Monday, September 26, 2011

இப்போ கனிமொழி! அப்புறம் சோனியாவா?


அங்குசம் மிக மிகச் சின்னது தான்!ஆனாலும் கூட ஒரு பெரிய யானையையே அடக்கி மண்டிபோட வைத்துவிடுகிற வலிமை அங்குசத்திற்கு இருக்கிறது.அதே மாதிரித் தான், சில தனிநபர்களும்! அவர்களை எவ்வளவு எள்ளி நகையாடினாலும், முட்டைகளை வீசி எதிர்ப்புக் கோஷங்கள் எழுப்பினாலும், எள்ளல், வெறுப்புக் கலந்த பிரசாரத்துக்கு உட்படுத்தப் பட்டாலும் கூட, அதெல்லாம் அவர்களைக் கண்டு எழும் அச்சத்தினால் தான் என்பது வெள்ளிடைமலை.
டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி!

பெயரைச்சொல்லும்போதே, இன்னதென்று சொல்ல முடியாத உணர்வை ஏற்படுத்தக் கூடியவர்.தமிழக அரசியல் வாதிகளால், வெறும் கோமாளியாகவும், எதிலும் எப்போதும் சேர்த்துக் கொள்ளப்படக் கூடாத, முடியாத ஒரு சக்தியாகவும் சித்தரிக்கப் பட்டவர். எப்படி ஒரு சிறிய அங்குசம், பெரிய யானையை மண்டியிட வைத்துக் கொண்டு இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு முன்னால், இன்றைய தினமணி நாளிதழில் திரு எஸ் குருமூர்த்தி, ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சிந்தனையைத் தூண்டுகிற,  ஒரு செய்திக் கட்டுரையை எழுதி இருக்கிறார்! அதைக் கொஞ்சம் பார்த்துவிடலாம்.


நாட்டு மக்கள் அனைவரும் சொல்லிவிட்டார்கள், இத்தோடு போதும் என்று; அப்போதுதான் யாரும் எதிர்பாராதது நடக்கிறது. யாராலும் நெருங்க முடியாதவர்கள் என்று கருதப் பட்டவர்கள், தீண்ட முடியாதவர்கள் என்று நினைக்கப்பட்டவர்கள் நீதித்துறையின் நெடிய கரங்களில் சிக்க ஆரம்பிக்கின்றனர்.

அப்படி இப்போது சிக்கியிருக்கும் மிகப்பெரிய விலாங்கு மீனாக இருப்பவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி. ஃபோர்பஸ் பத்திரிகையில் வந்துள்ள கட்டுரைப்படி பார்த்தால் உலகிலேயே மிகவும் செல்வாக்கான மனிதர்கள் வரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருப்பவர்.

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருப்பவர் என்று அவரை யார் சொல்வது? சுப்பிரமணியன் சுவாமியா? நானா? இல்லை. அப்படிச் சொல்வது கிளியோ பாஸ்கல்.

ஹஃபிங்டன் போஸ்ட் செய்தி இணையதளத்தில் எழுதுகிறவர்தான் இந்த கிளியோ பாஸ்கல். அவர்தான் கூறுகிறார் சோனியா காந்தி மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது என்று.  ""உலகின் செல்வாக்கான மனிதர்கள் வரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருப்பவர் மீதுதான் ஊழல் குற்றச்சாட்டு கூறப்படுகிறது - அவர் வீழ்ச்சி அடைவாரா?'' என்று!

 ஹஃபிங்டன் போஸ்டில் 2011 ஏப்ரல் 25-ம் தேதி அவர் இதை எழுதியிருக்கிறார்.  யார் இந்த கிளியோ பாஸ்கல்?

