Wednesday, September 28, 2011

எம்.ஜி.ஆர்., தி.மு.க.,வில் சேர்ந்து வளர்ந்த வரலாறு........

வளர்ந்த வரலாறு........




நண்பர் செங்கோவி அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியை விட ஜெயலலிதாவை மக்கள் எம்.ஜி.ஆரின் வாரிசாக ஏற்றுக்கொண்டது ஏன்? என்ற கேள்வியை அனுப்பியிருந்தார். அந்த கேள்விக்கான பதிலை மூன்று பாகங்களாக வெளியிட்டிருந்தேன்.

அதை தொடர்ந்து அடுத்ததாக எம்.ஜி.ஆர்.,எப்போது தி.மு.க.,வில் இணைந்தார்? தி.மு.க.,வில் அவர் முக்கிய புள்ளியா? அல்லது லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனை(எஸ்.எஸ்.ஆர்) போல சாதாரண நபர்தானா? ஏன் அவரை கட்சியிலிருந்து நீக்கினார்கள்? என்று அதாவது எம்.ஜி.ஆர்., தி.மு.க.,வில் இணைந்தது முதல் விலகியது வரை உள்ள வரலாறை எழுதவும் என்று கேட்டிருந்தார். அதற்கான நீண்ட பதில்கள்தான் இது.......



 ம்.ஜி.ஆர்., ஆரம்பத்தில் காமராஜரின் தொண்டராகவும், காங்கிரஸின் அனுதாபியாகவும் தான் இருந்தார். மாடர்ன் தியேட்டர் படங்களுக்காகவும், ஜூபிடர் தியேட்டர் படங்களுக்காவும், கலைஞரும், எம்,ஜி.ஆரும் ஒன்றாக பணியாற்றியபோது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பின் காரணமாக தி.மு.க.,வை பற்றியும், அண்ணாவை பற்றியும் எம்.ஜி.ஆரிடம் எடுத்து சொன்ன கலைஞர், அவரை தி.மு.க.,வில் சேரும்படி வற்புத்தினார்.


அதே நேரம், ஏற்கனவே தி.மு.க.,வில் இருந்த லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மைத்துனர் நடிகர் டி.வி.நாராயணசாமி அவர்கள், அறிஞர் அண்ணாவின்  நாடகம் ஒன்றில் நடிப்பதற்காக எம்.ஜி.ஆரை அண்ணாவிடம் அழைத்து சென்று அறிமுகப்படுத்தினார். ஏற்கனவே எம்.ஜி.ஆர்., நடித்திருந்த படங்களை பார்த்திருந்த அண்ணா, அவரை வரவேற்று கனிவுடன் பேசினார். எவ்வளவு பெரிய தலைவர்?, எவ்வளவு எளிமையாக இருக்கிறார்? என்று அண்ணாவின் பண்பினால் கவரப்பட்ட எம்.ஜி.ஆர்., 1952-ஆம் ஆண்டு தி.மு.க.,வில் தன்னை இணைத்துக்கொண்டார்.


அப்படி எம்.ஜி.ஆர்., தி.மு.க.,வில் சேர்ந்தபோது, அக்கட்சியின் பிரச்சார பீரங்கியாக இருந்தவர் எம்.ஜி.ஆரை விட செல்வாக்குமிக்க கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள்.
எம்.ஜி.ஆருக்கு சிலகாலம் முன்பே அதாவது, பராசக்தி வெளிவரும் முன்பே நடிகர் திலகம் சிவாஜி அவர்களும் தி.மு.க.,வில் இணைந்திருந்தார்.
தி.மு.க.,வில் இணைந்த எம்.ஜி.ஆரை வைத்தே தி.மு.க., மாநாட்டு மேடைகளில் நாடகம் போடப்பட்டது.

1957- ஆம் ஆண்டு தி.மு.க., முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்டபோது எம்.ஜி.ஆர்., சில தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார். எம்.ஜி.ஆர்., தி.மு.க.,வில் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில் கலைவாணர் என்.எஸ்.கே மரணமடைந்தார். நடிகர் சிவாஜியும் திருப்பதி போய்வந்த சர்ச்சையில் சிக்கி தி.மு.க.,வை விட்டு வெளியேறி காங்கிரசில் இணைந்தார். தனக்கு தடையில்லாத காரணத்தால் அண்ணாவை இன்னும் நெருங்கினார் எம்.ஜி.ஆர்.,
நாடோடி மன்னன் எம்.ஜி.ஆரின் சொந்தப்படம். தனது சொந்த கம்பெனிக்கு ஆணும்,பெண்ணும் தி.மு.க., கொடியை பிடிப்பதுபோல் ஒரு சின்னத்தை உருவாக்கியிருந்தார் எம்.ஜி.ஆர்,. தொடர்ந்து தி.மு.க.,கொடியையும், உதயசூரியன் சின்னத்தையும் தன் படங்களில் காட்டியதன் மூலம், தன்னை ஒரு தீவிர தி.மு.க., அபிமானியாக காட்டி தி.மு.க., தொண்டர்களின் மனதில் இடம்பிடித்தார்.

