Monday, June 6, 2011

2ஜி ஊழல்: சிவசங்கரன் வாக்குமூலத்தை ம.பு.க. பதிவு செய்தது


ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் ஆட்சியின் போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக, அப்போது ஏர்செல் நிறுவனத்தின் தலைவராக இருந்த சி.சிவசங்கரனிடம் மத்திய புலனாய்வுக் கழகம் வாக்குமூலத்தை பெற்று பதிவு செய்துள்ளது.

டெல்லியில் குறிப்பிடப்படாத ஒரு இடத்திற்கு வரவழைக்கப்பட்ட சிவசங்கரனிடம், ஏர்செல் தலைவராக இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக அப்போது மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறனுடன் நடந்த கடிதத் தொடர்பு குறித்து வினாக்களை எழுப்பினர். அதற்கு சிவசங்கரன் அளித்த பதிலை பதிவு செய்தனர்.

இந்த விசாரணையின்போது, தனது ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மாக்சிஸ் நிறுவனத்திற்கு விற்குமாறு அப்போது தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தனக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், அது வரை 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெற தனது நிறுவனம் அனுப்பிய விண்ணப்பங்களை தயாநிதி மாறன் நிராகரித்ததாகவும் கூறியுள்ளார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாக பிடிஐ செய்தி கூறுகிறது.

3 பில்லியன் டாலர் மதிப்புடைய சிவா குழுமத்தின் தலைவரான சி்வசங்கரன், ஏர்செல் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தார். 2006ஆம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு கோரி மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகத்திற்கு விண்ணப்பம் செய்தார்.

ஆனால் அவரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. பிறகு அமைச்சர் தயாநிதி மாறன் கொடுத்த அழுத்ததிற்கு உட்பட்டு மலேசியாவின் மாக்சிஸ் நிறுவனத்திற்கு 74 விழுக்காடு பங்குகளை விற்றார். அத்தோடு ஏர்செல் நிறுவனம் கைமாறியது. அதன் பிறகு நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தொலைத் தொடர்பு வட்டங்களுக்கும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஏர்செல் நிறுவனம் பெற்றது.

இதற்குக் கைமாறாக, தயாநிதி மாறனின் சகோதரரான கலாநிதி மாறன் நடத்தும் சன் டைரக்ட் எனும் நேரடி தொலைக்காட்சி வசதி தரும் நிறுவனத்தில் மாக்சிஸ் நிறுவனம் 599 கோடி முதலீடு செய்தது.

2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தை புலனாய்வு செய்துவரும் ம.பு.க. இப்போது அந்த ஊழல் எங்கேயிருந்து தொடங்கியது என்று விசாரிக்க ஆரம்பித்துள்ளது. எனவே தயாநிதி மாறன் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது நடந்த முறைகேட்டை விசாரித்து வருகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...