சிறந்த பத்திரிகையாளருக்கான விருதுகளைப் பெற்றவர். லண்டனில் உள்ள சர்வதேச விவகாரங்களுக்கான ராயல் கழகத்தில் அவர் உறுப்பினர். அமெரிக்க வெளியுறவுத்துறையில் கெüரவமிக்க உறுப்பினர்.
அமெரிக்க எரிசக்தித்துறை, அமெரிக்க ராணுவக் கல்லூரி, பிரிட்டிஷ் ராணுவத்துறை, பிரிட்டிஷ் வெளியுறவு, காமன்வெல்த் அலுவலகம், பிரிட்டிஷ் ராணுவ அகாதெமி, ஐரோப்பிய யூனியன், நேடோ, பாதுகாப்பு - ஒத்துழைப்புக்கான ஐரோப்பிய அமைப்பின் ஆலோசகர்.

ஹஃபிங்டன் போஸ்ட் செய்தி இணையதளம் உலகிலேயே 3-வது இடத்தில் இருக்கிறது. 3 கோடியே 80 லட்சம் பேரால் படிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அதைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 50 கோடி. 2005-ல் தொடங்கப்பட்ட இந்தச் செய்தி இணைய தளம் உடனடியாக உலக அளவில் புகழ்பெற்றுவிட்டது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏ.ஓ.எல். என்ற நிறுவனம் ரூ.1,450 கோடி கொடுத்து இந்த இணையதளத்தை வாங்கியிருக்கிறது.

2008-ம் ஆண்டு இந்த இணையதளத்தைத்தான் உலகின் மிகச்சிறந்த செய்தி இணையதளமாக லண்டனிலிருந்து வெளிவரும் "தி அப்சர்வர்' மதிப்பிட்டிருக்கிறது.

கிளியோ பாஸ்கல் யார், அவர் எழுதும் ஹஃபிங்டன் போஸ்ட் இணைய தள செய்திப் பத்திரிகை எத்தகையது என்று பார்த்தோம். சோனியா காந்தி குறித்து அவர் என்ன எழுதியிருக்கிறார் என்று இனி பார்ப்போம்.

"கணவருக்கு அடங்கிய, குடும்ப பாரத்தை விரும்பிச் சுமக்கிற இந்திய மருமகளாக, இப்போது கணவரை இழந்த பெண்ணாகத் திகழ்கிறார்.
சந்தேகிக்கத்தக்க சில வர்த்தக நடவடிக்கைகள் மூலம் சோனியா காந்தியுடைய, அவருடைய குடும்பத்தாருடைய சொத்துகளின் மதிப்பு பல மடங்காக உயர்ந்து வருவது குறித்து ஆங்காங்கே முணு முணுப்புகள், புருவ நெறிப்புகள், கேள்விக்கணைகள் எழுந்துள்ளன.

1995-ம் ஆண்டிலேயே எம்.டி. நளப்பாட் என்கிற பத்திரிகையாளர் "தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளேட்டில் சோனியா காந்தி குறித்து திடுக்கிடவைக்கும் சில கட்டுரைகளை எழுதினார்.

எதுவுமே தெரியாத சாதாரண குடும்பப் பெண் போல அவர் காட்சி தருவதெல்லாம் வெறும் வெளிவேஷம், அவருக்குள் தீவிரமான அரசியல் அபிலாஷைகள் இருக்கின்றன என்று அப்போதே அவர் எழுதினார். பின்னாளில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை சோனியா ஏற்றபோது நளப்பாட் எழுதியது வெறும் வார்த்தைகள் அல்ல என்று நிரூபணம் ஆயின.

காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றதற்குக் காரணம் தன்னுடைய கணவரின் தாய் நாடு வளம் பெற்று முன்னேற வேண்டும் என்ற பொதுநல நோக்கு அல்ல என்பது அவருடைய தனிப்பட்ட சொத்தும், அவருடைய குடும்பத்தாருடைய சொத்துமதிப்பும் ராஜீவ் காந்தி பிரதமராகப் பதவியேற்ற பிறகு1984- லிருந்து கற்பனைக்கு எட்டாத வேகத்தில் அதிகரித்தபோது நிரூபணம் ஆயின.

