ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முந்தைய ஆட்சியில் நடைபெற்ற 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் ராசா, கனிமொழி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் பெயர் பரபரப்பாக அடிபடுகிறது. இச்சூழலில் ஏர்செல்லை தனக்கு வேண்டியவர்களுக்கு விற்க மாறன் சகோதரர்கள் கட்டாயப்படுத்தினர் என்று சி.பி.ஐயில் மாறனுக்கு எதிராக ஏர்செல்லின் முன்னாள் தலைவர் சிவசங்கரன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஏர்செல்லை நிறுவிய சிவசங்கரன் மலேசியாவைச் சார்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்றார். அது தொடர்பாகவும் 2 ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாகவும் சில சந்தேகங்களுக்கு விளக்கம் பெறுவதற்காக சி.பி.ஐ சிவசங்கரனை அழைத்திருந்தது. அதனடிப்படையில் சிவசங்கரன் புதுதில்லியின் அடையாளப்படுத்தப்படாத இடத்தில் வாக்குமூலம் அளித்ததாக சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சிவா குழுமத்தை நடத்தி வரும் சிவசங்கரன் தொலைதொடர்பு, கட்டுமானம், ஷிப்பிங், மின்சாரம் மற்றும் கணினி கல்வி போன்றவற்றில் முதலீடு செய்துள்ளார். ஏர்செல்லில் தனக்குள்ள பங்கை மலேசியாவைச் சார்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்கச் சொல்லி தயாநிதி மாறன் கட்டாயப்படுத்தியதாகவும், அதை தான் மறுத்து விட்டதாகவும் தெரிவித்தார்.
பின் வேண்டுமென்றே ஏர்செல் நிறுவனத்துக்கு உரிமம் வழங்காமல் தயாநிதி மாறன் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த போது இழுத்தடித்ததால் வேறு வழியின்றி மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல்லை விற்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார் சிவசங்கரன். மேக்ஸிஸ் நிறுவனர் மாறன் சகோதரர்களுக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment