Tuesday, June 7, 2011

விரைவில் தயாநிதியிடம் மத்திய மந்திரி பதவி பறிப்பு?

2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, மத்திய அமைச்சர் தயாநிதியிடம் விசாரிக்க, பார்லிமென்ட் கூட்டுக் குழு முடிவு செய்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனுக்கு நெருக்கடி கொடுத்தது போன்ற குற்றச்சாட்டுகளையும் பிரதமரின் கவனத்திற்கு சி.பி.ஐ., கொண்டு சென்றதால், மத்திய அமைச்சர் தயாநிதி, தன் பதவியை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக, அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழு தெரிவித்தது. இதையடுத்து, ராஜா உட்பட, ஏழு பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். பின், இந்த விவகாரம் தொடர்பாக, ராஜ்யசபா எம்.பி., கனிமொழியும் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், இந்த விவகாரத்தை, சாக்கோ தலைமையிலான பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரித்து வருகிறது. நேற்று, இக்குழு முன் ஆஜரான சி.பி.ஐ., இயக்குனர் ஏ.பி.சிங், "2ஜி' அலைவரிசை ஒதுக்கீட்டில், 1998 முதல், 2009ம் ஆண்டு வரை நடந்த வழிமுறைகள், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, விலை மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட லைசென்ஸ் பற்றி எடுத்துரைத்தார்.அப்போது, தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரன், சி.பி.ஐ., முன் ஆஜராகி, மத்திய அமைச்சர் தயாநிதி மீது அளித்த புகார் பற்றி கேட்டபோது, "2 ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளை பாரபட்சமற்ற முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.அந்த அடிப்படையிலும், சுப்ரீம் கோர்டிற்கு தெரிவிக்கப்பட்ட தகவல்கள் குறித்தும் சி.பி.ஐ., இயக்குனர் விளக்கினார்.



தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை, தொழில் ரீதியாக நெருக்கடிக்கு உட்படுத்தியது உட்பட, மத்திய அமைச்சர் தயாநிதி மீது பல்வேறு புகார்கள் கூறப்படும் நிலையில், சி.பி.ஐ., இயக்குனர் அளித்த தகவல் முக்கியத்துவம் பெறுகிறது.பின், சி.பி.ஐ.,யின் உயரதிகாரியான பல்சானி, ஜே.பி.சி., முன் பேசும் போது, "சமீபத்தில், நாளிதழ்களில் வந்த செய்திகளை மேற்கோள்காட்டி அருண் ÷ஷாரி, தயாநிதியுடைய பங்கு பற்றி பேசத் துவங்கினார். இதனால் கோபமடைந்த தி.மு.க., முன்னாள் அமைச்சர் பாலு, "நீங்கள் விசாரணை நடத்துங்கள், அமைச்சர்களின் பெயரை ஏன் வீணாக வம்புக்கு இழுக்கிறீர்கள்; அவர்கள் மீது வழக்கு ஏதாவது நிலுவையில் இருக்கிறதா' என ஆவேசமடைந்தார்.



இந்நிலையில், 1998 முதல், 2009ம் ஆண்டு வரை, மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்களாக இருந்தவர்களிடம் விசாரிக்க பார்லிமென்ட் கூட்டுக் குழு முடிவு செய்துள்ளதை, தலைவர் சாக்கோ தெளிவுபடுத்தினார்.ஏற்கனவே மத்திய அமைச்சர்களாக இருந்த ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்கா ஆகியோர், ஜே.பி.சி., முன் ஆஜராகி விளக்கம் கூற முன்வந்துள்ளனர். குறிப்பாக, முன்னாள் மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் அருண்÷ஷாரி, ஏற்கனவே சி.பி.ஐ., முன் ஆஜராகி தன் நிலையை விளக்கினார்.அவர் அளித்த தகவலை அடுத்து, அவர் குற்றமற்றவர் என ஏற்கனவே சி.பி.ஐ., கூறியது. தற்போது, தொழிலதிபர் சிவசங்கரன், சி.பி.ஐ., முன் ஆஜராகி மத்திய அமைச்சர் தயாநிதிக்கு எதிராக சில தகவல்கள் கூறியிருப்பதாலும், அதன் மூலம், தயாநிதி, சன், "டிவி'க்கு சலுகை காட்டினார் என்று குறிப்பிட்டிருப்பதாலும், தயாநிதியிடம் விசாரணை நடத்துவது முன்னுரிமை பெற்றதாக கருதப்படுகிறது.



விரைவில் அவரிடம் விசாரணையை துவங்க, ஜே.பி.சி., முடிவு செய்துள்ளது. "2 ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, 85 சாட்சிகளும் விசாரிக்கப்படவுள்ளனர் என்று சாக்கோ தெரிவித்தார். மேலும், சிறையில் உள்ள ராஜாவை வரவழைத்து, விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அமைச்சர் தயாநிதி, டில்லியில் தங்கியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், நேற்று முன்தினம், பிரதமர் மன்மோகன் சிங், தன் நீண்ட மவுனத்தைக் கலைத்து "தயாநிதி மீதான புகார் குறித்து சட்ட அமலாக்க அமைப்புகள் தன் பணிகளை உரிய முறையில் நிறைவேற்றும்' என குறிப்பிட்டார்.



இந்நிலையில் தயாநிதியும் தன் நிலையை உரிய அமைப்பிடம் விளக்கத் தயார் என கூறியுள்ளார். ஆகவே, "2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணைக்கு அவரை அழைத்தாலோ அல்லது ஜே.பி.சி., முன் விசாரணைக்குச் செல்ல வேண்டிய நாள் குறித்து முடிவானாலோ, அதற்குப் பின், அவர் மத்திய அமைச்சராக செயல்படுவது சிரமமாகும்.ஆகவே, இந்த நெருக்கடியான நிலையை அவர் சந்திக்கும் முன், தன் ஜவுளித்துறை பதவியை ராஜினாமா செய்ய வேண்டி வரும். இதனால், தயாநிதிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.அத்துடன், பிரதமர், அமைச்சர்கள் அனைவருக்கும் அனுப்பிய கடிதத்தில், சொத்து விவரம், உறவினர் நடத்தும் தொழில் உட்பட, பல தகவல்களைக் கேட்டு, நேற்று முன்தினம் கடிதம் அனுப்பியுள்ளார். இதையொட்டி, அவரது பதவி பறிக்கப்படலாம் என, டில்லி அரசியல் வட்டாரத்தில் அதிக பரபரப்பு எழுந்திருக்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...