நளப்பாட் எழுதிய அரசியல் கட்டுரைகளில் யாரும் குறை சொல்ல முடியாதபடி இருந்தாலும் 1998-ல் பத்திரிகைத் தொழிலைவிட்டே நளப்பாட் விலக நேர்ந்தது. சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரானார்.

போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் சுவீடன் நாட்டின் அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த ஸ்டென் லிண்ட்ஸ்ட்ராம் நடத்திய விசாரணை அடிப்படையில் எழுந்த பல அடிப்படையான கேள்விகளை பாஸ்கல் தொட்டுக்காட்டுகிறார். போஃபர்ஸ் பீரங்கி பேரத்துக்குப் பிறகு ஆட்டோவியோ குவாத்ரோச்சியின் நிறுவனங்களுக்கு எப்படிப் பெரும் தொகை கிடைத்தது என்பதை காந்திகள் - அதிலும் குறிப்பாக சோனியா காந்தி - விளக்க வேண்டும் என்று கேட்கிறார்.

சோனியா காந்தி குடும்பத்தாருக்கும் குவாத்ரோச்சிக்கும் என்ன உறவு என்று கேட்கிறார் லிண்ட்ஸ்ட்ராம். குவாத்ரோச்சியையும் அவருடைய ஏ.இ. சர்வீசஸ் என்ற நிறுவனத்தையும் போஃபர்ஸ் பீரங்கி பேர நிறுவனத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தது யார் என்றும் லிண்ட்ஸ்ட்ராம் கேட்கிறார்.

இதிலிருந்து ஒரு விஷயம் நிச்சயமாகத் தெரிகிறது. பீரங்கி பேர கமிஷனின் ஒரு பகுதி குவாத்ரோச்சிகளுக்குக் கிடைத்திருக்கிறது. அதற்குக் காரணம் சோனியா காந்தி என்று எல்லா ஆவணங்களும் சுட்டுகின்றன என்று லிண்ட்ஸ்ட்ராம் கூறுகிறார்.

அர்த்தமுள்ள இந்தக் கேள்விகளுக்கு சோனியா காந்தி இதுவரை பதில் அளிக்கவில்லை; அது மட்டும் அல்ல, இந்த விவகாரத்தில் கமிஷன் வாங்கியது குவாத்ரோச்சிதான் என்பது சந்தேகம் அறத் தெரிந்துவிட்ட போதிலும் அவரால் இந்தியாவில் வழக்கைச் சந்திக்காமல் தப்பிக்க முடிகிறது. மேலும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால் முடக்கிவைக்கப்பட்ட அவருடைய வங்கிக் கணக்கையும் திறக்க உத்தரவிடப்பட்டு அவர் கணக்கில் இருந்த பணத்தையும் அவரால் எடுத்துக்கொள்ள முடிந்திருக்கிறது.

ஆனால் சோனியா காந்திக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இப்போது பிரதமரின் மேஜை மேலே காத்துக் கொண்டிருக்கிறது. ஊழலுக்காக சோனியா காந்தி மீது வழக்குத் தொடர பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒப்புதலைக் கேட்டு சுப்பிரமணியன் சுவாமி அளித்திருக்கும் மனுதான் அந்த அச்சுறுத்தல்.

சுப்பிரமணியன் சுவாமி அளித்திருப்பது வெறும் அனுமதி கோரும் கடிதம் அல்ல; மிகவும் நுணுக்கமாகத் தகவல்களைச் சேகரித்து ஆராய்ந்து எழுதப்பட்ட 200 பக்கங்களுக்கும் மேற்பட்ட ஆவணங்களைக் கொண்டது அந்தக் கடிதம். 1972 முதல் இந்தியாவில் நடந்த ஊழல்களில் சோனியா காந்திக்கு உள்ள பங்குகள் எவை என்று தோலுரித்துக் காட்டும் ஆவணங்கள் அவை.

1986-ல் போஃபர்ஸ் பீரங்கி பேர விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் சோனியா காந்தி அடைந்ததாகக் கருதப்படும் பணப் பயன்கள் பற்றிய தகவல்களும் அதில் உள்ளன.

