Friday, September 9, 2011

அழகிரி, மனைவி, மகனுக்கு கலெக்டர் உத்தரவு: நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் 16ம் தேதி விசாரணை

 மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, சிவரக்கோட்டையில் கண்மாயை ஆக்கிரமித்து, தயா இன்ஜினியரிங் கல்லூரி கட்டப்பட்டுவருவதாகக் கூறி, மத்திய அமைச்சர் அழகிரி, அவரது மனைவி காந்தி, மகன் தயாநிதியை செப்., 16ல் ஆஜராகும்படி கலெக்டர் சகாயம், சம்மன் அனுப்பியுள்ளார்.
மதுரை மாவட்டம் சிவரக்கோட்டையை சேர்ந்தவர் ராமலிங்கம்; மாவட்ட விவசாயிகள் நலச் சங்க செயலாளர். இவர், மதுரை கலெக்டர் சகாயத்திடம் அளித்த மனு: சிவரக்கோட்டையில், 365 ஏக்கர் நன்செய் நிலம் உள்ளது. சிவரக்கோட்டை கரிசல்குளம் கண்மாய் நீரிலிருந்து இருபோக விவசாயம் நடக்கிறது. இக்கண்மாய், 113.32 எக்டேர் பரப்பில், 5 மடைகள் அடங்கியது. தெற்கே கமண்டல நதி உள்ளது. இதற்கும், கண்மாய்க்கும் இடையே, 15.285 பரப்பளவு நிலத்தை மத்திய அமைச்சர் அழகிரி, அவரது மனைவி, 2008 அக்., 3ல் வாங்கியுள்ளனர். கல்லூரியின் வடக்கே உள்ள, என் தங்கை குணசுந்தரியின் நிலத்தை வாங்க முயன்றனர். நாங்கள் மறுத்ததால் அச்சுறுத்தலுக்கு ஆளானோம். கண்மாயிலிருந்து விளைநிலங்களுக்கு தண்ணீர் பாயும் 5 மதகுகளில், கல்லூரிக்காக, பின்புறம் உள்ள மதகை அடைத்து விட்டனர். கண்மாய் உள்ளே கால்வாய் போன்று வெட்டி, மண்ணை அள்ளியுள்ளனர். அம்மண்ணால் கரையை உயர்த்தி, மேற்கு பக்க மதகை, கால்வாய் ஆழத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

கண்மாய் ஓரத்தில் தற்போது வெட்டப்பட்டுள்ள கால்வாயால், கண்மாயில் தேங்கும் சிறிதளவு தண்ணீர் கூட அம்மதகின் வழியாக, தேசிய நெடுஞ்சாலைக்கு மறுபுறம் கொண்டு செல்லப்பட்டு, வேறு ஒரு வாய்க்கால் மூலம் கமண்டல ஆற்றில் சேருமாறு அமைக்கப்பட்டுள்ளது. இதனால், கண்மாயில் தண்ணீர் பெருக வழியில்லை. கல்லூரி முன்பு உள்ள நெடுஞ்சாலைக்கு சொந்தமான நிலங்கள், நீர் வழிப்பாதை ஆகியவை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், மழைக்காலங்களில் கண்மாய்க்கு செல்லும் நீர் தடைபட்டுள்ளது. வயல்களில் தேங்கும் நீர், வடிகால் வழியாக ஆற்றில் வெட்டிவிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. கண்மாயில் வடிந்து கமண்டல ஆற்றுக்குச் செல்லும் வாய்க்கால் மறிக்கப்பட்டு, கல்லூரி கட்டப்பட்டுள்ளது. கமண்டல ஆற்றில் நீர் பெருக்கெடுக்கும் போது அந்த நீர், கண்மாயை அடைய முடியாதபடி, ஆற்றை மறித்து காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டுள்ளது. கமண்டல ஆறு, கண்மாயை ஆக்கிரமித்து மதில் சுவர் கட்டியுள்ளனர்.

கிராமத்தினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விவசாயத்தை முற்றிலும் முடக்கும் வகையில், நீர் ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மூடப்பட்டுள்ள சிவரக்கோட்டை கரிசல்குளம் கண்மாய் மடையை மீண்டும் திறக்க வேண்டும். கண்மாய் நீர் பெருகும் வகையில், தற்போது அமைத்துள்ள கால்வாய் போன்ற அமைப்பை மாற்றி, முறையாக தூர்வார வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கமண்டல ஆறு, கண்மாய், நீர் வழிப்பாதையை மீட்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கலெக்டர் சகாயம் மற்றும் அதிகாரிகள், அந்த மனுவில் குறிப்பிட்ட இடத்தை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், விசாரணைக்காக செப்., 16ல் நேரில் ஆஜராகுமாறு அழகிரி, அவர் மகன் தயாநிதி, மனைவி காந்தி ஆகியோருக்கு, கலெக்டர் சம்மன் அனுப்பியுள்ளார். மூவரும், வரும் 16ம் தேதி ஆஜராவரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாத்மாவின் வார்த்தைகளை பயன்படுத்தி சம்மன்: கலெக்டர் சகாயம் அனுப்பிய சம்மனில், தயா இன்ஜினியரிங் கல்லூரி, விவசாய நிலத்தில் உள்ளதால் ஏற்படும் பாதிப்பை பற்றி கூறும்போது, "மகாத்மா காந்தியின்' வார்த்தைகளை கோடிட்டு காட்டியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: "தேச தந்தை மகாத்மா காந்தி, "இந்தியா, கிராமங்களில்தான் வாழ்கிறது. விவசாயிகள்தான் நாட்டின் முதுகெலும்பாக திகழ்கிறார்கள்' என்று கூறியிருக்கிறார். ஆனால் இந்த விஷயத்தில், வளமான சாகுபடி நடந்து வரும் நிலத்தின் மத்தியில், இன்ஜினியரிங் கல்லூரி அமைந்துள்ளது. இதன்விளைவு, இது வணிக வளாகம் நடக்கும் இடமாக மாறும் நிலை ஏற்படும். இதனால், விவசாயத்தை விட்டுவிட்டு விவசாயிகள் வெளியேறும் நிலை வரும். இவ்வாறு விவசாய நிலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மாறி வரும்போது, உணவின் தேவைக்கும், உற்பத்திக்கும் பெரும் இடைவெளியை ஏற்படுத்தி, பெரும் பாதிப்பை உருவாக்கும். இவ்வாறு கலெக்டர் சகாயம் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...