Tuesday, September 20, 2011

அணுமின் நிலையங்களால் ஆபத்தா?

இந்தியாவில் 1948ல் பாபா அணு ஆராய்ச்சி நிலையமும், 1969ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் தாராப்பூரிலும் தொடங்கப்பட்டது. இந்தியாவில் தற்போது ஏழு அணு உலைகள் கட்டுமான நிலையில் உள்ளன. யுரேனியம், புளூட்டோனியம் அணுக்களின் கருவில் உள்ள சக்தியே அணுசக்தி ஆகும். அணு உலைக்குள் அணு எரிபொருள் பிளவுறுதல் மூலம் வெப்பம் உருவாகிறது. இந்த வெப்பத்தின் மூலமே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.


பாபா அணு ஆராய்ச்சி நிலையம்

இந்தியாவில் 1947ல் மின்சார உற்பத்தி 1300 மெகாவாட்டாக இருந்தது. தற்போது ஒரு லட்சத்து 73 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. 2030ஆம் ஆண்டில் மின்சாரத்தின் தேவை 4 லட்சம் மெகாவாட்டாக இருக்கும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் அடிப்படை மின்சாரத்தை உற்பத்தி செய்ய அனல்மின் நிலையம், நீர்மின்நிலையம், காற்றாலை மின்சாரம், சூரியசக்தி மின்சாரம் ஆகியவற்றை நம்பியிருக்கிறோம்.

அணு உலைகளை பொறுத்தவரை, சுனாமி, கடல்சீற்றம், வெள்ளம், கனமழை, சூறாவளி, நில நடுக்கம், பயங்கரவாதத் தாக்குதல், தொழில்நுட்ப செயலிழப்பு, தீவிபத்து போன்றவற்றால் பாதிக்கப்படும் அபாயம் உண்டு. இதை கருத்தில் கொண்டுதான், அணு மின்நிலையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன.


கல்பாக்கம் அணுமின்நிலையம்

சென்னை கல்பாக்கம் அணுமின்நிலையம் இருந்த பகுதியில், 2004ல் சுனாமி தாக்குதல் ஏற்பட்டது. ஆனால், தானாக செயலிழக்கும் கருவிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் அணு உலைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இதேபோல், 1993ல் உத்திரப்பிரதேசம், நரோரா அணு மின்நிலையத்தில், ஏற்பட்ட கொதிகலன் தீவிபத்து, குஜராத் காக்ராபர் அணுமின் நிலையத்தில் 1994ல் வெள்ள பாதிப்பு போன்றவற்றால் கதிர்வீச்சு உள்ளிட்ட எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

அந்த அளவிற்கு இந்திய அணுமின் நிலையங்கள் மிக பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளன. அணுசக்தி பயன்பாட்டை பொறுத்தவரை இந்திய தொழில்நுட்பம் உலக அளவில், அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசுகளே பொறாமைப்படும் அளவுக்கு சிறப்பாக உள்ளது.

புகுஷிமாவால் பயந்த இந்தியா.

கடந்த மார்ச் மாதம், ஜப்பானில் புகுஷிமா அணுமின் உலை வெடித்து சிதறியதையடுத்து, உலகம் முழுவதும் அனைத்து அணு உலைகளுக்கும், கூடுதல் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ள, அனைத்து நாடுகளும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளன. இந்தியாவில் உள்ள 20 அணு மின் நிலையங்களில், இயக்கத்தில் உள்ள 18 நிலையங்களின் தன்மை குறித்து இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் (ஏ.இ.ஆர்.பி) ஆய்வு செய்யதது. 

இதில், பழமையான தாராப்பூர் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகியவை நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கலாம் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மற்றப்படி எந்த அணு உலைக்கும் பாதிப்பில்லை என்கிறது இந்த அமைப்பு. 


மேலும், இந்திய அணு உலைகள், கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்படும் பகுதியிலிருந்து, மேற்கு கடல் பகுதியில் 800 கிலோமீட்டர் தூரத்திலும், கிழக்கு கடல் பகுதியிலிருந்து, 1300 கிலோமீட்டர் தூரத்திலும், அமைந்துள்ளதால், சுனாமி அபாயம் இல்லை. எனவே, ஜப்பானை போன்ற நிலை இங்கு ஏற்படாது. ஆய்வு மதிப்பீடுகளை தாண்டி, இயற்கை பேரிடர் ஏற்பட்டால், சமாளிக்கக்கூடிய வகையில், அணு உலைகளின் கட்டடங்கள், அமைப்புகள், குளிர்விப்பான், வெப்பமூட்டும் கருவி, தொழில்நுட்ப கருவிகள் ஆகியவற்றை உயர்தரமான ஆய்வு செய்து அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கடலுக்கு அருகில் வைக்கப்படும் குளிர்விப்பான்களை பாதுகாக்க வேண்டும்.
இந்திய அணு உலைகள் ரிக்டர் அளவில், 6.7க்கும் மேல் நிலநடுக்கம் ஏற்பட்டால் தானாகவே செயலழிக்கும் வகையில் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. எந்த நிலையிலும், கதிர்வீச்சு வெளியேறாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடல் மட்டம் ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட அளவு உயர்ந்தால், நிலையம் தானாகவே செயலிழக்கும். இயற்கை பேரிடர் நேரத்தில் பேட்டரி மூலம் கண்காணித்து இயக்கும், நவீன தொழில்நுட்ப கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

அணு உலையை சுற்றி பொதுமக்களை பாதிக்காமல் இருப்பதற்கான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளன. இதுதவிர இந்தியாவில் நிலநடுக்க அபாயம் உள்ள எந்த பகுதியிலோ அல்லது அதனால் விளைவுகள் ஏற்படும் பகுதியிலோ இந்திய அணு மின் நிலையங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...