கேட்டபோதும் கூட பொறுத்துக் கொண்டு கொடுத்தார். காங்கிரஸை தூக்கி எறியலாம் என்று திமுக முன்னணித் தலைவர்கள் கூறியபோதும் கூட அவர் அமைதி, பொறுமை காத்தார். காரணம், கனிமொழி. சமீபத்தில் நடந்த திமுக உயர் மட்ட செயல் திட்டக் குழுக் கூட்டத்தின் போதும் கூட காங்கிரஸுக்கு எதிராக எந்த தீர்மானத்தையும், எச்சரிக்கையையும் திமுக நிறைவேற்றவில்லை.

மாறாக மென்மையான அணுகுமுறையையே திமுக கடைப்பிடித்தது. கனிமொழியை பத்திரமாக மீட்க வேண்டும் என்ற காரணத்தால் இந்த அமைதியை கடைப்பிடித்தது திமுக.

ஆனால் தற்போது கனிமொழி சிறைக்குப் போகும் நிலையில் கருணாநிதி பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். திமுகவும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இதற்கு மேலும் திமுக கூட்டணியில் நீடிக்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால், கூட்டணியை விட்டு வெளியேறினால், அந்த இடத்தை அதிமுக நிரப்புவதோடு, தங்கள் மீதான மத்திய அரசின் நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என்ற அச்சமும் திமுகவிடம் உள்ளது.

ஆனால் இதற்கு மேலும் இந்தக் கூட்டணிக்கு அர்த்தம் இருக்காது என்ற நிலையில், கருணாநிதி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகியுள்ளது.

கனிமொழியை பாதுகாப்பதா அல்லது திமுகவின் எதிர்காலத்தை காப்பாற்றுவதா என்ற நிலைமையில் உள்ளார் கருணாநிதி.


கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்?

ராசா கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தபோது பெரிய அளவில் ரியாக்ஷன் கொடுக்காமல், கனிமொழி கைதுக்காக மட்டும் பெரும் அமளி துமளியில் இறங்கினால் கட்சியின் பெயர் மேலும் கெட்டு விடும் என்பதாலும், காங்கிரஸ் மேலும் அதிருப்தியாகி, கனிமொழியை அதிக நாட்கள் சிறையில் வைக்க நேரிட்டு விடும் என்பதாலும்தான் திமுக அமைதி காப்பதாக கூறப்படுகிறது.

திமுக எம்.பி. கனிமொழியை 2 ஜி ஸ்பெக்ரம் வழக்கில் சிஐ கைது செய்த சம்பவம் குறித்து திமுக மவுனம் சாதித்து வருகின்றது. திமுக தலைவர் கருணாநிதியிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்டபோது பட்டும் படாமலும்தான் பதிலளித்தார்.

2ஜி வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த 2வது குற்றப்பத்திரிகையில் கூட்டு சதியாளர் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த தி.மு.க. எம்.பி -யும், திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி ‌நேற்று டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனால் தமிழகம் முழுக்க திமுகவினர் சாலை மறியல், போரட்டம், ஆர்பாட்டம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ராசா கைது செய்யப்பட்டபோது கூட பெரம்பலூரில் திமுகவினர் சிலர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

ஆனால், தமிழகத்தில் தற்போது, அதிமுக ஆட்சி நடைபெறுவதால் , போராட்டத்தில் ஈடுபட்டால், போலீசார் கைது செய்து சிறையில் வைத்து விடுவார்கல் என்ற காரணத்தால் திமுகவினர் அமைதி காப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ராசா கைதின்போது திமுக தரப்பில் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இப்போது கனிமொழிக்காக பெரும் பிரச்சினையைக் கிளப்பினால் அது கட்சிக்கு மேலும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதால் திமுக தரப்பு அமைதி காப்பதாகவும் தெரிகிறது.

அதேசமயம், காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறிப்பதாக இப்போது அறிவித்து விட்டால் அது கனிமொழிக்கு மேலும் பாதகமாகி விடும் என்பதாலும் திமுக தரப்பு அமைதி காப்பதாக கூறப்படுகிறது.

அதேசமயம், இப்போது திமுகவிடம் ஆட்சிப் பொறுப்பு இருந்திருந்தால் பெரும் பிரச்சினையாக்கி, காங்கிரஸுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்திருப்போம் என்றும் திமுகவினர் தரப்பில் பேசப்படுகிறது.

ஆனால் தற்போது ஆட்சி மாறி, காட்சியும் மாறி விட்டது. காங்கிரஸும் இப்போது திமுக மீது பாசமாக இருப்பதாக தெரியவில்லை. இந்த நிலையில் எதுவும் செய்ய முடியாத நிலையில் தாங்கள் இருப்பதாக திமுகவினர் சோகத்துடன் கூறுகின்றனர்.

அதேசமயம், காங்கிரஸ் கட்சியை ஆரம்பத்திலிருந்தே தட்டி வைத்திருந்தால் இந்த நிலையே வந்திருக்காது என்றும் தீவிர திமுக அனுதாபிகள் கவலையுடன் கூறுகின்றனர். காங்கிரஸ் கட்சியினரால்தான் தங்களுக்கு இந்த இக்கட்டான நிலை ஏற்பட்டது. திமுகவை வசமாக மாட்ட வைத்து அதில் அவர்கள் குளிர் காய்கிறார்கள் என்பது இவர்களின் கருத்தாகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...