Tuesday, September 13, 2011

அண்ணன் அழகிரியே பயந்து, பேமிலியை ஃபாரின் அனுப்பும்போது…

முன்பெல்லாம், சொத்து யாருக்கு என்கிற இழுபறிகள் இருந்து வந்த மு.க. குடும்பத்தில், இப்போது சொத்து விவகாரங்களை எல்லாம் கடந்து, கட்சி யாருக்கு என்ற கட்டத்துக்குச் சென்று விட்டது மோதல்! நேரடி மோதலில் கனிமொழி கிடையாது, ஸ்டாலினும், அழகிரியுமே பிரதான போட்டியாளர்கள்.
தற்போது கட்சிக்குச் சோதனை ஏற்பட்டுள்ள நிலையில், கட்சியை யார் சுற்றி வருகிறார்களோ, அவருக்கே மாம்பழம் என்ற கட்டம் வந்துவிட்டது. இதனால், கட்சிக்குள் தமது செல்வாக்கை அதிகரிக்க போட்டியில் இறங்கிவிட்டனர், அண்ணன், தம்பி இருவரும். இவர்கள் இருவருடைய உள்வீட்டு அடிதடியில், திணறத் தொடங்கியுள்ளது கட்சி.
“தி.மு.க. என்பது, லட்சக் கணக்கான தொண்டர்களின் கட்சி” என்ற கூற்று எல்லாம் காலாவதியாகி நாளாகின்றது. தி.மு.க.,  மு.க. குடும்பத்தின் தனிப்பட்ட சொத்து என்பது முடிவாகி ரொம்ப நாளாகிறது.  பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு நடைபெறவில்லையே தவிர,  ‘தலைவரின் வாரிசுகளுக்குத்தான் கட்சி’  என்ற தனிப்பட்ட சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் கேஸ் வந்துவிட்டது.
ஆனால், சொத்து எந்தவொரு வாரிசுக்கும், piece of cake போல சுலபமாகக் கிட்டப் போவதில்லை. தி.மு.க. என்ற ஒரு பெரிய சொத்துக்காக, குடும்பமே பிரிந்து போகலாம்.
கோவையில் நடைபெற்ற தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டத்தில் தனக்குத் தலைவர் பதவி தரப்படும் என்று நினைத்தார் ஸ்டாலின். அது நடக்கவில்லை. நடக்காமல் போனதற்கு, அழகிரிதான் முக்கிய காரணம் என்பதில் ஸ்டாலினுக்கு எந்தச் சந்தேகமும் கிடையாது.
இதனால், சொத்து தனக்குக் கிடைக்க, தடையாக உள்ள அழகிரியை கட்சியில் இருந்து தனிமைப்படுத்தும் வேலைகளைத் தொடங்கி விட்டார் ஸ்டாலின். அதையும் சாதுரியமாகவே செய்கிறார் அவர்.
அழகிரி கட்சி நடாத்தும் ஸ்டைலுக்கும், ஸ்டாலினின் ஸ்டைலுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. அழகிரியின் அரசியல் தனது சொந்த ஆதரவாளர்கள் என்ற அடிப்படையில் செய்யப்படுவது. ஸ்டாலின் செய்ய முயல்வது, கட்சியில் மா.செ.கள் முதல் சாதாரண தொண்டர்கள்வரை தனக்குப் பின்னே வருமாறு திட்டமிடுவது.
இதைத்தான் இப்போது செய்யத் தொடங்கியுள்ளார் அவர்.
நிலமோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் தி.மு.க.வினரை தொடர்ச்சியாக சந்தித்து வருகிறார் ஸ்டாலின். வீரபாண்டி ஆறுமுகம், ஜெ.அன்பழகன் உட்பட கோவை சிறையில் உள்ளவர்களைச் சந்தித்த ஸ்டாலின், அடுத்து, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆட்களையும் விசிட் அடித்துவிட்டு வந்திருக்கிறார்.
அதைத் தவிர, தினமும் ஏதாவது ஒரு மூலையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறார். தினமும் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக ஏதாவது ஒன்றைக் கூறி, அது பத்திரிகைகளிலும் பரபரப்பாக வருமாறு செய்து விடுகிறார். (உதாரணமாக, 2016ல் தி.மு.க. ஆட்சி! உலகில் 125 முறை வாய்தா வாங்கிய ஒரேயொரு ஆள் ஜெயலலிதா)
சுருக்கமாகச் சொன்னால் தி.மு.க. தொண்டர்களின் கண்களையும் காதுகளையும், தினம் ஒரு தடவையாவது தொட்டு விடுகிறார் ஸ்டாலின்.
“ஏம்பா.. நமக்கு மிஞ்சியது கறுப்பு கண்ணாடி மாத்திரமா?”
ஆனால், அஞ்சா நெஞ்சர் அழகிரியின் அப்ரோச் அதுவல்ல.
