கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச பரவாயில்லை என வி.புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், தன்னிடம் தெரிவித்ததாக நாம் தமிழர்
கட்சித்தலைவர் சீமான் தெரிவித்தார்.
2008 இல், இறுதிக்கட்ட யுத்தம் ஆரம்பமாவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக வே.பிரபாகன் இவ்வாறு கூறியதாகவும், 'ஏன் அண்ணா இப்படி கூறுகிறீர்கள்?' என தான் கேட்டதற்கு, 'ராஜபக்ஷேயாவது இன உணர்வுடன் நடந்து கொள்கிறார்!' என மன வேதனையுடன் மு.கருணாநிதி பற்றி தனது உள்ளக்குமுறலை வெளிப்படுத்தியிருந்தார் எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கும் மரணதண்டனையை ரத்து செய்யும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டுவந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது, “மு.கருணாநிதி ஈழப்படுகொலையைத் தடுத்து நிறுத்தத் தவறியது மட்டுமல்லாமல் ஈழத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட உச்சக்கட்ட கொடுமைகளை வெளி உலகுக்குக் கொண்டு சேர்க்கவும் தவறிவிட்டார். மேலும் பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகனை ஏன் இன்னும் தூக்கில் போடவில்லை என்று 7 முறை மத்திய அரசாங்கத்துக்கு நினைவூட்டல் கடிதங்களும் எழுதியிருக்கிறார்.
மறக்க முடியுமா என்று கேள்வி கேட்டு ராஜீவ் காந்தி யுடன் மரணமடைந்த மற்றவர்களின் குடும்பத்திருக்கு நீதி வழங்க வேண்டும் என்று கேட்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு “21 வருடங்களாக அவர்கள் மீது வராத அக்கறை திடீரென்று இப்பொழுது வந்தது ஏன்..? மேலும் தமிழகத்துக்கு வருகை புரிந்த காங்கிரஸ் கட்சியின் தேசியத்தலைவர், நேருவின் வாரிசு, முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியை அந்தக் கூட்டத்தில் தனியே விட்டு விட்டு குண்டு வெடித்த பிறகு வந்து பிணத்தை அடையாளம் காட்ட வந்தார்களே அது ஏன்…? ராஜிவ் காந்தியுடன் மடிந்த 11 பேரும் அப்பாவி மனிதர்களும் காவலர்களும் தான்… ஏன் அங்கே ஒரு காங்கிரஸ் தலைவனும் இல்லை..? அப்படியானால் முன் கூட்டியே அவர்களுக்கு எல்லாமே தெரிந்திருக்கிறதா…? மனித வெடிகுண்டாகச் செயல்பட்ட தனுவை காரில் அழைத்து வந்ததே அந்தத் தொகுதியின் வேட்பாளரும் மரகதம் சந்திரசேகரனின் மகன் தானே..?
இப்படிப் பல்வேறு குழப்பங்களும் கேள்விகளும் இருக்கும் போது பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்கிற குற்றம் சாட்டி பேரறிவாளன் போன்றோரை தூக்கில் இடத்துடிப்பது ஏன்..? இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் இந்திய அளவில் தெரியவந்து, இலங்கையை பொறுத்தவரை இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்கிற விவாதம் கிளம்பியிருக்கும் வேளையில் ஒட்டு மொத்த மீடியாக்களையும் தமிழர்களையும் திசைதிருப்புவதற்காக அவசரவசரமாக செப் 9 அன்று தூக்குத்தண்டனையை நிறைவேற்ற காலக்கடு விதித்தது ஏன்..? ஜெ.ஜெயலலிதாவின் ஆட்சியில் அவர்களுக்குத் தூக்குத்தண்டனை நிறைவேற்றுவதன் மூலம் ஜெ.ஜெயலலிதாவின் ஆட்சிக்கு அவப்பெயர் உண்டுபண்ண வேண்டும் என்கிற கேவலமான திட்டம்தானே…? இந்த நிலையில் தமிழனத்தைக் காப்பாற்றும் சக்தியாக விளங்கிக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் அவர்கள் மூவருக்கும் எதிரான தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்கிற தீர்மானம் கொண்டு வந்தவுடன் வட இந்திய ஊடகங்கள் மற்றும் பல்வேறு தேசிய கட்சிகளும் ஜெ.ஜெயலலிதா அவர்களை எதிர்க்க ஆரம்பித்து விட்டன.
தமிழர்களாகிய நாம் அவருக்குப் பக்கபலமாக நின்று அவரது எல்லா முயற்சிகளுக்கும் தோள் கொடுக்க வேண்டும். ஏனென்றால் நாம் என்ன முழக்கமிட்டாலும் அவரது வாயில் இருந்து வரும் சொற்களுக்குத்தான் சக்தி இருக்கிறது. அவர்தான் அந்த மூவரையும் காப்பாற்றத் தகுதியானவர், தைரியமானவர்.
முன்னாள் முதல்வர்- தமிழனத்திற்குத் துரோகம் செய்த மு.கருணாநிதியால் தூக்குத்தண்டனை வழங்கலாம் என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்குத் தொடர்ந்து நினைவூட்டல் கடிதங்களும் எழுதி வந்ததிருக்கும் நிலையில் அதனைத் தெளிவாக சட்டமன்றத்தில் எடுத்துரைத்து அதனால் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய தமக்கு அதிகாரமில்லை என்று முதல் நாளில் அறிவித்தாலும் அன்று முழுவதும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து தாம் அப்படி அறிவித்து விட்டோமே அதனை மாற்ற வேண்டாம் என்று எண்ணாமல் அடுத்த நாளே தூக்குத்தண்டனையை ரத்து செய்யும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய நமது முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்குத் தமிழ் உள்ளளவும் நாங்கள் நன்றிக் கடன்பட்டிருப்போம். வரும் பாரளுமன்றத்தேர்தலில் 40 இடங்களையும் பெற்றுத்தரவேண்டியது எங்கள் கடமை.
