மக்களிடம் பெரும்எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, அரசு "கேபிள் டிவி' சேவை இன்று (02-09-2011) துவக்கப்படுகிறது. தற்போதுள்ள இணைப்புகளிலேயே, அரசு கேபிள் இணைப்பில் உள்ள "டிவி' சேனல்களை பார்க்க முடியும். முதல்வர் ஜெயலலிதா, "வீடியோ கான்பரன்சிங்' மூலம் இன்று துவக்கி வைக்கிறார்.
முந்தைய ஆட்சியில், அரசு "கேபிள் டிவி' நிறுவனம், ஆளுங்கட்சியினரின் திடீர் தலையீடு காரணமாக, வெறும் 432 இணைப்புகளாக குறைக்கப்பட்டது. பின், அந்த நிறுவனமே முடக்கப்பட்டது. இந்நிலையில், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததால், அரசு "கேபிள் டிவி' நிறுவனத்துக்கு புத்துயிர் ஊட்டப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கேபிள் கார்ப்பரேஷனுக்கு தனியாக தலைவரும், நிர்வாக இயக்குனராக ஐ.ஏ.எஸ்., அதிகாரியும் நியமிக்கப்பட்டனர். ஏற்கனவே, தஞ்சை, நெல்லை, கோவை மற்றும் வேலூரில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் தலைமுனைகள், பராமரிப்பு செய்யப்பட்டன.
மீதமுள்ள மாவட்டங்களிலும், "கேபிள் டிவி' சேவையை துவங்கும் வகையில், உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஓ.,க்கள், அரசு "கேபிள் டிவி'யில் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், 40 ஆயிரம் கேபிள் ஆபரேட்டர்கள் உள்ளனர். இவர்களில், 34 ஆயிரத்து 344 ஆபரேட்டர்கள், அரசு "கேபிள் டிவி' நிறுவனத்தில் இணைந்துள்ளனர். இவர்களிடம், ஒரு கோடியே 45 லட்சம் இணைப்புகள் உள்ளன.
அரசு கேபிள் மூலம், கட்டணச் சேனல்கள் உட்பட 90 சேனல்கள் ஒளிபரப்பப்பட உள்ளன. முதலில் இலவச சேனல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. கேபிள்ஆபரேட்டர்கள் மூலம், சந்தாதாரர்களிடம் மாதச் சந்தாவாக ஒரு இணைப்புக்கு 70 ரூபாய், கேபிள் ஆபரேட்டர்களால் வசூலிக்கப்படும். இதில், ஒரு இணைப்புக்கு 20 ரூபாயை, கேபிள் ஆபரேட்டர்களிடமிருந்து அரசு "கேபிள் டிவி' நிறுவனம் வசூலிக்கும். எனவே, சென்னை தவிர மற்ற மாவட்டங்களில், அரசு "கேபிள் டிவி' இணைப்புகள் இன்று முதல் 24 மணிநேர தடையற்ற ஒளிபரப்பு சேவையை வழங்க உள்ளன.
இதற்கான துவக்க நிகழ்ச்சி, தலைமைச் செயலகத்தில் இன்று நடக்கிறது. அரசு கேபிள் ஒளிபரப்பை, முதல்வர் ஜெயலலிதா இன்று பகல் 12.10 மணிக்கு, வீடியோ கான்பரன்சிங் முறையில் துவக்கி வைக்கிறார். அதே நேரத்தில், வேலூர் மையத்திலும் விழா நடக்கிறது. அதில், அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். சேவையை துவக்கி வைத்து, சென்னையில் முதல்வர் ஜெயலலிதா பேசுகிறார். இதைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் உள்ள கேபிள் ஆபரேட்டர்கள், தங்களது சந்தாதாரர்களுக்கு, ஒளிபரப்பை வழங்குகின்றனர்.
அதேபோல, மற்ற மாவட்டங்களிலும் கேபிள் சேவையை அந்தந்த ஆபரேட்டர்கள் வழங்குகின்றனர். கட்டண சேனல்களாக உள்ள, "சன் டிவி, ராஜ் டிவி, விஜய் டிவி, டிஸ்கவரி தமிழ்' போன்ற சேனல்கள் முதலில் இடம்பெறாது. இலவச சேனல்கள் மட்டுமே இன்று ஒளி பரப்பப்படும். கட்டணச் சேனல்களின் கட்டணத்தை முடிவு செய்த பின், அவற்றின் ஒளிபரப்பு வழங்கப்படும். மேலும், உள்ளூர்சேனல்கள் இதனால் சற்று சுதந்திரமாக முறையான வரன்முறைகளுடன் ஒளிபரப்பாகும் சூழ்நிலை ஏற்படும்.அரசு "கேபிள் டிவி' செயலாக்கம் பல்வேறு மாவட்டங்களிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால், வரவேற்பு அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் நன்றாக முறைப்படுத்தி சரியான முறையில் வழிவகைச்செய்தால் தமிழகத்தில் நல்ல வரவேற்ப்பு கிடைக்கும்... தனிப்பட்ட டிவிக்களின் வருமானம் இதன் மூலம் நிறுத்தப்படும்.
No comments:
Post a Comment