Tuesday, September 27, 2011

"ஆவீன மழை பொழிய......."

 
ன் டிவியின் தலைமை நிர்வாக அதிகாரி ஸாக்ஸேனா கைது செய்யப்பட்டதை அந்த டிவியின் செய்திகளில் மிகப்பெரும் அநீதியாகவும் பழிவாங்கும் நடவடிக்கையாகவும் சித்திரிப்பது நகைப்பை வரவழைக்கின்றது. ஸாக்ஸேனா மீது 420(மோசடி), 406(கையாடல்), 385(மிரட்டல்), 506(2)(கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. நாட்டு நடப்பை உற்று நோக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு இது அநீதியாகவோ பழிவாங்கும் நடவடிக்கையாகவோ தெரியாது.

மேலும் ஜெயலலிதா அரசு பழிவாங்குவதாகச் சொல்லும் அளவுக்கு சன் டிவி நிர்வாக அதிகாரி அரசியல்வாதியோ அல்லது ஜெயலலிதா எப்பொழுதும் எதிரியாகவே பார்க்கும் திமுக தலைவர்களுள் ஒருவரோ அல்லர். ஸாக்ஸேனா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாகக் காவல்துறை சொல்கின்றது. அவர் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்ததும் திரைப்படத் துறையினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர் என்ற செய்தி, திரைத்துறையினரை சன் டிவி மற்றும் சன் பிக்சர்ஸ் குழுவினர் எப்படி நடத்தினர் என்பதற்குச் சான்று.

இன்றுதான் என்றில்லை. சன் டிவி முன்பிருந்தே இந்த அராஜகத்தைக் கையாண்டே வந்துள்ளது. தங்கள் டிவிக்குப் புதிய படங்களைக் குறைந்த விலைக்கு உரிமை கோருவது, அப்படித் தர ஒப்புக்கொள்ளாத தயாரிப்பாளர்களின் படங்களை 'டாப்டென்' தர வரிசை என்ற பெயரில் மிகக் கேவலமாக விமர்சித்துக் கடைசி வரிசைக்குத் தள்ளுவது போன்ற திமிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது. இந்தத் திமிருக்குக் காரணம் மத்தியிலோ மாநிலத்திலோ அமைச்சர்களாக திமுகவினர் - குறிப்பாக முரசொலி மாறனும் கருணாநிதியும் இருந்ததுதான். அதிகார மமதையில் ஆட்டம் போட்டவர்கள் இன்று "அநீதி அக்கிரமம்" எனக்கூச்சல் போடுவது அபத்தம்.

திமுக ஆட்சியில் இருக்கிறது என்ற திமிரில் ஸாக்ஸேனாவின் ரவுடிப்பட்டாளம் சென்னையில் செக்கர்ஸ் ஹோட்டலிலும் ஒரு அப்பாவிப் பெண்மணியின் வீட்டிலும் நடத்திய அராஜகம் அன்றே புலனாய்வு இதழ்களில் வெளியானதுதான். இப்போதும் தம்மைக் கைது செய்ய முனைந்த காவல் துறையினரிடமும் பழைய நினைப்பிலேயே பேசியுள்ளார் ஸாக்ஸேனா.

காவல்துறை நடவடிக்கை ஸாக்ஸேனாவுடன் நிற்காது. கலாநிதி மாறனும் உள்ளே போவது உறுதி. திரைப்படத் தயாரிப்பாளர்களை மிரட்டியது, மோசடி செய்தது போன்ற குற்றங்களுக்காக மாநிலக் காவல்துறையும் சிவசங்கரனை மிரட்டி ஏர்செல் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவன அதிபர் அனந்த கிருஷ்ணனுக்கு விற்றதால் சன் டிவி குழுமத்தின் சன் டிடிஎச் நிறுவனத்தில் அவர் ரூ. 600 கோடி முதலீடு செய்துள்ள வழக்கில் மத்தியப் புலனாய்வுத் துறையும் கலாநிதியைக் கைது செய்யும். மேலும் சன் எப்.எம் இல் ரூ. 100 கோடி வரை மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்துள்ளதையும் விசாரித்தால் கலாநிதி தப்புவது கடினமே.

"குடைநிழல் அமர்ந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடை மெலிந்து ஓரூர் நண்ணினும் நண்ணுவர்........."
"ஆற்றங்கரை மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே ...." என்றெல்லாம் சின்ன வகுப்பில் பள்ளியில் படித்த நீதி வெண்பாக்கள் நினைவுக்கு வருகின்றன.

இதையெல்லாம் கருணாநிதி தம் வாழ்நாளிலேயே காண நேர்ந்தது அவரது விதி என்றே சொல்லவேண்டும். லட்சக்கணக்கான தொண்டர்களின் வியர்வையிலும் உழைப்பிலும் கிடைத்த நிதியில் கட்டப்பட்ட கட்சிச் சொத்தை அடகு வைத்துத் துவங்கப்பட்ட சன் டிவி, பேரன்களின் அராஜகத்தால் முடங்கப் போவதை அவர் பார்க்கப் போகிறார். தாம் ஆட்சியை இழந்த உடன் 'ஜெ டிவி' முடக்கப்பட்டதை மறவாத ஜெயலலிதாவும் சன் டிவியின் முடக்கத்தை எதிர்பார்த்துள்ளார்.


ஆட்சியை இழந்து, மனைவி மீது குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டு, பாசமகள் சிறையிலடைக்கப் பட்டு, அணுக்கத் தொண்டன் அமைச்சர் பதவியிழந்து சிறையில் வாட, பேரனும் அமைச்சர் பதவியிழந்து அடுத்ததாகச் சிறைக்குப் போக இருக்கும் சூழ்நிலையில் கருணாநிதியைப் பார்த்தால்
ஆவீன மழைபொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாக
மாவீரம் போகுதென்று விதைகொண் டோட
வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்றத்
தள்ளவொணா விருந்துவர சர்ப்பந் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
குருக்கள்வந்து தட்சணைகள் கொடு என்றாரே!


எனும் பாடல் நினைவுக்கு வருகிறது; இன்றைய நிலையில் அது அவருக்குப் பொருத்தமாகவும் அமைகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...