தனது அதி தீவிர ஆதரவாளர்களை மாத்திரமே ஜெயிலில் சென்று பார்த்தார் அவர். ஆர்ப்பாட்டக் கூட்டங்கள் தமிழகத்தில் நடக்கும் நேரங்களில் இவர் இருப்பது டில்லியில். அரசியல் தொடர்பான பேச்சுக்களோ, அறிக்கைகளோ இவரிடமிருந்து வெளியாவதில்லை. தன்னைத் தனிப்பட்ட முறையில் யாராவது தாக்கினால், அதற்கு மாத்திரமே பதில் கூறுகிறார்.
இப்படியான நிலையில், கட்சியில் ஸ்டாலினின் கையே ஓங்கியுள்ளது. ஒரு காலத்தில் அழகிரியின் கட்டுப்பாட்டில் முழுமையாக இருந்த மதுரைக்கு ஸ்டாலின் வருவதென்றால், ஒருமுறைக்கு இருமுறையாக யோசிக்க வேண்டிய நிலை இருந்தது. மதுரை உடன்பிறப்புகள், “அண்ணன் (அழகிரி) பாஸ்போர்ட் குடுத்தாத்தான் தளபதியே மதுரைக்குள்ள வரமுடியும்” என்றுதான் கமெண்ட் அடித்துக் கொண்டிருந்தார்கள்.
இப்போது விசா கொடுக்க வேண்டிய அண்ணனே மதுரைக்குள் நுழையவதற்கு போலீஸிடம் விசா எடுக்க வேண்டியுள்ளது!
சமீபத்தில் மதுரை விமான நிலையம் வந்து இறங்கிய ஸ்டாலினுக்கு, லோக்கல் தி.மு.க.வினர் பெரிய அளவில் வரவேற்பு அளித்தனர். அதில் கலந்து கொண்ட பலர், அழகிரியின் முன்னாள் விசுவாசிகள்! அழகிரியின் கோட்டை என்று சொல்லப்பட்ட மதுரையில் ஸ்டாலினுக்கு இதற்கு முன்பு இப்படி ஒரு வரவேற்பு கிடைத்ததில்லை.
போலீஸாரின் அடுத்த குறி அஞ்சா நெஞ்சன்தான் என்பது தெளிவாகத் தெரிந்திருப்பதால், அ.நெ.வின் ஆதரவாளர்களாகக் காட்டிக் கொள்ளவே மதுரையில் பல உடன் பிறப்புகள் தயாராக இல்லை. அண்ணனின் நிலைமை அதைவிட மோசம். சொந்த ஊரில் தைரியமாக வசிக்கவோ, ஆதரவாளர்களுக்கு ஆறுதல் சொல்லவோ முடியாத நிலை அவருக்கு.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்காக டெல்லி போய் பதுங்கிக் கொண்டிருக்கிறார். குறைந்தபட்சம் சனி, ஞாயிறுகளில் கூட மதுரைப் பக்கம் திரும்பிப் பார்ப்பது இல்லை.
அண்ணனின் இந்தப் பதுங்கலை தம்பி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்.
தென் மாவட்டங்களுக்கு ஸ்டாலின் வரும் போதெல்லாம், தி.மு.க.வின் தென்மாவட்ட தூண்கள் அனைவரும் அங்கே ஆஜர்! கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, ஆவுடையப்பன், சாத்தூர் ராமச்சந்திரன், மைதீன்கான், ஏ.கே.எஸ்.விஜயன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கருப்பசாமி பாண்டியன், மாலைராஜா, கீதா ஜீவன், பூங்கோதை… என்று பட்டியல் பெரியது!
இன்றைய தேதியில் அழகிரி மதுரை வந்திறங்கினால், அவரை வரவேற்க எத்தனை முக்கியஸ்தர்கள் நேரில் வருவார்கள் என்பது, மிகப் பெரிய கேள்விக்குறி!
இங்குள்ள மற்றொரு முக்கிய விவகாரம் என்ன தெரியுமா? அழகிரி தனது மனைவியைத் தவிர மொத்த குடும்பத்தையும் நாட்டை விட்டே வெளியே அனுப்பி விட்டார் என்ற கதை வெளியானபோது, மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் பலர், ஆஃப் ஆகிவிட்டார்கள். “அண்ணணே பயந்து போயி குடும்பத்தை பாரின் அனுப்பும்போது,  நாம எம்மாத்திரம்?”
அது சரி.  அழகிரி குடும்பம் வெளிநாடு போன கதை எப்படி ஊடகங்களுக்குத் தெரிய வந்தது என்று நினைக்கிறீர்கள்?
நாம் கேள்விப்பட்டவரை, இந்த ஸ்கூப்பை குறிப்பிட்ட சில ஊடகங்களுக்கு கொடுத்ததே, ஸ்டாலினின் நெருங்கிய ஸோர்ஸ் ஒன்றுதான்!  What happens when something boils?
-மதுரையிலிருந்து அதிபன் தங்கராசு, சென்னையிலிருந்து அசோகன் ஆகியோரின் குறிப்புகளுடன் 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...