Sunday, September 4, 2011

ஆசிரியர்களைத் தினம் கொண்டாடுவோம்!

ஆசிரியர் தினம் கொண்டாடியது போதும் – இனி
ஆசிரியர்களைத் தினம் கொண்டாடுவோம்!

அ எழுதச் சொல்லித்தந்தவர் ஆசிரியாராயினும் – அதை
அடி மனதில் பதியவைத்த அம்மாவும் ஆசிரியர்தான்!

மதிப்பெண் எடுக்கக் கற்றுத்தருபவர் ஆசிரியராயினும்
மதிப்போடு வாழச் சொல்லித்தரும் தந்தையும் ஆசிரியர்தான்!

அன்பு ஆழமானது என்று எடுத்துரைப்பவர் ஆசிரியராயினும்
அன்பின் ஆழத்தை உணர்த்தும் காதலியும் ஆசிரியர்தான்!

இன்பதுன்பங்களை அடையாளப்படுத்துபவர் ஆசிரியராயினும்
இன்பதுன்பங்களில் துணைநிற்கும் மனைவியும் ஆசிரியர்தான்!

சிரித்துவாழ வேண்டும் என்று பாடம் புகட்டுபவர் ஆசிரியராயினும்
சிரித்துக் கொண்டே இருக்கும் குழந்தையும் ஆசிரியர்தான்!

நட்பின் இலக்கணத்தை எடுத்தியம்பியவர் ஆசிரியராயினும்
நட்பின் இலக்கணமாய் திகழும் நண்பர்களும் ஆசிரியர்கள்தான்!

போராட்டம் என்றால் என்ன என்றுரைப்பவர் ஆசிரியராயினும்
போராட்டத்தை ஏற்படுத்தும் எதிரியும் ஆசிரியர்தான்!

இதுதான் ஒழுக்கம் என்றுரைப்பவர் ஆசிரியராயினும்
இதுதான் வாழ்க்கை என உணர்த்தும் யாவரும் ஆசிரியர்தான்!

நிலம், நீர், தீ, காற்று, வான்..
பறவைகள், விலங்குகள், தாவரங்கள் என நாம்

திரும்பிப்பார்க்க,
போலச்செய்ய,
தன்னம்பிக்கைகொள்ள,
தவறுகளைத் திருத்திக்கொள்ளத் துணைநிற்கும்,
இயற்கையின் ஒவ்வொரு கூறுகளும் கூட நமக்கு ஆசிரியர்தான்!


அதனால் இதுவரை.....
ஆசிரியர் தினம் கொண்டாடியது போதும் – இனி
ஆசிரியர்களைத் தினம் கொண்டாடுவோம்!

இன்றுமுதல்...
காலைக் கதிரவனுக்கும்,
புல்லின் பனித்துளிக்கும்,
பூத்துச் சிரிக்கும் மலருக்கும்,
துயிலெழுப்பும் பறவைகளுக்கும் காலை வணக்கம் சொல்வோம்!

விலங்குகளின் விவாதத்தையும்,
மழையின் சொற்பொழிவையும்,
காற்றின் கவிதையையும்,
செவிமடுத்துக் கேட்டு அவற்றிடம் வினாத் தொடுப்போம்!
தாவரங்களின் அழிவையும்,
மனிதனின் இழிவையும்,
இயற்கையின் பெருந்தன்மையையும்,
ஆராய்ந்து தேர்வு எழுதுவோம்!

இவ்வாறு நம்மைச்சுற்றிய மனிதர்களிடமும், இயற்கையின் கூறுகளிடமும் பாடம் கற்ற நாம் நம்மையே மதிப்பீடு செய்து பார்ப்போம்...

பாடம் பயிற்றுவோர் நமக்கு முழு நேர ஆசிரியர்கள்!
உறவுகள் நமக்கு வாழ்நாள் ஆசிரியர்கள்!
சமூகம் நமக்குப் பகுதிநேர ஆசிரியர்கள்!
நூலகங்கள் வாய் பேசாத ஆசிரியர்கள்!
பறவைகள் நம்மைப் பறக்கச் செய்த ஆசிரியர்கள்!
விலங்குகள் நம்மை மனிதனாக்கிய ஆசிரியர்கள்!
இயற்கையின் கூறுகள் நமக்கு என்றென்றும் ஆசிரியர்கள்! என்பது புரியும்.
இப்போது நமக்குத் தோன்றும்..
ஆசிரியர் தினம் கொண்டாடியது போதும் – இனி
ஆசிரியர்களைத் தினம் கொண்டாடுவோம்!
என்று!!

வாழ்க்கை என்னும் பள்ளியில் ஒவ்வொரு நாளும் ஓராயிரம் பாடங்களை தினம் கற்று வருகிறேன்,
21ஆண்டுகாலம் நான் வகுப்பறைகளில் கற்றதைவிட நூலகங்களில் கற்றவை அதிகம் - அதனால்

நூல்களும் எனக்கு ஆசிரியர்கள் தான்!
இத்தனை ஆண்டுகாலம் எத்தனையோ தேர்வுகள் எழுதியிருக்கிறேன் இருந்தாலும், மாணவர்களைப் போன்ற கேள்வித்தாள்களை நான் எங்கும் பார்த்ததில்லை – அதனால்
மாணவர்களும் எனக்கு ஆசிரியர்கள் தான்!

என்வாழ்வில் எத்தனை எத்தனை ஆசிரியர்கள்..!!!
எல்லோரும் உயர்ந்தவர்களே!
என்னை உயர்த்தியவர்களே!!

இருந்தாலும் இவர்களுள் மிக உயர்ந்த ஓர் ஆசிரியர் இருக்கிறார்...
ஆம் அவர்தான் “அனுபவம்“
அனுபவத்தைவிடப் மிகப் பெரிய ஆசிரியரை இதுவரை நான் கண்டதில்லை! இத்தனை ஆசிரியர்கள் இருந்தாலும், நான்
ஆசிரியர் தினம் கொண்டாடுவதில்லை....
ஆசிரியர்களைத் தினம் கொண்டாடுகிறேன்!

அப்ப நீங்க..??

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...