1991-ம் ஆண்டு முதல் பல நூறு கோடி ரூபாய்கள் இந்தியாவைச் சேராத வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தபோது உணவுக்குப் பதில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் என்ற திட்டத்தின் கீழ் இராக்கிலிருந்து கச்சா பெட்ரோலிய எண்ணெயை வாங்கி விற்ற விதத்தில் சோனியா காந்தி கோடிக்கணக்கான ரூபாய்களைச் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் பனிப்போர் நடந்த காலத்தில் ரஷியாவின் கே.ஜி.பி. என்ற உளவு அமைப்பு மூலம் பணம் பெற்ற தகவல்களும் கிடைத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

பிரதமரின் மேஜை மீதுள்ள புகார் மனுவை பாஸ்கல் வெகு கவனமாகப் படித்துப் பார்த்திருக்கிறார். இந்த மனுவை ஏற்கவோ, நிராகரிக்கவோ பிரதமருக்கு 3 மாதங்கள் அவகாசம் உள்ளது. அதன் பிறகு அவரிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் போனால் உச்ச நீதிமன்றத்தை அணுகி அதனிடம் அனுமதி பெற சுவாமிக்கு உரிமை இருக்கிறது.

 உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இப்போது இருக்கும் எஸ்.கே. கபாடியா இந்த மாதிரி வழக்குகளை உடனுக்குடன் அனுமதித்து விடுவார். உலக அரங்கில் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் முக்கியத்துவத்தின் பின்னணியில் பார்க்கும்போது, சோனியா மீது வழக்குத் தொடர சுவாமி அனுமதி கோரியிருப்பது வெறும் இந்திய அரசியல் விவகாரம் இல்லை, உலகில் ஊழல் ஒழிய வேண்டும் என்று நினைக்கும் அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விவகாரம் என்று முடித்திருக்கிறார் பாஸ்கல். சோனியா காந்தி மீதான ஊழல் புகாருக்கு சர்வதேசத் தன்மை இருக்கிறது என்கிறார் பாஸ்கல்.

இந்தியாவில் நடப்பவற்றை இப்போது நாம் பார்ப்போம். இந்தியாவில் உள்ள பத்திரிகைகளும் செய்தி ஊடகங்களும் சோனியா காந்தியின் பின்னணி பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக மறைக்கவே பார்க்கின்றன. சோனியா காந்தியின் ஊழல்குறித்து பாஸ்கல் எழுதுவது என்னவென்றே இந்தியர்களுக்குப் புரிவதில்லை. சோனியா பதவியை விரும்பாத தன்னலமற்ற தலைவி என்றும், ஊழலுக்கு எதிரான தேவதை என்றும்தான் இந்தியர்களில் பலர் பார்க்கின்றனர். அதனால்தான் ஊழலை என்னால் சகித்துக் கொள்ளவே முடியாது என்று பெரிய நேர்மையாளரைப் போல அவரால் வேஷம் போட முடிகிறது.

அவர் உண்மையிலேயே நேர்மையானவர்தானா என்று ஆராய்வதற்குப் பதிலாக, ஊழலை ஒழிப்பதில் அவர் கொண்டுள்ள உறுதியைப் பாராட்டி மகிழ்கிறது. இந்தியர்கள் பேராசை பிடித்தவர்களாகி விட்டார்கள், அவர்களுடைய தார்மிக உலகு சுருங்கிவிட்டது என்று அவர் இந்தியர்களையே வசை பாடுகிறார், "", சோனியா எப்படி வெளிப்படையாகப் பேசிவிட்டார்'' என்று அகமகிழ்கின்றன இந்திய செய்தி ஊடகங்கள்!.

ஊழல் ஒழிப்புச் சட்டம் தேவை என்ற கோரிக்கை நிறைவேறும்வரை உண்ணாவிரதம் என்று அறிவித்த காந்தியவாதி அண்ணா ஹசாரேவுக்குத் தனது ஆதரவு உண்டு என்று சோனியா அறிவித்தவுடன், அவரே அகமகிழ்ந்து சோனியாவுக்கு நன்றி தெரிவிக்கிறார், பாராட்டுகிறார்.

