Friday, June 10, 2011

வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! கனிமொழி, கருணாநிதி, காங்கிரஸ்! அப்புறம், கேடி பிரதர்ஸ்...?


எதிர்பார்த்தது போலவே,ஒரு வழியாக திமுகவின் உயர்நிலைக் குழு கூடி பத்துத் தீர்மானங்களை நிறைவேற்றி முடிந்திருக்கிறது. புலி வருது, புலிவருது என்று பலமுறை பரபரப்பைக் கிளப்பியவன் கதையைப் போலவே, திமுக உயர்மட்டக் குழு கூடி என்ன முடிவெடுக்கும் என்பதை முடிவெடுப்பவர்களுக்கு முன்னமேயே மற்றவர்கள் அறிந்து வைத்திருந்தது தான் மிகப்பெரிய சோகம்! கருணாநிதி, கதை-வசன கர்த்தாவாகப் பட்டையைக் கிளப்பியகாலம் எல்லாம் ஓய்ந்துபோய் நீண்ட காலமாகி விட்டது என்பதைஅவரைத் தவிர மற்ற எல்லோருமே தெரிந்து வைத்திருப்பது   திமுகவின் தற்போதைய பலவீனம்.  
இன்றைக்கு, கனிமொழி, சரத்குமார் சார்பில்  உச்சநீதிமன்றத்தில் எஸ் எல் பி, மேல் முறையீடு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அநேகமாகத் திங்கட் கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். ஜாமீன் கிடைக்குமா என்பது வேறு விஷயம்!.
வாக்காளர்களுக்கு நன்றி, ஈழத்தமிழர் விவகாரத்தில் அரசின் தீர்மானத்துக்கு  வரவேற்பு என்ற சாங்கியங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், உயர் மட்டக் குழுவில் திமுக அமைச்சர்கள் எவரும் மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேற மாட்டார்கள் (தயாநிதி மாறன் விவகாரம் தனி! அதை அவரே பார்த்துக் கொள்வாரென்று  தாத்தா ஏற்கெனெவே முடிவு சொல்லிவிட்டார்!) என்று ஆரம்பித்து, காங்கிரசுடன் உறவு சுமுகமாக இருக்கிறது என்று பூசி மெழுகி விட்டு, சிபிஐ கனிமொழி விவகாரத்தில் இரட்டைவேடம் போடுவதாகக் கண்டனம், 2G ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை சட்டபூர்வமாக எதிர்கொள்ளப்போவதாக அறிவிப்பு (வேறு வழி?) ஜெயலலிதா அதிரடியாக, திமுக அரசு தன்னுடைய சாதனைகளாகப் பீற்றிக் கொண்ட சில விஷயங்களை ரத்து செய்ததற்குக் கண்டனம் என்று சரமாரியாக எதிர்ப்பு, கண்டனங்கள் என்று தீர்மானங்களைப் போட்டு முடிந்திருக்கிறது.
இதற்குத்தான் இவ்வளவு பில்டப்பா என்று கேட்கிறீர்களா?

ஓவர் பில்டப்பிலேயே கவிழ்ந்துபோனதை, தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் வெறும் கட் அவுட் புலிகள் தான் நிஜப்புலிகள் இல்லை என்பதை கட்சியின் அடிமட்டத் தொண்டன் முதல் சாதாரண ஜனங்கள் வரைதெரிந்து வைத்திருப்பதை, தலைவர்கள் இன்னமும் புரிந்து கொள்ளாமல் இருப்பது இந்திய அரசியலில் இன்னொரு விசித்திரம்! 

ஜனங்கள் கொஞ்சநாள் பேசுவார்கள், அப்புறம் மறந்து போய் விடுவார்கள், அனுதாபப்பட்டு மறுபடி ஆட்சிக் கட்டிலிலும் அமர வைப்பார்கள் என்பதில் தலைவர்களுக்கு  இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை, ஜனங்கள் தான் புரிந்து கொண்டு "அசைக்க" வேண்டும்!!

இப்போதைக்கு, திமுக தலைவரின் மனைவி குடும்பமும், துணைவியின் குடும்பமும் ஒற்றுமையை மெயின்டைன் செய்கிறார்கள்! மருமகன் குடும்பம்? அவர்கள் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்வார்கள்! ஆக, தொண்டனை எவரும் பார்த்துக் கொள்ளப்போவதில்லை! அவ்வளவு தான்!

வலி, வேதனை, அவமானத்தை விழுங்கிக்கொண்டு ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டில் தொடர்வது என்று திமுக உயர்மட்டக் குழு முடிவெடுத்திருப்பதாக டைம்ஸ் நவ் தொலைகாட்சி செய்தி சொல்கிறது!


கூடாநட்பு கேடுதரும் என்று பேசியதற்குப் பதிலடியாக, காங்கிரஸ் சந்தேஷ் என்ற காங்கிரஸ் கட்சியின் மாத இதழில், திமுகவின் ஊழலால் தான் தோற்றோம் என்று சொல்லப்பட்டிருக்கிறதாம்! இப்படி ஒரு மாத இதழ் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் வருவதோ, அதில் இப்படியெல்லாம் பதிலடிகள் இருப்பதோ இங்கே எவருக்காவது தெரியுமா

உள்நாட்டில் சொதப்புவதுபோலவே  வெளியுறவு விவகாரங்களிலும் தொடர்ந்து சொதப்பிக் கொண்டிருப்பதும், உள்நாட்டுப் பாதுகாப்பு உட்பட எல்லாமே சீரழிந்து நிற்பதும் காங்கிரஸ் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் தருணங்கள் எல்லாவற்றிலும் பொதுவாகக் காணமுடிகிற ஒரு விஷயம். நேரு காலத்தில் இருந்து இந்திய வெளியுறவுக் கொள்கை என்பது எப்படி பலவீனமாக இருந்தது என்பதை, நேரு, சாஸ்திரி, தலைமைப்பண்பு என்ற தலைப்பில் இந்தப் பக்கங்களில் ஏற்கெனெவே நிறையப் பேசியிருக்கிறோம். 

ராணா வழக்கில் சிகாகோ நீதிமன்றம், மும்பை தாக்குதல் வழக்கில் ராணா குற்றமற்றவர் என்று விடுதலை செய்திருக்கிறது, வேறு இரண்டு குற்றச் சாட்டுக்களில் குற்றவாளி எனத் தீர்ப்பளித்திருப்பதால், முப்பதாண்டு சிறைவாசம் அனுபவிக்க வேண்டி இருக்கும். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி டிவிட்டரில் இது தொடர்பாக அனுப்பிய குறுஞ்செய்தி இன்றைக்கு இணையத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறது!
காங்கிரசுக்கு சொரணை என்பது சுட்டுப் போட்டாலும் வராது! தெரிந்ததுதானே என்கிறீர்களா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...