இந்தியாவின் இறையாண்மை என்பது தமிழர்களுக்கு எதிரானது என்றால் அந்த இந்திய இறையாண்மைக்கு நாங்கள் எதிரிதான். மும்பை குண்டுவெடிப்புக்குத் தமிழன் உட்பட கண்டனம் தெரிவிக்கும் நிலையில் தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கொல்லப்படும் போது அதனை எல்லைதாண்டிய பயங்கரவாதம் என்று ஏன் மற்றவர்கள் கண்டனம் தெரிவிக்க வில்லை…? ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்று மூவரின் தூக்குத்தண்டனைக்குக் காரணம் சொல்கிறீர்களே… ராஜீவ் காந்தி ஏன் கொல்லப்பட்டிருப்பார் என்பதற்குக் காரணம் இருக்கிறது… ஆனால் ராஜீவ்காந்தி அனுப்பிய அமைதிப்படை 12500 தமிழர்களைக் கொன்று குவித்ததே அதற்குக் என்ன காரணம்..? தமிழ்ப்பெண்குழந்தைகளின் சட்டைக்குள் கையைவிட்டு மார்பகத்தைப் பிடித்து இது என்ன வெடிகுண்டா என்று கேட்டீர்களே அதற்கு என்ன காரணம் இருக்கிறது..? தேச பாதுகாப்புக்கு பீரங்கி வாங்கிட்டு வான்னா அதுல 400 கோடி லஞ்சமாகச் சம்பாதித்த ராஜீவ்காந்தி எப்படி நம் தேசத்திற்குச் சிறந்த தலைவனாக இருக்க முடியும்..?
ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்தது போதாதென்று பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகனைத் தூக்கில் போட்டு அதனை வெப்கேமராவில் பதிவு செய்து பார்த்து ரசிக்கத்திட்டமிருந்தவர்களின் வன்மத்தை எங்கேபோய் சொல்வது..? இன்று இதையெல்லாம் தட்டிக்கேட்கும் ஒரே தலைவராக எங்களது முதல்வர் இருக்கிறார். அவருக்கு நன்றி சொல்லாமல் வேறு யாருக்கு நன்றி சொல்லமுடியும்..? பாசத்தலைவனுக்கா பாராட்டு விழா நடத்திக் கொண்டிருக்கவேண்டும்… ஏ.வி.எம் குடும்பம் சினிமாவில் இல்லையா சிவாஜி குடும்பம் இல்லையா ரஜினி குடும்பம் இல்லையா என்று கேட்டாரே..! ஆமாய்யா அவர்கள் குடும்பங்கள் எல்லாம் சினிமாவில் இருந்தது இல்லைன்னு சொல்லல ஆனால் சினிமாவே உங்க குடும்பத்துல தானே இருந்துச்சு…வரும் உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.கவுக்கு ஓட்டுப்போடணும்னா கைதிகள்தான் வந்து ஓட்டுப்போடணும் அந்த அளவிற்கு தி.மு.க பிரமுகர்கள் எல்லாம் இன்று சிறைச்சாலைகளை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்…
தமிழன் தன்னிலை உணர்ந்து கொண்ட நேரம் வந்து விட்டது… தமிழன் தன் மொழிக்காகவும், இனத்திற்காகவும் உண்மையாகப் பாடுபடுபவர்களை இனங்கண்டு கொண்டான்… 12 கோடி உலகத் தமிழர்களுக்கு உரிமையினைப் பெற்றுதரும் குரலாக தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் குரல் உள்ளது. அவர் இன்று 12 கோடித்தமிழர்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்து விட்டார்… 21 வருடங்களாக அழுது கொண்டிருந்த ஒரு தமிழ்த்தாயை இன்று சிரிக்க வைத்திருக்கிறார்… கோடானுகோடி நன்றிகளை அவர்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம்” என்று பேசினார்.
கூட்டத்தில் பால் நியூமன், மணிவண்ணன், பேராசிரியர் தீரன், கல்யாணசுந்தரம், திலீபன், ஜெயசீலன், சோழன் நம்பி, அய்ய நாதன் கலைக்கோட்டுதயம் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். கிட்டத்தட்ட அனைவரின் உரைகளுமே காங்கிரஸ் , மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மு.கருணாநிதியினைச் சாடுவதாகவே இருந்தது. மேலும் மரணதண்டனை முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும் என்பதனை வலியுறுத்தியும் அனைவரும் பேசினார்கள்.
சுதந்திர இந்தியாவில் காங்கிரஸைக் கலைத்து விடவேண்டும் என்கிற மகாத்மா காந்தியின் ஆலோசனை பின்பற்றப்படாததன் விளைவு இன்று நாம் இக்கட்டான சூழ் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் என்கிற கருத்தினை அனைவரும் ஒருமனதாகப்பேசினார்கள்.
மூவரின் மரணதண்டனையை ரத்து செய்யக்கோரி தீக்குளித்து உயிர் நீத்த செங்கொடிக்கு வீரவணக்கம் செய்யப்பட்டது. மரணதண்டனைக்கு எதிரான கோஷங்களை நாம் தமிழக நிர்வாகிகள் எழுப்ப அந்தக் கூட்டத்தில் கூடியிருந்த ஏறத்தாள 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வழிமொழிந்தனர்.
No comments:
Post a Comment