ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்த பல்வேறு கட்சி எம்.பி.க்கள் அடங்கிய பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு, கடந்த 1998-ம் ஆண்டில் இருந்து 2008-ம் ஆண்டுவரை நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. முன்பு, ஏர்செல் முன்னாள் அதிபர் சிவசங்கரன் நேற்று முன்தினம் வாக்குமூலம் அளித்தார்.
அப்போது, கடந்த 2006- ம் ஆண்டு தனது ஏர்செல்லுக்கு அப்போதைய தொலைத்தொடர் புத்துறை மந்திரி தயாநிதி மாறன், லைசென்சு வழங்காமல் இழுத்தடித்ததாகவும், மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு ஏர்செல்லை விற்கும் நிலைக்கு நெருக்கடி கொடுத்ததாகவும் சிவசங்கரன் கூறினார்.
மேக்சிஸ் நிறுவனத்தின் கைக்கு மாறிய பிறகு, ஏர்செல்லுக்கு 14 லைசென்சுகள் வழங்கப்பட்டதாகவும், அதற்கு பிரதிபலனாக, சன் டைரக்ட் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் 16 கோடி டாலரை முதலீடு செய்ததாகவும் சிவசங்கரன் கூறினார்.
இதையடுத்து, தயாநிதி மாறனிடம் விசாரணை நடத்த பாராளுமன்ற கூட்டுக்குழு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக கூட்டுக்குழுவின் தலைவர் பி.சி.சாக்கோ நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற கூட்டுக்குழு 85 சாட்சிகள் கொண்ட பட்டியலை இறுதி செய்துள்ளது. விசாரணைக்கு ஆஜராகுமாறு அவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும். அவர்களில், கடந்த 1998-ம் ஆண்டில் இருந்து 2008-ம் ஆண்டுவரை மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரிகளாக இருந்த அருண் ஷோரி, தயாநிதி மாறன், ஆ.ராசா ஆகியோரும் அடங்குவர். ஜெயிலில் இருக்கும் ஆ.ராசாவுக்கு சம்மன் அனுப்ப கூட்டுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது.
அவரை அதிகாரிகள் ஆஜர்படுத்துவார்கள். தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (டிராய்) தலைவர் ஜே.எஸ்.சர்மா, அட்டர்னி ஜெனரல் வாகன்வதி, சி.பி.ஐ. டைரக்டர் ஏ.பி.சிங், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய முன்னாள் தலைவர்கள், பி.எஸ்.என்.எல். முன்னாள் தலைவர், தொலைத்தொடர்பு, நிதி, சட்டம், வருவாய் கார்ப்பரேட் விவகாரம் ஆகிய துறைகளின் முன்னாள், இந்நாள் செயலாளர்கள், கடந்த 2008-ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் பலனடைந்த 11 நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் சாட்சிகளாக விசாரிக்கப்படுவார்கள்.
பிரதமர் மன்மோகன்சிங்கையோ, முன்னாள் பிரதமர் வாஜ்பாயையோ விசாரணைக்கு அழைப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. வாஜ்பாய்க்கு சம்மன் அனுப்ப நாங்கள் முடிவு செய்ததாக வெளியான தகவல், துரதிருஷ்டவசமானது. பிரதமர் அலுவலக அதிகாரிகளை அழைக்குமாறு யாரும் கோரிக்கை விடுக்கவில்லை. ஏர்செல் நிறுவனத்துக்கு லைசென்சு வழங்க 2 வருடம் இழுத்தடித்தது பற்றி சி.பி.ஐ.யும் விசாரணை நடத்தி வருகிறது.
இவ்வாறு பி.சி.சாக்கோ கூறினார்.
இதற்கிடையே, பாராளுமன்ற கூட்டுக்குழு முன்பு சி.பி.ஐ. டைரக்டர் ஏ.பி.சிங் நேற்று ஆஜரானார். கடந்த 1998-ம் ஆண்டில் இருந்து 2008-ம் ஆண்டு வரையிலான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, அதன் விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் விளக்கம் அளித்தார். பா.ஜனதா ஆட்சி காலத்தில் அருண் ஷோரி மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரியாக இருந்த காலகட்டம் குறித்து ஏ.பி.சிங் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, பாராளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு எழுந்து, தொலைத்தொடர்புத்துறை மந்திரிகள் யாரையும் பெயர் சொல்லி குறிப்பிடாதீர்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தார். ஏர்செல் நிறுவனம் விற்கப்பட்டது பற்றிய விசாரணை நிலவரத்தையும் ஏ.பி.சிங் விளக்கினார். ஸ்பெக்ட்ரம் வழக்கில் 3-வது குற்றப்பத்திரிகை இம்மாதம் தாக்கல் செய்யப்படும் என்று அவர் கூறினார். அவரிடம் பாராளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினர்கள், பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
No comments:
Post a Comment