சோனியா அத்தோடு சும்மா இருக்கவில்லை, அண்ணா ஹசா ரேவின் ஆதரவாளர்களான சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண் ஆகியோர் என்ன யோக்கியமா, அவர்களுடைய வண்டவாளங்கள் தெரியாதா, அவர்களை வைத்துக்கொண்டு ஊழலை ஒழிக்கச் சட்டத் தயாரிப்பா என்று கபில் சிபல்கள், திக்விஜய் சிங்குகள், திவாரிகளை விட்டு வசைமாரிப் பொழிய கண்ஜாடை காட்டிவிட்டார்.

சோனியா பாராட்டும்போது அவருடைய தொண்டரடிப்பொடிகளால் எப்படி அண்ணா ஹசா ரேவின் ஆதரவாளர்களைத் திட்டித் தீர்க்க முடிகிறது என்று பத்திரிகைகள் கேள்வி கேட்கவில்லை.

அவ்வளவு ஏன், இந்தியாவின் பிரபல பத்திரிகைகளும் தொலைக் காட்சி ஊடகங்களும் சுப்பிரமணியன் சுவாமி மிகுந்த முயற்சி எடுத்துத் தயாரித்துள்ள 200 பக்கங்களுக்கும் மேற்பட்ட அந்த முக்கிய ஊழல் புகார் குறித்து சிறிதளவுகூட செய்தி வெளியிடவில்லை.

கிளியோ பாஸ்கல் எழுதிய கட்டுரைக்கு நன்றி தெரிவித்து இந்திய வாசகர் எழுதிய கடிதத்துக்குப் பிறகே இது பலரின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டது.இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம்--:

ஊழல் விவகாரங்களில் சிக்கி, சந்தேகத்துக்கு உரியவராகத் திகழும் சோனியா காந்தி, ஊழலை ஒழிக்க வந்த தேவதையாக இந்தியப் பத்திரிகைகளால் சித்திரிக்கப்படுகிறார்.


அப்பா பொது நல வழக்கு என்று தொடருவார். மகன் உள்ளே புகுந்து, அதில் இருந்து எப்படி விடுபடுவது என்று சொல்லித்தருகிறேன் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பை அணுகுவார் என்று சாந்தி பூஷன்-பிரசாந்த் பூஷன்களைப் பற்றிக் கூட சமீபத்தில் சில திரித்துச் சொல்லப்பட்ட செய்திகள் வந்தன. எது எப்படியோ, ஸ்பெக்ட்ரம் ஊழலாகட்டும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடந்த ஊழலாகட்டும், டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி, மற்றும் சாந்திபூஷன் தொடுத்த வழக்குகளின் அடிப்படையிலேயே, யானை மாதிரி மதம் பிடித்துத்திரிந்த ஊழல் அரசியல்வாதிகள், நீதிமன்றத்தின் கண்காணிப்பில் மண்டியிட்டு நிற்கிற மாதிரி ஆயிற்று என்பது தான் உண்மை!

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு ஆ.ராசாவை மட்டும் பலிகடாவாக ஆக்கியதோடு நின்றுவிடாமல், அதில் சம்பந்தப்பட்ட பெருந் தலைகளையும் குடும்பத்தோடு இப்போதுதான் தொட ஆரம்பித்து இருக்கிறது. 

ஊழல் கூட்டணி தர்மத்தில், போபார்ஸ் வழக்கு ஆரம்பித்து எதிலும் சிக்காமல் உத்தம அன்னையாக சித்தரிக்கப்படும் சோனியாவையும் நீதியின் கரங்கள் தொடுகிற காலம் இப்போது தான் முதன்முதலாக நெருங்கி வந்திருக்கிறது.

அங்குசங்கள் சிறியவைதான்! மதம் பிடித்து அலைகிற யானைகளை மண்டியிடச் செய்ய அங்குசங்கள் வேண்டும்! வரவேற்போம்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...