நாடோடி மன்னன் வெற்றிவிழா நடந்தபோது அண்ணா கலந்துகொண்டு, “எம்.ஜி.ஆர். ஒரு வீரர்., விவேகம் நிரம்பிய தோழர். இந்தக்கனி தங்கள் மடியில் விழாதா என்று எல்லோரும் காத்திருந்தனர். ஆனால், இந்தக்கனி என் மடியில் விழுந்தது. நான் எடுத்து என் இதயத்தில் பத்திரப்படுத்திக்கொண்டேன்”,.என்று புகழாரம் சூட்டினார். அதன்பின் அண்ணாவின் இதயக்கனி ஆனார் எம்.ஜி.ஆர்.




1957- தேர்தலில் அதிகம் பிரச்சாரம் செய்யாத எம்.ஜி.ஆர்., 1962 தேர்தலில் தி.மு.க.,விற்காக மின்னல் வேக பிரச்சாரம் செய்தார். ஒரே நாளில் முப்பது பொதுக்கூட்டங்களுக்கு மேல் பேசினார். செல்லுமிடமெல்லாம் ரசிகர் பட்டாளம் கூடியது. அந்த தேர்தலில் தி.மு.க., ஐம்பது தொகுதிகளை கைப்பற்றியது. அதன் பின் எம்.ஜி.ஆரை சட்ட மேலவை உறுப்பினராக்கி(M.L.C.) கவுரவித்தார் அண்ணா.


அண்ணா மீதும், தி.மு.க.,வின் மீதும் இன்னும் ஈடுபாடு அதிகரித்தது எம்.ஜி.ஆருக்கு. காஞ்சித்தலைவன் என்று படமெடுத்து அண்ணா மீதுள்ள பக்தியை பறைசாற்றினார். எம்.ஜி.ஆரின் ரசிகர் மன்றங்கள் மிகப்பெரிய வளர்ச்சியடைந்தது அதன் பின் தான். எம்.ஜி.ஆரின் செல்வாக்கு இன்னும் வளர ஆரம்பித்தது. அந்த துணிச்சலில் தான் எம்.ஜி.ஆர். ஒரு காரியம் செய்தார். அதாவது....தனது எம்.எல்.சி பதவியை ராஜினாமா செய்து தி.மு.க.,வினரின் அதிருப்திக்கு ஆளானார். அந்த சம்பவத்தை தொடர்ந்து எம்.ஜி.ஆர்., நடிப்பில் வெளிவந்த என் கடமை திரைப்படம் தோல்வியை தழுவியது. தன் தவறை உணர்ந்த எம்.ஜி.ஆர்., சுதாரித்தார். அதனை தொடர்ந்து தி.மு.க.,வையும், அண்ணாவையும் மனதில் வைத்து மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்ற பாடலை தெய்வத்தாய் படத்தில் வைத்து தி.மு.க., வினரின் கோபத்தை தணித்தார்.

1967-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், முதன்முதலாக எம்.ஜி.ஆருக்கு போட்டியிட வாய்ப்பளித்தார் அண்ணா. அந்த தேர்தலில் பரங்கிமலை தொகுதியிலிருந்து போடியிட்டார் எம்.ஜி.ஆர்., அந்த சமயத்தில்தான் பெற்றால்தான் பிள்ளையா படப்பிரச்சினை மூலம்
எம்.ஆர்.ராதாவால் எம்.ஜி.ஆர்., சுடப்பட்டார். அதன் காரணமாக மருத்துவமனையில் இருந்ததால் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை அவர்.


ஆனால், எம்.ஜி.ஆர்., சுடப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் படம் தாங்கிய சுவரொட்டிகள் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டு மக்களை தி.மு.க.,வின் பக்கம் திருப்பியது.

அந்த தேர்தலில் தி.மு.க.,விற்கு அமோக வெற்றி. 138 இடங்களை பிடித்த தி.மு.க., முதன் முதலில் அரியனை ஏறியது. அதுவரை ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரசுக்கு 49 இடங்கள் மட்டுமே கிடைத்தது.

பரங்கிமலை தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்ட எம்.ஜி.ஆருக்கு 54,106 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரகுபதிக்கு 26,432 வாக்குகளும் கிடைத்தது. தி.மு.க., வின் வெற்றிக்கு எம்.ஜி.ஆரும் ஒரு காரணம் என்று அறிந்திருந்த அண்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரிடம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டு ஆள் அனுப்பினார்.. எனக்கு ஒன்றும் வேண்டாம் என்று மறுத்த எம்.ஜி.ஆர் ஒரு வினோதமான கோரிக்கையை துண்டு சீட்டில் எழுதி அதை அண்ணாவிற்கு கொடுத்துவிட்டார்.  அது............
 
இன்னும் வ(ள)ரும்

அடுத்து வர இருப்பது...... 
கலைஞர் முதல்வராக வர உதவிய எம்.ஜி.ஆர். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...